இனி PF பணத்தை மொத்தமாக எடுக்க வேண்டாம்! மாதா மாதம் சம்பளம் போல பெறலாம் - EPFO அறிவிப்பு!
டெல்லி: தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO வெளியிட்டுள்ளது.
இனிமேல் ஓய்வு பெற்ற பிறகு, உங்கள் பிஎஃப் கணக்கில் சேர்ந்துள்ள மொத்த பணத்தையும் ஒரே நேரத்தில் மொத்தமாக எடுக்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இருப்பது போல, மாதம் தோறும் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தவணை முறையில் பணத்தை எடுத்துக் கொள்ளும் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லியில் நடைபெற்ற EPFO மத்திய அறங்காவலர் குழுவின் 240-வது கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய திட்டம் எவ்வாறு செயல்படும், இதனால் சாதாரண ஊழியர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை எளிமையாகப் பார்க்கலாம்.
திட்டம் SWP என்றால் என்ன?
பொதுவாக ஒருவர் வேலையிலிருந்து ஓய்வு பெறும்போது, தனது பிஎஃப் கணக்கில் இருக்கும் மொத்தப் பணத்தையும் ஒரேயடியாக எடுத்துவிடுவார். அப்படி மொத்தமாகப் பணத்தை எடுக்கும்போது, அதை எங்கே பாதுகாப்பாக முதலீடு செய்வது என்ற குழப்பம் பலருக்கும் ஏற்படும். அல்லது அந்தப் பணம் விரைவாகச் செலவாகிவிடும் அபாயமும் உள்ளது. இதனைத் தவிர்க்கவே 'சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான்' (SWP) என்ற புதிய வசதியை ஈபிஎஃப்ஓ கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம், ஓய்வு பெற்றவர்கள் தங்களது பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை மாதந்தோறும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை . ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, ஆண்டுக்கு ஒருமுறை எனத் தங்களுக்குத் தேவைப்படும்போது தவணை முறையில் எடுத்துக் கொள்ளலாம். இது முற்றிலும் ஊழியர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. கட்டாயம் கிடையாது.
மீதமுள்ள பணத்திற்கு வட்டி உண்டு!
இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், நீங்கள் தவணை முறையில் பணம் எடுத்துக் கொண்டே வந்தாலும், உங்கள் பிஎஃப் கணக்கில் மீதமிருக்கும் பணத்திற்கு வழக்கமான அரசு வட்டி தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும். இன்னும் சொல்லப்போனால், உங்கள் அசல் பணத்தை அப்படியே வைத்துவிட்டு, அதற்குக் கிடைக்கும் வட்டியை மட்டும் மாதம் தோறும் எடுத்துக் கொள்ளும் வசதியும் இதில் வழங்கப்பட உள்ளது.
மேலும், இந்தத் திட்டத்தில் சேர்ந்த பிறகு உங்களுக்குத் திடீரென மொத்தப் பணமும் தேவைப்பட்டால், எப்போது வேண்டுமானாலும் இந்தத் திட்டத்திலிருந்து விலகி மீதமுள்ள முழுப் பணத்தையும் எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை பணம் எடுத்துக் கொண்டிருக்கும் காலத்தில் உறுப்பினர் உயிரிழக்க நேரிட்டால், அவரது குடும்பத்தினர் அல்லது நாமினி மீதமுள்ள பணத்தை மொத்தமாகவோ அல்லது தவணை முறையிலோ பெற்றுக்கொள்ள முடியும்.
யாருக்கெல்லாம் முதலில் கிடைக்கும்?
முதற்கட்டமாக, 55 வயதுக்கு மேற்பட்ட மற்றும் பிஎஃப் கணக்கில் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிப்பு வைத்திருக்கும் சுமார் 6.32 லட்சம் ஊழியர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் நேரடியாகப் பயன்பெற உள்ளனர். ஏற்கனவே கிடைக்கும் இபிஎஸ் ஓய்வூதியத்துடன் சேர்த்து, இந்த பிஎஃப் தவணைப் பணமும் கிடைப்பதால், ஓய்வுக் காலத்தில் ஊழியர்களுக்கு நிலையான ஒரு மாதாந்திர வருமானம் உறுதி செய்யப்படும். EPFO இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை விரைவில் வெளியிட்ட பிறகு இது நடைமுறைக்கு வரும்.
வேலையில் இருப்பவர்களுக்கும் இரட்டை ஜாக்பாட்!
நேற்றைய கூட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமல்லாமல், தற்போது வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இரண்டு முக்கியச் சலுகைகளை ஈபிஎஃப்ஓ அறிவித்துள்ளது:
அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கும்போது, கணக்கில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்புத் தொகை 25 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் தங்கள் பிஎஃப் பணத்தில் 90 சதவீதம் வரை எடுத்துக் கொள்ள முடியும்.
ஒருவருக்கு வேலை போய்விட்டால், பிஎஃப் கணக்கிலுள்ள முழுப் பணத்தையும் எடுக்க இதுவரை 12 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இனிமேல் வேலையில்லாமல் 2 மாதங்கள் ஆனாலே முழுப் பணத்தையும் எடுத்துக் கொள்ளலாம் என விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
