கோவையில் ரூ.3 கோடி நிலத்தை ஆக்கிரமித்து வணிக வளாகம் இடிப்பு.. மாநகராட்சி அதிரடி
கோவை: உள்ளாட்சி அமைப்புகள் முதலமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் உள்ளது. மக்களுக்கான அத்தியாவசிய தேவையில் எந்த குறையும் இருக்க கூடாது என்று அவர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவை மாநகராட்சி அதிக வருவாய் ஈட்டி வருகிறது. மாநகராட்சியின் நிலத்தை ஆங்காங்கே ஆக்கிரமித்து தனிநபர்கள் பணம் சம்பாதித்து வருகிறார்கள். கோவை மாநகரின் மையப்பகுதியில் ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பிரம்மாண்ட மூன்று மாடி வணிக வளாகத்தை இடிக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட, வார்டு 48 ஆவாரம்பாளையத்தில் பாலாஜி நகர் பகுதி உள்ளது. கடந்த 1971 ஆம் ஆண்டு நகர ஊரமைப்புத்துறை சார்பில் 8.5 ஏக்கர் மனைப்பிரிவுக்கு ஒப்புதல் வழங்கியது. விதிகள்படி மனைப்பிரிவில் 10 சதவிகிதம் பொது ஒதுக்கீடு எனப்படும் ரிசர்வ் சைட்டாக விட வேண்டும். அதனடிப்படையில் பாலாஜி நகரில் சுமார் 65 சென்ட் பரப்பளவில் ரிசர்வ் சைட் ஒதுக்கப்பட்டது. இது நகரில் நான்கு பிரிவுகளாக உள்ளது.

7 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு
இதில் 7 சென்ட் திறந்தவெளி மைதான பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டது. அதை காலப்போக்கில் தாமோதரன் என்கிற தொழிலதிபர் ஆக்கிரமிப்பு செய்ததாக புகார் எழுந்தது. சுமார் 20 வருடங்களுக்கு முன்பு அந்த 7 சென்ட் நிலத்தில் 11,000 சதுரடி பரப்பளவில் பிரம்மாண்ட வணிக வளாகம் கட்டியுள்ளார். 12 கடைகள், லாட்ஜ் ஆகியவற்றை வாடகைக்கு விட்டு சம்பாதித்து வந்துள்ளார். அருகில் உள்ள தன்னுடைய இடத்தையும், ரிசர்வ் சைட்டையும் சேர்த்து ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளார்.
இதுகுறித்து அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கம், தமிழ்நாடு ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்கத்தினர் மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். கட்டிடத்தை காலி செய்ய மாநகராட்சி நிர்வாகம் பல முறை நோட்டீஸ் அனுப்பியும் காலி செய்யவில்லை. இதனால் கோவை மாநகராட்சி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த 10 வருடங்களாக விசாரணை நடைபெற்று வந்தது. மாநகராட்சியும், ஆக்கிரமிப்பாளரும் மாறி மாறி வாதங்களை முன் வைத்தனர்.
ரூ.3 கோடி மதிப்பு
இதனிடையே ஆக்கிரமிப்பை அகற்ற சொல்லி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர் தமோதரனின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து அவர்களின் வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆக்கிரமிப்பு கட்டிடங்களில் இருந்த கடைகளை காலி செய்ய மாநகராட்சி நகரமைப்பு துறை நோட்டீஸ் வழங்கினர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 7 சென்ட் நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.3 கோடியாகும். மாநகரில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த முக்கிய பகுதி என்பதால் ஒரே நாளில் கட்டிடத்தை இடிக்க முடியாது. இந்த வணிக வளாகம் மிகவும் பெரியது. சுமார் 3 தளங்களில் பெரிய கட்டிடமாக உள்ளது. கட்டிடத்தை முழுமையாக அகற்ற 15 நாட்களாகும். பொக்லைன், கிரேன், ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களுடன் கட்டிடத்தை இடிக்கும் பணி நேற்று துவங்கியது.
மேல் இருந்து கீழ்நோக்கி
இதற்காக தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்றவே ரூ.10 லட்சத்திற்கு மேல் செலவாகும். இந்த பணியில் சுமார் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 10 போலீசார் ஈடுபட்டுள்ளனர். கட்டிடத்தை மேல் தளத்தில் இருந்து படிப்படியாக கீழ்நோக்கி இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு சிக்கல் ஏற்பட கூடாது என்பதற்காக இரவு நேரங்களிலும் பணி தொடரும்" என்றனர்.












Click it and Unblock the Notifications