வி.எஸ். பாபு மரணத்தில் தவெக செய்த அரசியல்.. திமுக கோட்டைவிட்ட இடம் இதுதான்! மிஸ் பண்ணிட்டாங்களே
சென்னை: வி.எஸ். பாபு மரணத்தில் திமுக தரப்பு மிக முக்கியமான சொதப்பல் ஒன்றை செய்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் புலம்ப தொடங்கி உள்ளனர்.
கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு (75) 71 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு நேற்று காலமானார். இவரது மறைவைத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியான திமுக தனது அரசியல் வியூகத்தை முழுமையாகக் கோட்டைவிட்டுவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

திமுக எழுப்பத் தவறிய முக்கியக் கேள்விகள்
கடந்த செப்டம்பர் 9-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து, சுமார் 70 நாட்களாக எந்தவொரு அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியிடப்படவில்லை. ஒரு தொகுதியின் மக்கள் பிரதிநிதிக்கு என்ன ஆனது என்ற வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து எதிர்க்கட்சியான திமுக அழுத்தமாகக் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். தனிநபர் ஒருவரே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த பிறகே மரண அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதைவிட முக்கியமாக, கடந்த நவம்பர் 13-ம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் திடீரென கொளத்தூர் மாநகராட்சிப் பள்ளிக்குச் சென்று மாணவர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். தனது சொந்தத் தொகுதியான பெரம்பூருக்குப் பக்கத்தில் கொளத்தூர் இருந்தாலும், வி.எஸ். பாபு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நேரத்தில் விஜய் அங்கு சென்றது ஏன்?
பாபுவின் உடல்நிலை மோசமாக இருப்பதையும், விரைவில் கொளத்தூரில் இடைத்தேர்தல் வரப்போவதையும் முன்கூட்டியே கணித்துத்தான் முதல்வர் விஜய் அங்கு நேரடியாக விசிட் அடித்தாரா? என்ற வலுவான அரசியல் கேள்வியை தி.மு.க. மக்கள் மன்றத்தில் வைத்திருக்க வேண்டும். நேற்று இதை திமுக பேசி அதை இணையம் முழுக்க பேசுபொருளாக்கி இருக்க வேண்டும்.
அரசியலில் வென்ற தவெக
ஆனால், திமுக தரப்பு இந்த முக்கியக் கேள்விகளைக் கொண்டு மக்களிடம் விவாதத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, அமைதி காத்தது. இந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்ட தவெக ஆதரவாளர்கள், சமூக வலைதளங்களில் வேறு ஒரு கதையை வெற்றிகரமாகக் கட்டமைத்துவிட்டனர்.
தேர்தலில் மு.க. ஸ்டாலினை வீழ்த்தியதால், திமுகவினர் கேரளாவிற்குச் சென்று மாந்திரீகம் செய்ததால்தான் பாபு இறந்துவிட்டார் என்றும், அவரது மரணத்தை தி.மு.க.வினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள் என்றும் ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்பி, திமுகவுக்கு எதிரான ஒரு பிம்பத்தை உருவாக்கிவிட்டனர். இஹை மறுத்து டிபன்ட் செய்வதிலேயே திமுகவின் நேரம் சென்றுவிட்டது.
70 நாட்கள் சிகிச்சை குறித்த மர்மம், உயர்நீதிமன்ற வழக்கு, இடைத்தேர்தலை மனதில் வைத்து முதல்வர் மேற்கொண்ட கொளத்தூர் பயணம் என ஆளுங்கட்சிக்கு எதிராகப் பல நியாயமான கேள்விகள் இருந்தன. அவற்றை முறையாக மக்களிடம் கொண்டு சேர்க்கத் தவறியதால், அடிப்படை ஆதாரமற்ற மாந்திரீக வதந்தி விவாதத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில், களத்தின் போக்கைத் தீர்மானிக்கும் நரேட்டிவ் செட்டிங் விஷயத்தில் தி.மு.க. பின்தங்கிவிட்டதையே இது காட்டுகிறது.


Click it and Unblock the Notifications
