மறுசீரமைப்பு குழு.. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி சேர்ந்து எடுத்த முடிவு.. அறிவாலயத்தில் நடந்தது என்ன?
சென்னை: திமுகவின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கழக மறு சீரமைப்பு ஆலோசனைக்குழுவை அமைத்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். ஏற்கனவே தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிய கள ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கைகளும் தலைமையிடம் ஒப்படைக்கப்பட்ட சூழலில், அதன் மீது எந்த ஆக்சனும் இல்லாத நிலையில், தற்போது கழக சீரமைப்புக்குழுவா? ஆக்சன் எதுவும் இல்லாமல், குழுவைப் போடுவது மட்டுமே தீர்வாகிவிடுமா? என்கிற சலசலப்புகள் திமுக நிர்வாகிகளிடம் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன.
ஆனால், "இதுவெறும் கண் துடைப்பு அல்ல; கள ஆய்வு குழுவினர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் ஆக்சன் எடுக்கவே சீரமைப்புக் குழுவை அமைத்துள்ளார் ஸ்டாலின்" என்கிறார்கள் அறிவாலய உடன்பிறப்புகள். இதுகுறித்து விசாரித்தபோது, "வெளிநாட்டிலிருந்து உதயநிதி, சபரீசன், கனிமொழி ஆகியோர் சமீபத்தில் சென்னை திரும்பினர். தலைவர் ஸ்டாலினை அவர்கள் சந்தித்தனர். மூவரும் ஒருசேர ஸ்டாலினை சந்திப்பது அண்மைக்காலத்தில் இப்போதுதான் நடந்தது.

ஸ்டாலின் ஆலோசனை
ஸ்டாலினுடனான சந்திப்பில், தவெக அரசு குறித்து தங்களுக்கு கிடைத்த தகவல்களை ஸ்டாலினிடம் மூவரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது, திமுக கூட்டணிக் கட்சிகளை தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்க நாம் விரும்பியிருக்கக்கூடாது. நாம் விரும்பியதால்தானே, அவர்கள் வெளியில் இருந்து ஆதரிக்கவும், ஆட்சியில் பங்கெடுக்கவும் என்கிற நிலைப் பாட்டை எடுத்தனர். கவர்னர் ரூல் வந்தாலும் பரவாயில்லை, மீண்டும் தேர்தல் வந்தாலும் பரவாயில்லை என நாம் அமைதிகாத்திருக்க வேண்டும் என உதயநிதி சொல்லியிருக்கிறார்.
சமாதானம் செய்த ஸ்டாலின்
கவர்னர் ரூல்ங்கிறது பாஜக ரூல் மாதிரி. பாஜக ஆட்சி செய்வது போலத் தான். ஒருமுறை ஆட்சி அதிகாரத்திற்கு பாஜக வந்துவிட்டால் அப்புறம் அதனை அகற்ற முடியாதுன்னு நாம் மட்டுமல்ல, நம்முடைய கூட்டணி கட்சிகள் எல்லாமே பயந்தன. அதனால் தானே அவர்கள் வெளியில் இருந்து ஆதரிக்கலாம் என நம்மிடம் சொன்னபோது, அதனை ஏற்றோம். தடுக்க நினைக்கவில்லையே! என்ன ஒன்னு... இதில் காங்கிரஸ் மட்டும் தான் நம்மிடம் சொல்லாமலே தாவிப் போனார்கள் என ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்.
திமுக நிர்வாகிகள்
இதற்குபிறகு, திமுக பற்றி பேச்சு எழுந்தது. தேர்தல் தோல்விக்கு நம் கட்சியினரே நமக்கு எதிராகத்தான் வேலை செய்திருப்பதும், கூட்டணி கட்சி கள் எந்த நிலையிலும் நமக்கு ஒத்துழைக்காமல் தவெகவுக்கு ஓட்டுப் போட்டதும் தான் காரணம். கூட்டணி கட்சிகளை விட்டுவிடலாம். அவர்கள் துரோகம் செய்வதை காலம் காலமாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், திமுக நிர்வாகிகளே கட்சிக்கு துரோகம் செய்தது தான் ஜீரணிக்க முடியாத விசயம்.
உதயநிதி கொடுத்த ஐடியா
இதைப்பற்றி கள ஆய்வு குழு நமக்கு அறிக்கை தந்திருக்கிறது. அதன் மீது நடவடிக்கை எடுங்கள். தயவு தாட்சன்யமில்லாமல் நடவடிக்கை எடுத்தால் தான் தலைமை மீது அதிருப்தியில் உள்ளவர்களுக்கு நம்பிக்கை வரும். அந்த நடவடிக்கைத்தான் வரப்போகிற இடைத்தேர்தலில் பலனளிக்கும் என்று சபரீசன் சொல்லியிருக்கிறார். அப்போது உதயநிதி, தவறும் துரோகமும் செய்த சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு, இளைஞர்களை பொறுப்புக்கு கொண்டு வாருங்கள். GenZ தலைமுறைகள் உருவாகியுள்ள காலமாக இருக்கிறது.
ஒரே ஸ்டாண்டில் ஸ்டாலின், கனிமொழி
அவர்களை அரசியல்மயப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதனால், திமுகவின் அனைத்து நிலைகளிலும் இளைஞர்கள் பொறுப்பில் இருக்க வேண்டும். அதற்கேற்ப ஆக்சன் எடுங்கள் என சொல்லியுள்ளார். இதனை மறுக்கும் வகையில் ஸ்டாலின் பேச, அதனையொட்டி கருத்துச் சொன்ன கனிமொழி, கட்சியின் சீனியர்களை அப்படியே விட்டுவிட முடியாது. சீனியர்களின் அதிகாரம் குறைக்கப்பட்டால், அவர்கள் மாற்று அரசியலைத் தேடி செல்கிறார்களோ இல்லையோ அவர்களின் ஆதரவு நிர்வாகிகள் செல்லக் கூடும்.
திமுக மறுசீரமைப்பு
அதாவது, தங்களின் சீனியர்களுக்கு அதிகாரம் பறிப்போனால் நமக்கும் எந்த முக்கியத்துவம் இருக்கப் போவதில்லை என யோசித்து அவர்கள் மாற்று வழியை தேடுவார்கள். அதனால், சீனியர்களை புறக்கணிக்காமலும் அதேசமயம் இளைஞர்களை பயன்படுத்தும் வகையிலும் யோசித்தால் நல்லது என தெரிவித்திருக்கிறார். இந்த கருத்தில் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன் மூவருக்கும் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகே, கள ஆய்வு குழு தந்துள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளவைகளை கருத்தில் கொண்டு, கட்சியில் அனைத்து நிலை பொறுப்புகளிலும் என்ன மாதிரியான சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என ஒரு ஆய்வு நடத்தி மாற்றத்தை கட்சியில் கொண்டு வரலாம் என முடிவு செய்தனர்.
மறுசீரமைப்பு குழுவில் யார்?
அதன்படி அறிவிக்கப்பட்டதுதான் இந்த மறு சீரமைப்பு குழு என்று திமுகவின் உள் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன. திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ள திமுகவின் மறு சீரமைப்பு குழுவில் முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், சக்கரபாணி, எஸ்.எஸ். சிவசங்கர், தமிழரசி ரவிக்குமார், எம்.எம்.அப்துல்லா, பரந்தாமன், முரசொலி, டாக்டர் எழிலன், எஸ்.கே.பி. கருணா ஆகிய 10 இடம்பிடித்துள்ளனர்.
விரைவில் ஆக்ஷன்
இந்த குழுவினர், திமுகவின் மறுவரையறை அதாவது மா.செ.க்களின் எல்லைகளை பிரிப்பது, கட்சியின் அணிகளில் மறுசீரமைப்பு, கட்சியிலுள்ள பணிக் குழுக்களில் சீரமைப்பு, தேர்தல் பணிகளை செய்வதற்கான நிரந்தர அமைப்பு உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்து அறிக்கை தர உள்ளனர். "அந்த அறிக்கையின்படி , திமுகவில் பல மாற்றங்களை செய்ய தலைமை தீர்மானிக்கும். இந்த அறிக்கைக்கு பிறகு நிச்சயம் தலைவர் ஆக்சன் எடுப்பார்" என்றும் திமுக வட்டாரங்களில் நம்பிக்கைத் தெரிவிக்கிறார்கள்.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications