விழுப்புரம்: அதிமுக மாவட்ட செயலர் பசுபதி கார் மீது கல்வீச்சு.. சிவிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்
சென்னை: விழுப்புரம் அருகே அதிமுக மாவட்ட செயலர் பசுபதி கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் நாட்டார்மங்கலத்தில் பசுபதி தலைமையில் அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற நிலையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இல்லாமல் கூட்டம் நடத்தக்கூடாது என அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாவே சிவி சண்முகம் தரப்பினர் பசுபதியின் கார் மீது தாக்குதல் நடத்தியதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் அதிமுக மாவட்ட செயலாளராக பசுபதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் அதிமுக சார்பில் பல்வேறு செயல்வீரர்கள் கூட்டம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று செஞ்சியை அடுத்த நாட்டார்மங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வல்லம் ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

சிவி சண்முகம் தலைமையில் தான் நடக்கனும்
இந்த கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட செயலாளர் பசுபதி தலைமை தாங்கினார். ஆனால் இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சிவி சண்முகத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தான் சிவி சண்முகம் ஆதரவாளர்கள் சிலர் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுவதை அறிந்து தனியார் மண்டபம் முன்பு குவிந்தனர்.
சுமார் 100-க்கு மேற்பட்டோர் அங்கு குவிந்து, இந்த செயல் வீரர்கள் கூட்டமானது சி.வி. சண்முகம் தலைமையில் தான் நடைபெற வேண்டும். அவர் இல்லாமல் இங்கு கூட்டம் நடத்தக்கூடாது என தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது அந்த கூட்டத்திற்கு காரில் வந்த பசுபதியை உள்ளே வர விடாதபடி அரண் அமைத்து நின்றார்கள்.
ஒருவரை ஒருவர் தாக்கினர்
அதே சமயம் பசுபதியை வரவேற்பதற்காக அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து அவரை உள்ளே அழைத்து செல்ல முயன்றனர். இதனால் எடப்பாடி தரப்பு அதிமுகவினருக்கும், சிவி சண்முகம் தரப்பு அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு தரப்பினர் எடப்பாடி வாழ்க என்றும்.. சிவி சண்முகம் வாழ்க என மாறி மாறி கோஷம் எழுப்பினர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அதிமுகவின் எடப்பாடி தரப்பும், சி.வி. சண்முகம் ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் தாக்க தொடங்கினர். அங்கு கிடந்த சேர்களை எடுத்து வீசியும் தாக்கினர்.
கல்வீசி தாக்குதல்
இதையடுத்து போலீசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்ய வைத்தனர். மேலும் பசுபதியை மண்டபத்திற்குள் அழைத்து சென்றனர். அவருடன் அவரது ஆதரவாளர்களும் உள்ளே சென்றனர். சிவி சண்முகம் தரப்பினரை உள்ளே செல்ல விடாமல் போலீசார் தடுத்தனர். இந்த நிலையில் தான் பசுபதி வந்த கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக எடப்பாடி தரப்பினர் தெரிவித்தனர்.
மாவட்ட செயலாளர் பசுபதியும் கார் மீது வீசப்பட்டதற்கான கல்லை தூக்கி காண்பித்தார். சிவி சண்முகம் தரப்பினர் தான் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications
