எம்.சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்ல தடை விதிக்க அதிகாரம்- தமிழக அரசு அதிரடி
சென்னை: எம்.சாண்ட் ஏற்றுமதிக்கு தற்காலிகமாக தடை விதிக்க சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குநருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எம்.சாண்டை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதை ஒழுங்குபடுத்த சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குநருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது தமிழக அரசு.
தமிழ்நாட்டில் போதுமான அளவு எம்.சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டவிரோத கனிம சுரங்கம், கனிமம் போக்குவரத்து மற்றும் சேமிப்பு தொடர்பான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட அத்தியாவசியக் கட்டுமானப் பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இது வீடு கட்டும் பொதுமக்கள், கட்டுமானத் தொழிலில் ஈடுபடுவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கட்டுமானப் பணிகளுக்கு மிக முக்கிய மூலப்பொருட்களாக விளங்கும் ஜல்லி மற்றும் மணல் மாற்றுப் பொருட்களின் விலை யூனிட்டுக்கு சராசரியாக 1,000 ரூபாய் வரை திடீரென உயர்ந்துள்ளது. ஒரு யூனிட் ஜல்லி விலை 4,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும், எம்.சாண்ட் விலை 5,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாகவும், பி.சாண்ட் விலை 6,000 ரூபாயிலிருந்து 7,000 ரூபாயாகவும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
சிமெண்ட், கம்பி மற்றும் எம்.சாண்ட் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் தொடர் விலை உயர்வால், வீடுகளின் ஒட்டுமொத்த கட்டுமானச் செலவு திட்டமிட்ட பட்ஜெட்டைத் தாண்டி எகிறியுள்ளது. வங்கிக் கடனை நம்பி, தங்களின் ஆயுள் காலச் சேமிப்பை முதலீடு செய்து சொந்த வீடு கட்டத் தொடங்கிய நடுத்தர வர்க்க மக்கள், தற்போது மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் கட்டுக்கடங்காத விலையேற்றம் காரணமாக வேதனையடைந்து வருகின்றனர்.
இந்த கட்டுக்கடங்காத விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், கட்டுமானத் தொழில் முடக்கத்தைத் தடுத்து நிறுத்தவும் தமிழக அரசு உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், தமிழக அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் கனிமங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்க சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குநருக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கருங்கல், பாறை உள்ளிட்டவற்றை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை ஒழுங்குப்படுத்த அதிகாரம். கனிமங்கள் ஏற்றுமதிக்கு தற்காலிகமாக தடை விதிக்க புவியியல் துறை இயக்குநருக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
எம். சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதை தடை செய்ய அதிகாரம் வழங்கி, தமிழ்நாட்டில் போதுமான அளவில் கனிமங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சட்டவிரோத கனிம சுரங்கம், கனிமம் போக்குவரத்து மற்றும் சேமிப்பு தொடர்பான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications