முருங்கை பிசின் போல.. இலை முதல் பூ வரை ஆச்சரியம் கருவேலம் மரம்.. பாலுணர்வு தூண்டும் கருவேலம் பிசின்
சென்னை: பல மரங்களிலிருந்து சுரக்கும் பிசின் வகைகள் எப்போதுமே சிறப்பு வாய்ந்தவை.. அந்த அளவுக்கு இவைகளில் மருத்துவ குணங்கள் ஒளிந்திருக்கின்றன.. அந்தவகையில், கருவேல மரத்தின் பிசின் மிக முக்கியமானவை.
முருங்கை பிசின் எந்த அளவுக்கு நன்மைகளை தருகிறதோ, அதுபோலவே, மருத்துவ பயன்கள் நிறைந்ததுதான் கருவேல மரத்தின் பிசின்.. முருங்கையை போலவே, இந்த கருவேல மரத்தில், பட்டை, பிசின், பூக்கள், காய்கள் என அனைத்துமே பயன்கள் கொண்டவை.

உயிரணுக்கள்: இந்த இலை, காய்கள், பட்டைகளில் இரும்பு சத்து, தாதுக்கள், வைட்டமின்கள், வாலைன், மெரோனின், லைசின் போன்ற அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.. உயிரணுக்களின் ஆற்றலை மேட்படுத்த இந்த சத்துக்கள் அனைத்துமே தேவையாகின்றன. இந்த மரத்தின் ஒவ்வொரு பாகங்களும், ஒவ்வொரு தனித்துவத்தை பெற்றிருக்கின்றன..
துளிர் இலைகளை, வயிற்றுப்போக்கு, சீதபேதிக்கு மருந்தாக பயன்படுத்துவார்கள்.. அதேபோல, இந்த கொழுந்து இலைகளை விழுதுபோல அரைத்து, புண்களின் மீது பூசிவந்தால், சீக்கிரத்தில் புண்கள் ஆறிவிடும். இதையே கசாயம் வைத்து குடித்தால், மலச்சிக்கல் தீரும். இலைகளை அரைத்து சாறு போல எடுத்து, தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் உடல்சூடு தீரும்..
பட்டைகள்: கருவேலம் பட்டைகளை எடுத்து கொண்டால், புற்றுநோய் முதல் பல்வலி வரை மருந்தாக பயன்படுத்துவார்கள்.. ரத்த பாதிப்புகளை சரி செய்ய இந்த பட்டைகள் உபயோகப்படுகின்றன.. பற்பொடி தயாரிப்புகளிலும் இந்த பட்டைகள் சேர்க்கப்படுகின்றன..
பட்டையை தூள் செய்து, தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தாலே, சுவாச கோளாறுகள் நீங்கிவிடும்.. தொண்டைப்புண்களும் ஆறும்.. இருமல் இருந்தாலும், இந்த மரத்தின் பூக்களை தூளாக்கி பனங்கற்கண்டுடன் வைத்து சாப்பிடுவார்கள்.
இந்த மரத்தின் பிசின், சர்க்கரை நோய்க்கு மிகவும் சிறந்தது என்கிறார்கள். கணையத்தில் இருந்து இன்சுலின் சுரத்தலை ஊக்குவிப்பதுடன், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது. அதேபோல, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், தண்ணீருடன் இந்த பிசினையும் கலந்து தருவார்கள்..
முருங்கை பிசின்: தீப்புண்கள், கொப்புளங்கள் ஏற்பட்டுவிட்டால், முட்டையின் வெள்ளைக்கருவுடன், இந்த பிசினையும் குழைத்து பூசினால் நிவாரணம் கிடைக்கும்.. முருங்கை பிசினை போலவே, பால் உணர்வு தூண்டுவியாக இந்த பிசின் பயன்படுகிறது.. உடல்சோர்வை நீக்குகிறது இந்த பிசின்.. இந்த பிசினை காயவைத்து, தூள் செய்து, அதை நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தாலே உயிரணுக்கள் ஆற்றம் பெறும்.
அச்சுத்தொழிலிலும் இந்த பிசின் பயன்படுகிறது. முன்பெல்லாம் கிழிந்த புத்தகங்களை ஒட்ட, இந்த பிசினைதான் பயன்படுத்துவார்களாம்.. அதாவது, பிசினில் சிறிது தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து பார்த்தால், தைலம் போல மாறியிருக்குமாம். இதை வைத்துதான்,தாள்கள், அட்டைகளை அன்றைய காலங்களில் ஒட்டி வந்துள்ளனர்..
பாகங்கள்: கருவேல பிசினில் கிளைக்கோ புரோட்டீன் மற்றும் பாலி சாக்கரைடு போன்ற சேர்மங்களால் ஆனது. உணவுத் தொழிற்சாலையில் உணவின் தரத்தை சீராக வைத்திருக்க இந்த பிசின் பயன்படுகிறது...
அழகு சாதனப் பொருட்கள், இனிப்பு வகைகளை தயாரிக்க இந்த பிசினி பயன்படுகிறது. எனினும், இந்த மரத்தின் பாகங்களை மருந்தாக உட்கொள்ள நேர்ந்தால், மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று, அதன்பிறகு பயன்படுத்துவதே பாதுகாப்பானது.












Click it and Unblock the Notifications