திமுக - அதிமுக கூட்டணி அமைக்குமா? டிடிவி தினகரன் பதில் குறித்து பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து
சென்னை: திமுக - அதிமுக கூட்டணி அமையுமா என்பதை அரசியல் சூழல்தான் முடிவு செய்யும் என்று டிடிவி தினகரன் பேசிய கருத்து தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசியுள்ளார். திமுக - அதிமுக கூட்டணி அமைக்க கூடாது என்பதெல்லாம் கிடையாது என்று பேசிய அவர், அரசியலை பொறுத்தவரை வெற்றி தான் முக்கியம் என்றும் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் முடிவுக்கு பின் திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் அதனை இரு தரப்பும் மறுத்தது. திமுக தலைவர் ஸ்டாலின், திமுக எதிர்க்கட்சியாக செயல்படும் என்று அறிவித்தார். ஆனால் முதல்வர் விஜய் தொடர்ச்சியாக திமுக - அதிமுக கூட்டணி தொடர்பாக அக்கட்சி நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார்.

இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுக - அதிமுக இரண்டும் ஒன்றாக வருமா என்று கேட்கிறீர்கள். அரசியல் சூழல் யாரை வேண்டுமானாலும் ஒன்று சேர்க்கும். அண்ணாவும், ராஜாஜியும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். திமுக கூட்டணியில் இருந்து வென்றவர்கள், இப்போது தவெக அமைச்சரவையில் இடம்பெற்றது நியாயம் என்றால், எந்தக் கூட்டணியும் நியாயம் தான்.
இந்த தேர்தலில் விஜய் 35% வாக்குகள் வாங்கி இருக்கிறது. அதன்பின் திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி வாக்கு வங்கி வைத்துள்ளது என்று தெரிவித்தார். டிடிவி தினகரனின் கருத்து அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், புது எதிரியை வீழ்த்த பழைய எதிரிகள் ஒன்று சேர்வதை நாம் பார்த்துள்ளோம்.
ராஜாஜியை அறிஞர் அண்ணா எதிர்த்தார். காங்கிரஸ் பாம்பை வீழ்த்த தனக்கு ஒரு தடி தேவை.. அது சுதந்திரா தடியாக இருந்தால் என்ன.. கம்யூனிஸ்ட் தடியாக இருந்தால் என்ன என்று அண்ணா பேசினார். அதேபோல் திமுக - அதிமுக ஒன்றாக இணைய வேண்டும். அந்தக் கட்சிக்கு கலைஞர் தலைவர்.. ஆட்சிக்கு எம்ஜிஆர் முதல்வர் என்று இரண்டு பேருமே பேசினார்கள்.
இந்த இணைப்பு உங்களுக்கு பிடித்துள்ளதா என்றெல்லாம் தமிழிசை திருமணத்தின் போது கேட்டார்கள். எனவே திமுக - அதிமுக கூட்டணி அமைக்குமா என்றால், சூழல் தான் முடிவு செய்யும். ஆனால் இவர்கள் இணையவேக் கூடாது என்றெல்லாம் இல்லை. காரணம் அரசியலை பொறுத்தவரை வெற்றிபெற வேண்டும்.. அவ்வளவுதான்.
காலமெல்லாம் திமுகவை காங்கிரஸ் எதிர்த்தது. ஆனால் பின்னாட்களில் திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தது. உள்ளாட்சித் தேர்தலில் திமுக நகராட்சி சேர்மேனுக்கு அதிமுகவினர் வாக்களித்துள்ளனர். அதிமுக நகராட்சி சேர்மேனுக்கு திமுக கவுன்சிலர்கள் வாக்களித்துள்ளனர். அப்படிதான் களத்தில் இருக்கிறார்கள். கூட்டணி என்பது தேர்தல், வியூகம் பொறுத்தே அமையும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications