"Thiruma Ji How Are You"..திருமா மீது அமித்ஷா திடீர் பாசம்! தமிழில் பேசிய அமைச்சர்.. பிளான் இதுதான்?
சென்னை: தமிழகத்தில் பாஜகவை கடுமையாக எதிர்த்து வருபவர் விசிக தலைவர் திருமாவளவன். இந்நிலையில் தான் திடீரென்று நேற்று காலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போன் போட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமிழில் வாழ்த்து கூறியுள்ளார். அஸ்வினி வைஷ்ணவ் - திருமாவளவன் இடையே நல்ல நட்பு உள்ள நிலையில் அமித்ஷா திடீரென்று போன் போட்டு வாழ்த்து கூறியதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்களை இங்கு பார்க்கலாம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் நேற்றைய தினம் திடீரென்று காலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டவர்கள் திருமாவளவனுக்கு போன் போட்டு பேசியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

நேற்றைய தினம் காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் இதுபற்றி திருமாவளவன் பேசினார். அப்போது அவர்கள் என்ன சொன்னார்கள்? போன்காலின் பின்னணி பற்றி திருமாவளவன் கூறியதாவது.
''8.30 மணிக்கு (நேற்று காலை) டெல்லியில் இருந்து எனக்கு அழைப்பு ஒன்று வந்தது. +11 என்று தொடங்கிய நம்பரில் இருந்து இந்த அழைப்பு வந்தது. என்ன நம்பர் என்று தெரியாமல் நான் எடுக்கவில்லை. அப்புறம் மீண்டும் அழைத்தேன். 'சார்.. உங்களிடம் உள்துறை அமைச்சர் பேச வேண்டும் என்கிறார்' என சொன்னார்கள். யாருங்க என்று கேட்டேன். அமித்ஷா பேச வேண்டும் என்கிறார் என்று சொன்னார்கள். இணைப்பு கொடுங்கள் என்று தெரிவித்தேன்.
இணைப்பு கொடுத்தவுடன் 'திருமா ஜி எப்படி இருக்கிறீர்கள்.. எத்தனையாவது வயது உங்களுக்கு. உங்களுக்கு என்னுடைய சிறந்த பிறந்தநாள் வாழ்த்துகள்' என்று கூறினார். எனக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.அவருக்கு நான் நன்றி கூறினேன். உங்களுக்கு ரொம்ப நன்றி. வாழ்த்து கிடைத்ததற்கு நன்றி தெரிவித்தேன். இது அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கிற நட்பு. அவர் இதற்கு முன்பு பிறந்தநாள் வாழ்த்து சொன்னாரா? என்றால் தெரியவில்லை. அவர் முயற்சி செய்திருக்கலாம். இன்று கூட நான் என்னுடைய செல்போனை சைலன்ட்டில் தான் போட்டு இருப்பேன்.
திடீரென்று தயாளன் (திருமாவளவனின் தனி உதவியாளர்) போன் செய்து டெல்லியில் இருந்து உள்துறை அமைச்சர் போன் செய்ததாக கூறிய பிறகு தான் பார்த்தேன். 4 , 5 மிஸ்ட்கால் இருந்தது. அதன்பிறகு தான் நான் திரும்ப அழைத்து பேசினேன். 2 முறை எடுக்கவில்லை. 3வது போனை தான் எடுத்தார்கள். என்னுடைய சான்றிதழில் என்னுடைய பிறந்தநாள் 10.07.1962 (நேற்று தான் ஜூலை 10) அப்போது அப்படி எழுதிவிட்டார்கள். என்னுடைய ஜாதகத்தில் என்னுடைய பிறந்தநாள் ஆகஸ்ட் 17. ஆவணி ஒன்று.
ஜாதகம் எழுதுறவங்க தான் உண்மையான தேதியை குறிப்பார்கள். உள்ளூரில் இருக்கும் ஐயர்கள் தான் ஆவணி ஒன்றாம் தான் சுபகிருது வருடம் என்று எழுதி வைத்தார்கள். நாம் பிறந்தநாள் கொண்டாட தொடங்கியபோது சான்றிதழ் தேதியை விட்டுவிட்டோம். ஜாதகத்தில் இருக்கும் தேதியைில் தான் பிறந்தநாளை கொண்டாடுகிறோம். அதுதான் உண்மையான தேதி. இதனால் கொஞ்சம் காலமாக நாம் ஆகஸ்ட் 17 ம் தேதியில் பிறந்தநாள் கொண்டாடி வருகிறோம். சான்றிதழை நாம் மாற்ற முடியாது.
அதன்பிறகு சிறிது நேரத்தில் டெல்லியில் இருந்து இன்னொரு போன்கால் வந்தது. நான் எடுத்து பேசினேன். ரயில்வே அமைச்சர் பேச விரும்புவதாக தெரிவித்தனர். அஸ்வின் (அஸ்வினி வைஷ்ணவ்) என்று பெயர். வேறு ஏதோ பிரச்சனையாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவர் எடுத்த எடுப்பிலேயே தமிழில் பேசுகிறார். 'சார் வணக்கம். வாழ்த்துகள்'' என்று சொன்னார். நான் குழம்பிபோய்விட்டேன். நான் ரயில்வே மினிஸ்டர் தான் பேசுகிறேன். எனக்கு தமிழ் தெரியும் சார் என்று சொன்னார். நான் கொஞ்சம் நாள் அங்கு இருந்தேன் என்று சொன்னார். அவர் பாஜகக்காரர் தான்.
