தம்மாதூண்டு துண்டு.. அம்புட்டும் ஆரோக்கியம்..உடல் எடை குறையணுமா? ஆச்சரியமூட்டும் இஞ்சி மல்லி தண்ணீர்
சென்னை: நாம் உண்ணும் உணவில் சில மாற்றங்களை செய்து கொண்டாலே உடல் எடை மெல்ல குறையும் என்கிறார்கள்.. அந்தவகையில், இஞ்சியும் ஒன்று.
செரிமான பிரச்சனைக்கு முக்கிய தீர்வாக இந்த இஞ்சி உள்ளது.. இஞ்சியை காய வைத்து கிடைக்கும் சுக்கிலும் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன. பச்சை இஞ்சியிலும் நிறைய பலன்கள் கிடைக்கின்றன. ஆனால் இஞ்சி தோலில் நஞ்சு இருக்கும். அதனால், நன்றாக சுத்தப்படுத்தி கழுவியே பயன்படுத்த வேண்டும்.

உடல் எடை: விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து என சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.. பசியுணர்வை அதிகரிக்க செய்யும். இஞ்சி சாறில், தேன் கலந்து தினமும் காலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்...
இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு ஸ்பூன் குடித்துவந்தால் நீரிழிவு குறையும். இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வந்தால், ஆஸ்துமா பிரச்சனைக்கு நிவாரணம் கிடைக்கும். தினமும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொண்டால், இதய நோயாளிகளுக்கு மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறதாம்..
அதேபோல, இஞ்சி புற்றுநோய் செல்களின் அபாயத்தை போக்கும் தன்மை கொண்டது. கீமோதெரபி மருந்துகளை விட கருப்பை புற்றுநோய் செல்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் கொன்றுவிடுகிறது இந்த இஞ்சி என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பசி உணர்வுகள் அதிகம் இல்லாதவர்கள், காலையில் சிறிது இஞ்சியை வாயில் போட்டு மென்று வந்தாலே, பசியுணர்வு அதிகரிக்கும்.
யாரெல்லாம் தவிர்க்கலாம்: இஞ்சியை அதிகமாக எடுத்துக்கொண்டால், இஞ்சியின் உறைதல் எதிர்ப்பின் காரணமாக வீக்கம், வயிற்றுப் பிரச்னைகள், இதய பகுதியில் எரிச்சல் போன்றவை ஏற்படும். ஒரு நாளைக்கு 4 கிராமுக்கு மேல் சேர்க்கக்கூடாது என்கிறார்கள்
கர்ப்பிணி பெண்கள், ரத்தக்கோளாறு இருப்பவர்கள், சர்க்கரை நோய், உடல்பருமன், இதயக்கோளாறு உள்ளவர்கள், ஆபரேஷனுக்கு தயாராக இருப்பவர்கள், இஞ்சியை பயன்படுத்தாமல் இருப்பது நல்லதாம்.. அல்லது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும்.,
உடல் எடை: அதேபோல, உடல் இளைக்க விரும்புவோருக்கு, இஞ்சியை விட பெஸ்ட் சாய்ஸ் வேறில்லை.. இஞ்சியில் ஜிஞ்சரோல்ஸ், ஷோகோல்ஸ் என்ற சேர்மங்கள் உள்ளதால், தினமும் இஞ்சியை "மருந்து" போல பயன்படுத்தி வரலாம்.. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இஞ்சியை எப்படியெல்லாம் எடுத்து கொள்ள வேண்டும் தெரியுமா? ஒரு துண்டு இஞ்சியை அரைத்து, ஒரு டம்ளர் மோரில் கரைத்து குடித்து வந்தால், இடுப்புப் பகுதியில் கொழுப்புகளை அண்ட விடாது. ஏற்கனவே உள்ள கொழுப்பையும் கரைக்கும்.
இஞ்சி சாறுடன் தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவந்தால், தொப்பை கரையும். பெருங்குடல் வழியாக செரிமானம் செய்யப்பட்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் இஞ்சி உதவுகிறது. ஆனால், இஞ்சியுடன் சிறிது எலுமிச்சம் சாறையும் கலந்து குடித்தால், இன்னும் பலன் கிடைக்கும்.
எலுமிச்சம் சாறு + இஞ்சி கலந்த ஜூஸ் தயாரித்து வைத்து கொண்டு, தினமும் 2 அல்லது 3 வேளை குடித்தால் போதும்.. உடலிலுள்ள கழிவுகளும், நச்சுக்களும் எளிதாக வெளியேறும்.. உடல் எடையும் மெல்ல குறைய துவங்கும்.
இஞ்சி சாறு: அல்லது, எலுமிச்சம் சாறு + இஞ்சி சாறு + ஆப்பிள் சிடர் வினிகர் + மூன்றையும் தேனில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம். அல்லது க்ரீன் டீ பேக், இஞ்சி டீ பேக் இரண்டையும் சேர்த்து கூடுதல் தண்ணீர் சேர்த்து குடித்து வந்தாலும் பலன் கிடைக்கும். இறைச்சி சமைக்கும்போதும், இஞ்சியை சற்று அதிகமாக பயன்படுத்தி கொள்ளலாம்.. இஞ்சி துவையல், இஞ்சி சட்னி, போன்றவைகளையும் சேர்த்து கொள்ளலாம்.
அதேபோல, இஞ்சி + கொத்தமல்லி சேர்த்த தண்ணீரை குடிக்கலாம்.. அதாவது, இரவு தூங்க செல்லும்போது, ஒரு டம்ளர் நீரில், ஒரு ஸ்பூன் மல்லி விதைகள், ஒரு சிறிய துண்டு இஞ்சியை போட்டு வைத்துவிட வேண்டும்.
இஞ்சி தண்ணீர்: மறுநாள் காலையில் அந்த தண்ணீரை, அப்படியே ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி குடிக்க வேண்டும். இந்த இஞ்சி மல்லி தண்ணீர் குடித்தாலே குடல் பகுதி சுத்தமாகி, உடல் எடை குறைய துவங்குமாம்.












Click it and Unblock the Notifications