கீரி-பாம்பு சண்டையால் பருந்துக்கு கொண்டாட்டம்! தவெக vs திமுக மோதலால் படையெடுக்கும் அபாயங்கள்
சென்னை: தமிழகத்தில் இதுநாள்வரை பிரதானமாக நிலவி வந்த பாஜக எதிர்ப்பு பேச்சு என்பதே சமீபகாலமாக இல்லை. திமுகவும் தவெகவும் தங்களுக்குள் நீயா? நானா? என மல்லுக்கட்டிக் கொண்டிருக்க, இந்த மோதலைப் பயன்படுத்தி மத்திய பாஜக அரசு தங்களின் கொள்கைகளையும் திட்டங்களையும் தமிழகத்தில் தங்குதடையின்றிச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள விஜய், தான் பேசும் இடங்களில் எல்லாம் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். திமுக தரப்பு அதற்கு பதில் கொடுத்து வருகிறது. இந்த வார்த்தை மோதல்களால், மத்திய பாஜக அரசு எளிதாக தமிழ்நாட்டில் தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கியுள்ளதாக குரல்கள் எழுந்துள்ளன.

ஆளுநர் அழுத்தத்துக்கு பணிந்ததா?
துணைவேந்தர் தேடுதல் குழுவில் 5 பேர் இடம்பெறுவார்கள் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அண்மையில் தெரிவித்தார். தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்க்கவேண்டும் என்ற ஆளுநர் அழுத்தத்துக்கு தவெக அரசு பணிந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினரைச் சேர்க்க ஒப்புதல் அளித்தது, ஆளுநரின் அழுத்தத்திற்குத் தமிழக அரசு பணிந்ததையே காட்டுகிறது. கல்வி மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டும் என முழங்கிய தமிழக அரசு, இன்று மத்திய அரசின் பிடிக்குள் செல்லும் நிலை உருவாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நீட் எதிர்ப்புக் குரல் மங்கிப்போனதா?
நீட் விவகாரத்தில் தமிழகத்தில் இருந்த ஒருமித்த எதிர்ப்பு, தற்போது தமிழக அரசியல் கட்சிகளின் பரஸ்பர குற்றச்சாட்டுகளால் நீர்த்துப் போயுள்ளது. நீட் விவகாரத்தில் திமுகவை தான் விமர்சித்து வருகிறது தவெக. புதிய கல்விக் கொள்கையின் சில அம்சங்கள் மறைமுகமாகப் புகுத்தப்படுவதை தவெக அரசு கண்டுகொள்ளவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
மாநில உரிமைகள் காலி?
'பிஎம் ஸ்ரீ' பள்ளிகள் திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்குத் தமிழக அரசு இணங்கிச் செல்லும் நிலை உருவாகி வருகிறது. நிதிப் பகிர்வு மற்றும் மாநில உரிமைகள் குறித்த குரல்களின் வேகம் அண்மைக்காலமாக குறைந்துள்ளது. தேசிய கீதத்தை இருமுறை பாடும் நடைமுறையை எதிர்ப்பின்றி ஏற்றுள்ளது தவெக அரசு.
டிஃபன்ஸ் ஆடும் திமுக
விஜய் தொடுக்கும் தொடர் தாக்குதல்களுக்குப் பதில் சொல்லி 'டிஃபன்ஸ்' ஆட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது திமுக. தவெக அமைச்சர்கள் முந்தைய திமுக அரசு மீது வைக்கும் விமர்சனங்களுக்கு, தினம் ஒரு திமுக நிர்வாகி அறிவாலயத்தில் விளக்கம் அளித்து பிரஸ் மீட் நடத்தும் நிலை உள்ளது. இதனால், மத்திய பாஜக அரசின் கொள்கைகளுக்கு எதிராகத் திரட்டப்பட வேண்டிய வலுவான அரசியல் எதிர்ப்பு பலவீனமடைந்துள்ளது.
இதே அணுகுமுறை நீடித்தால், தமிழக அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் நீண்டகாலப் போக்கில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் இருந்த "மத்திய அரசின் திணிப்பு எதிர்ப்பு" என்பது உடைந்து, பாஜகவின் திட்டங்கள் எவ்விதப் பெரிய எதிர்ப்புமின்றித் தமிழகத்திற்குள் காலூன்றும் சூழல் உள்ளது.
வட்டமிடும் பருந்துக்கு கொண்டாட்டம்
தமிழகத்தில் இதுவரை இருந்த கடுமையான எதிர்ப்பு நிலை மந்தமாகி, மாநிலக் கட்சிகளின் மோதல்களைப் பயன்படுத்தி பாஜக தங்கள் நோக்கங்களை எளிதாக நிறைவேற்றும் அபாயம் எழுந்துள்ளது.
கீரியும், பாம்பும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது, மேலே வானத்தில் வட்டமடிக்கும் பருந்துக்குத்தான் லாபம். அது சமயம் பார்த்து இரண்டையுமே தூக்கிச் சென்றுவிடும். இங்கு திமுகவும் தவெகவும் கீரியும், பாம்பும் போல மோதிக் கொள்ளும் நிலையில், வானில் வட்டமிடும் பருந்தை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். இது தமிழ்நாட்டுக்குத் தான் பாதிப்பு என்பதை அனைவரும் உணர வேண்டும்.
வாழ்வாதாரப் பிரச்சனைகளில் கவனம் தேவை
தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் தவெக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். அரசியல் எதிரிகளை வீழ்த்துவது மட்டுமே ஒரு புதிய கட்சியின் இலக்காக இருக்கக் கூடாது, மாநிலத்தின் உரிமைகளைக் காப்பதும் அதன் கடமை. தமிழக வெற்றிக் கழகம், திமுகவின் மீதான தனது தனிப்பட்ட அரசியல் கணக்குகளைத் தாண்டி, தமிழகத்தின் ஒட்டுமொத்த உரிமைகளைப் பறிக்கக் காத்திருக்கும் பருந்தின் ஆபத்தை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
மேகதாது அணை விவகாரம்
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயல்வது தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்துவிடும். இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் தவெகவின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். அதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் திரட்ட வேண்டும். ஆனால் அவர்களை பார்த்து தீய சக்தி என்றும், தீர்த்து போன சக்தி என்றும் முதல்வரே பேசியபடி இருப்பது அண்டை மாநிலங்களுக்கு தமிழகம் பற்றி அலட்சிய போக்கை அதிகரித்துவிடும்.
முந்தைய ஆட்சியாளர்கள் தவறு செய்திருந்தால் சட்டப்படி வழக்கு தொடர்ந்து தண்டனையை பெற்றுத் தர வேண்டும். முதல்வரே சொன்ன மாதிரி Talk less work more என்று இருக்க வேண்டும். ஆனால் இந்த கொள்கையை அவர் மத்திய அரசுக்கு எதிராக மட்டும் பின்பற்றுகிறார். ஏன் திமுகவுக்கு எதிராக அதிகமாக பேசுகிறார் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறதல்லவா. அப்படியானால் அதிகம் பேசிவிட்டு வேலையை குறைவாக செய்கிறாரோ என்ற பதில் கேள்வியும் தவிர்க்க முடியாதது அல்லவா?
சட்டம் - ஒழுங்கு பிரச்சனை
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மற்றும் போதைப்பொருள் புழக்கம் போன்ற மக்களின் அன்றாடப் பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகளில் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான போராட்டங்களை முன்னெடுத்து, தவெக அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். வெறும் அரசியல் தாக்குதல்களால், தமிழ்நாட்டின் நிலை பின்னோக்கிச் சென்றுவிடக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.












Click it and Unblock the Notifications