வீடு தேடி வந்து பத்திரிகை வைத்தார். அவர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு நான் போய்விட்டு வந்தேன். பாஜகவின் கொள்கையை எதிர்ப்பது வேறு. தனிநபர் உறவு என்பது வேறு. நீங்கள் தவெகவிற்கு ஆதரவு கொடுத்துவிட்டீர்கள். திமுகவுடன் உறவு தொடர்கிறதா? என்று கேட்டனர். திமுகவுடன் நல்ல நட்புறவில் தான் இருக்கிறோம் என்று சொன்னேன். உடனே அது எப்படி? இங்கேயும் போவீங்க.. அங்கேயும் போவீங்களா? இங்கேயும் ஒரு கால், அங்கேயும் ஒரு கால்னு கேட்கிறாங்க. இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரசியல். இங்க போனா அங்க பேசக்கூடாது.. அங்க போனா இங்க பேசக்கூடாது.
ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவினர் என்னை பார்த்து விட்டால் ஓட்டம் பிடித்து விடுவார்கள்.. இல்லை வேண்டாம்.. வேண்டாம் என்று யாராவது போட்டோ எடுத்து அனுப்பி விடுவார்கள் என்று பயப்படுவார்கள். அப்படி மிரட்டி வைத்துள்ளது அதிமுக, திமுக தொண்டர்களிடம் இந்த அரசியல். இந்த தாக்கம் இன்னும் இருக்கு. அதனை முதலில் உடைத்தவன் திருமாவளவன்'' என்று கூறினார்.
தற்போது விசிக முதல்வர் விஜய்யின் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதோடு, திமுகவுடன் நட்பு பாராட்டுவதாக திருமாவளவன் கூறியிருந்தார். இதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் இந்த விவகாரத்தை திருமாவளவன் மேடையில் கூறினார். மேலும் பிரதமர், மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் அனைவரும் இன்னொரு எம்பி, மத்திய அமைச்சர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவது இயல்புதானே என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் இங்கே அமித்ஷாவின் வாழ்த்தின் பின்னணியில் இருக்கும் விஷயம் ஒன்றை நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும். திருமாவளவனின் இந்த பேச்சின்போது இதுவரை அமித்ஷா தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னாரா? என்றால் தெரியவில்லை என்று கூறியுள்ளார். இதற்கு முன்பு அமித்ஷா பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தால் நிச்சயம் திருமாவளவன் நினைவு வைத்திருப்பார். மறந்திருக்க வாய்ப்பு இல்லை. இதனால் முதல் முதலாக தான் திருமாவளவனுக்கு, அமித்ஷா பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இதன்மூலம் திருமாவளவனை அரவணைக்க பாஜக விரும்புவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் திருமாவளவனுக்கு வடதமிழக மாவட்டங்களில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்களிடம் நல்ல செல்வாக்கு உள்ளது. தமிழகத்தில் எப்படியாவது பாஜகவை பலப்படுத்த வேண்டும் என்று அமித்ஷா நினைக்கிறார். ஆனால் தவெகவின் எழுச்சி, அண்ணாமலை விலகல் உள்ளிட்டவை பாஜகவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி கூட்டணியில் உள்ள அதிமுகவின் தலைவர்களும் தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பாஜக தனது பலத்தை இனி தவெகவை எதிர்த்து தான் அரசியல் செய்ய வேண்டி உள்ளது. இப்படி இருக்கும்போது அனைத்து கட்சியின் தலைவர்களிடமும் நட்பு பாராட்டுவது அவசியம். இது தேர்தல் நேர கூட்டணிக்கு வழிவகுக்கும்.
திருமாவளவனை எடுத்து கொண்டால் பாஜக கொள்கையை கடுமையாக எதிர்த்து வருகிறார். அதில் சமரசம் செய்து கொள்ளாமல் அரசியல் செய்து வருகிறார். இதற்கு உதாரணம் என்னவென்றால் இந்தியாவில் தலித் மக்களின் குரலாக கட்சி நடத்தி வரும் பல தலைவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் கூட திருமாவளவன் இப்போது அதனை செய்ய மறுத்து வருகிறார். ஆனால் அரசியலில் என்ன வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.
உதாரணமாக விஜய்யை தேர்தல் பிரசாரத்தின்போது விமர்சனம் செய்த திருமாவளவன் தற்போது அவரது ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து தனது கட்சி எம்எல்ஏவான வன்னியரசுக்கு அமைச்சர் பதவியை பெற்று கொடுத்துள்ளார். இதனால் கூட்டணி என்பது அந்தந்த சந்தர்ப்பங்களை பொறுத்தது தான். இதனால் தான் அமித்ஷா நேற்று திருமாவளவனுக்கு போன்போட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். பார்க்கலாம் அமித்ஷாவின் இந்த பிறந்தநாள் வாழ்த்தின் பின்னணியில் என்ன இருக்கிறது என்று...!












Click it and Unblock the Notifications