பழனி கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் தனியாருக்கு பத்திரப்பதிவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் நிர்வாகம் 2025 செப்டம்பரில் தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தது, அந்த நிலம் இலவச வாகன நிறுத்துமிடமாக உள்ளது. இந்த ஜூலை மாதம் 6ம் தேதி அன்று தனி நபர்கள் இரண்டு பேரின் பெயரில் அந்த நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கோவில் நிர்வாகம் பத்திரப்பதிவு துறைக்கு கடிதம் அனுப்பியதால் அம்பலமாகி உள்ளதாம். இதுபற்றி விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் கோயில் ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவில் உலகப்புகழ் பெற்றது. இந்த கோயிலிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். தமிழ்நாட்டில் பல கோடி வருமானம் உள்ள பணக்கார கோயில் என்றால் அது பழனி முருகன் கோயில் தான். இந்த கோயிலுக்கு சொந்தமாக ஏராளமாக நிலங்கள், கட்டிடங்கள் உள்ளன.

இந்த சூழலில் பழனி முருகன் கோவில் நிர்வாகம், கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பரில் தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.4 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி இருந்தது.அந்த நிலம் இலவச வாகன நிறுத்துமிடமாக உள்ளது. 2026 ஜூலை, 6ல் தனி நபர்கள் இருவரது பெயரில் அந்த நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பத்திரப்பதிவை ரத்து செய்யக்கோரி, பழனி கோவில் நிர்வாகம் சார்பில், பத்திரப்பதிவு துறைக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறுகையில், "பழனி கோவில் இணை ஆணையர், தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு தக்காராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அவரை நீக்கம் செய்ய வலியுறுத்தி, தண்டபாணி என்பவரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மடத்திற்கு பாத்தியப்பட்ட, 1.4 ஏக்கர் நிலம் தனிநபர்கள் பாராதீனம் செய்ய இயலாது என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
பழனி இணை சார் பதிவாளர்- பணி மாறுதலில் சென்ற நிலையில், கூடுதல் பொறுப்பில் உள்ள சார் பதிவாளர், 2026 ஜூலை 6ல் இந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்தது சட்டத்திற்கு புறம்பானது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது. எந்த ஆவணங்களையும் சரிபார்க்காமல், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற உத்தரவுகள், மடத்தின் மூலம் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அறிக்கையை மதிக்காமல், ஆவணம் பதிவு செய்துள்ளார். பத்திரப்பதிவை ரத்து செய்வதுடன், பத்திரப்பதிவு செய்த அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே பத்திரப்பதிவு எப்படி நடந்தது, கோயில் நிலம் என்று தெரியாமல் எப்படி பத்திரப்பதிவு செய்தார் அந்த சர்பாதிவாளர்.. கோயில் நிலம் என்று தெரிந்தும் எப்படி பத்திப்பதிவு செய்ய அந்த தனிநபர்கள் துணிந்தார்கள். அவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்பது குறித்து இந்து சமய ஆர்வலர்கள் அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுத்து அரசு பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.














Click it and Unblock the Notifications