செஞ்சி சிறுமி கேஸ்.. கதவு திறந்தது எப்படி? பவானி, வடிவேலு, பாட்டி வாக்குமூலங்களில் சிக்கிய முரண்பாடு
விழுப்புரம்: செஞ்சி சிறுமி வழக்கில்.. குடும்பத்தினரின் ஆரம்பக்கட்ட வாக்குமூலங்களில் உள்ள முரண்பாடுகளை சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் ஒரு மாதத்தைக் கடந்து நீடித்து வருகிறது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை, மறுநாள் அதிகாலையில் மர்மமான முறையில் காணாமல் போனார்.

காடுகள், கிணறுகள், வெளிமாவட்ட லாரிகள், சிசிடிவி பதிவுகள் எனப் பல கோணங்களில் விசாரித்தும் வெளியாட்கள் கடத்தியதற்கான எந்தத் தடயமும் சிக்கவில்லை. இந்த நிலையில், சிபிசிஐடி அதிகாரிகள் இப்போது குடும்பத்தினரின் ஆரம்பக்கட்ட வாக்குமூலங்களில் உள்ள முரண்பாடுகளைத் ஆய்வு செய்து வருகின்றனர்.
குறிப்பாக, சிறுமியின் தாய் பவானி, அவரது கணவர் வடிவேலு மற்றும் பாட்டி ஆகிய மூவரும் ஆரம்பத்தில் அளித்த வாக்குமூலங்களில் முக்கியமான வேறுபாடுகள் இருப்பதாகப் புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
அதிகாரிகளின் சந்தேகத்தைக் கிளப்பிய முக்கியக் கேள்விகள்:
குழந்தை காணாமல் போன அதிகாலையில், வீட்டின் முன்பக்கக் கதவு தாழ்ப்பாள் போடப்படாமல் திறந்துகிடந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இரவு தூங்கும்போது கதவைப் பூட்டினீர்களா, இல்லையா? அப்படியே திறந்து போட்டுத் தூங்கினீர்களா? அல்லது யாரேனும் உள்ளே இருந்து கதவைத் திறந்து வெளியே சென்றார்களா? என்பது குறித்துப் பவானி, வடிவேலு மற்றும் பாட்டியிடம் தனித்தனியாக அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
அண்டை வீட்டாருக்குக் கேட்ட குழந்தையின் அழுகுரல், வீட்டுக்குள் தூங்கியவர்களுக்குக் கேட்காதது ஏன்? என்ற கேள்வி உள்ளது.
சிறுமி மாயமான நள்ளிரவில், பக்கத்து வீட்டுப் பெண்ணுக்குக் குழந்தையின் "அம்மா.. அம்மா.." என்ற அழுகுரல் கேட்டதாக வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது. வெளியிலிருக்கும் அண்டை வீட்டாருக்கே அந்தச் சத்தம் தெளிவாகக் கேட்டிருக்கும்போது, ஒரே சிறிய அறையில் குழந்தைக்கு மிக அருகில் படுத்து உறங்கிய தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகிய மூவருக்குமே குழந்தையின் சத்தமோ, கதவு திறந்த சத்தமோ ஏன் கேட்கவில்லை என்று அதிகாரிகள் துருவி வருகின்றனர்.
சிறுமி மாயமான அந்த குறிப்பிட்ட நேரத்தில் வீட்டிற்குள் என்னென்ன நிகழ்வுகள் நடந்தன என்பதை ஆரம்பம் முதல் இறுதி வரை மீண்டும் ஒருமுறை வரிசையாக விவரிக்குமாறு மூவரிடமும் அதிகாரிகள் கேட்டுள்ளனர். ஒவ்வொருவரும் தனித்தனியாகச் சொல்லும் டைம்களையும், நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து முரண்பாடுகளைக் கண்டறியும் பணி நடந்து வருகிறது.
வாக்குமூலங்களில் உள்ள முரண்பாடுகளைத் தாண்டி, குடும்பத்தினரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் தரவுகள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனை விவரங்களை வைத்தும் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்:
சம்பவம் நடந்த நாட்களில் பெற்றோரின் செல்போன்களில் இருந்து யாருக்கெல்லாம் அழைப்புகள் சென்றன, நள்ளிரவு நேரங்களில் ஏதேனும் அழைப்புகள் வந்தனவா என்பது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்குகளில் நடந்த பல்வேறு பணப் பரிவர்த்தனைகள், வரவு வைக்கப்பட்ட மற்றும் அனுப்பப்பட்ட தொகைகள் யாருடையது, எதற்காக அந்தப் பணம் கைமாறியது என்பது குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
கதவு திறந்திருந்த மர்மம், குழந்தையின் அழுகுரல் குறித்த ஸ்டேட்மென்ட் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் எனப் பல முக்கியப் புள்ளிகளை இணைத்து சிபிசிஐடி அதிகாரிகள் நடத்தி வரும் இந்தத் தீவிர விசாரணையில், செஞ்சி சிறுமி ஹேமலதா மாயமான வழக்கின் உண்மை மிக விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
