"விஜய்.. யாரை பக்கத்துல வச்சிட்டு ஊழலை ஒழிப்போம்னு பேசுறீங்க?" - ஜெயக்குமார் சரமாரி கேள்வி
சென்னை: "முதலமைச்சர் என்பதை மறந்து அருவருக்கத்தக்க வகையில் விஜய் பேசியுள்ளார். இடைத்தேர்தலை மனதில் வைத்துதான் அவரது கரூர் பயணம் அமைந்தது. கரூரில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடியை தனது சொந்தப் பணத்தில் கொடுத்திருக்கலாமே?" என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்த 31 உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கிய நிகழ்ச்சி, அரசு விழா மற்றும் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஆகியவை நேற்று நடைபெற்றது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் இன்னும் சினிமா சூட்டிங் போலவே நடந்துகொள்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "முதல்வர் விஜய் வழக்கமான ஸ்கிரிப்டை தான் பேசியுள்ளார். சினிமாவில் ஒரு ஷாட் எடுப்பதை போல, வசனத்தை ஒப்பித்துவிட்டார். இடைத்தேர்தலை மனதில் வைத்துதான் விஜய்யின் கரூர் பயணம் அமைந்தது. தவெக ஆட்சி அமைந்தவுடன் இளைஞர்களுக்கு வேலை தருவோம் என சொன்னீர்கள்.. அதை செய்யவில்லை. மூன்றரை லட்சம் காலி பணியிடங்கள் குறித்து கரூரில் பேசியிருக்கலாம்.. ஆனால் பேசவில்லை.
விவசாயிகள் பிரச்சினை குறித்தும் பேசவில்லை. குறுவை சாகுபடிக்கு நீர் திறக்காத நிலையில் விவசாய பிரச்சனை குறித்து முதலமைச்சர் பேசினாரா? விஜய்யை எம்ஜிஆருடன் ஒப்பிடுகிறார்கள். தான் சம்பாதித்த பணத்தை எம்ஜிஆர் வாரி வாரி வழங்கினார். இத்தனை ஆண்டுகளில் விஜய் கோடி கோடியாக சம்பாதித்திருக்கிறார்.
கரூரில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடியை தனது சொந்தப் பணத்தில் கொடுத்திருக்கலாமே? ரூ.1 கோடி வழங்கியிருந்தால் அதன் வட்டியை வைத்தே நன்றாக வாழ்ந்திருப்பார்களே? கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது போல் அரசுப் பணியை கொடுத்துள்ளார் முதல்வர் விஜய். அரசு வேலையை கொடுத்து டிஎன்பிஎஸ்சி-க்கு படிப்பவர்களின் வாய்ப்பை ஏன் பறிக்க வேண்டும்?
தீய சக்தி, அந்த சக்தி, இந்த சக்தி என விஜய் பேசியிருக்கிறார். ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் யாரை அருகில் வைத்துவிட்டு, இதையெல்லாம் அவர் பேசுகிறார்? முதலமைச்சர் என்பதை மறந்து அருவருக்கத்தக்க வகையில் விஜய் பேசியுள்ளார்" என்று விமர்சித்துள்ளார் ஜெயக்குமார்.













Click it and Unblock the Notifications