நேற்று கரூரில் 25000 கோடி நிலம், இன்று பழனியில் 100 கோடி நிலம்.. தவெக அரசுக்கு 2 பெரிய நெருக்கடி
திண்டுக்கல்: கரூரில் கோயில்களின் பெயரில் இருந்ததாக கூறப்படும் 25000 கோடி மதிப்புள்ள சுமார் 3085 ஏக்கர் நிலங்கள் தனியாருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயத்துவாரி நிலங்களை தவறுதலாக கோயில் நிலம் என்று அந்த காலத்தில் சேர்க்கப்பட்டதால் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் தடை நீக்கப்பட்டதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால் இந்து அமைப்புகள் அரசுக்கு எதிராக குரல் எழுப்பி வந்தன. இந்த பிரச்சனை வெளியான மறுநாளே.. அதாவது இன்று பழனி கோயிலுக்கு சொந்த 100 கோடி மதிப்புள்ள நிலம் தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக பிரச்சனை வெடித்துள்ளது. வெறும் இரண்டு நாளில் 2 பிரச்சனைகள் நடந்துள்ளதால் தவெக அரசு பதில் சொல்ல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது..
இதில் முதலில் கரூர் சம்பவம் பற்றி பார்ப்போம். கரூரில் ரயத்துவாரி நிலங்களை கோயில் நிலங்கள் என்று வகைப்படுத்தியதால் நிலங்களை வாங்கவோ, விற்கவோ முடியாமல் சுமார் 10 ஆயிரம் பேர் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தெளிவாக சொல்வது என்றால், அதில் புகழிமலையில் அமைந்துள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமானதாக கருதப்பட்ட 3 கிராமங்களில் 214 ஏக்கர் நிலங்கள் , அதேபோல் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமாக 4 கிராமங்களில் 204 ஏக்கர், குப்புச்சிபாளையம் அருள்மிகு ரவீஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமாக 1 ஒரு கிராமத்தில் 132 ஏக்கர் நிலங்களுக்கு பட்டா மாற்ற தடை நீக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வெஞ்சமாங்கூடலூரில் உள்ள அருள்மிகு விக்ருதீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமானதாக கருதப்பட்ட 2533 ஏக்கர் நிலங்களுக்கும் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 3,085 ஏக்கர் ரயத்து வாரி நிலங்கள் தவறுதலாக கோயில் நிலமாக கணக்கிடப்பட்டுள்ளது என்றும் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் அரசு கூறுகிறது.
ஆனால் இதற்கு இந்து கோயில் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த அறநிலையத்துறை அமைச்சர் டிவிகே ரமேஷ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "தவெக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு கோயில்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஒரு பெரும் துரோகம் இது. கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 4 கோயில்களுக்குச் சொந்தமான, 25,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள 3,085 ஏக்கர் நிலங்கள், இந்து சமய அறநிலையத்துறையால் ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன; இது இந்து கோயில்களுக்கு தவெக அரசு இழைக்கும் வெட்கக்கேடான துரோகச் செயல்" என்று கூறியிருந்தார்.இதேபோல் பாஜக நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த மறுநாளே பழனி கோயில் சர்ச்சை வெடித்துள்ளது.
பழனி முருகன் கோவில் நிர்வாகம், கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பரில் தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.4 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி இருந்தது.அந்த நிலம் இலவச வாகன நிறுத்துமிடமாக உள்ளது. 2026 ஜூலை, 6ல் தனி நபர்கள் இருவரது பெயரில் அந்த நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த உண்மை பழனி கோயில் நிர்வாகம் எழுதிய கடிதத்தால் அம்பலத்திற்கு வந்துள்ளது.இதனால் கொதித்து போன இந்து மத ஆர்வலர்கள், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு இந்த விவகாரங்கள் குறித்து பதில் அளிக்க வேண்டும் என்றும், கோயில் நிலங்களை தனியாருக்கு அளிக்கக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்














Click it and Unblock the Notifications