மட்டன் வாங்கறீங்களா? ஆட்டுக்கறி கொழுப்பு எடுத்தால் ஒருமுறை இப்படி செய்யுங்க.. அந்த ரசம்தான் ஹைலைட்டே
சென்னை: ஆட்டுக்கறி கொழுப்பு சாப்பிடலாமா? யார் யார் சாப்பிடலாம்? இந்த கொழுப்பு சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?
உடலுக்கு தீங்கு என்று சொல்லியே, சிலர் ஆட்டுக்கறியை ஒதுக்கிவைத்துவிட்டார்கள்.. சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் மட்டும் இந்த ஆட்டுக்கறியை தொடவே கூடாது... நினைச்சுக்கூட பார்க்கக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆரோக்கியம்: ஆனால், உடல் ஆரோக்கியம் மிக்கவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என யாராக இருந்தாலம், மாதம் ஒருமுறையாவது, குறைந்த அளவில் மட்டன் சாப்பிட்டால், உடலுக்கு வலு கிடைக்கும்.. உடல் சூடு தணியும்.. சருமத்துக்கான பளபளப்பு கூடும்.. பார்வை கோளாறுகள் நீங்கும்..
அந்தவகையில், ஆட்டு கொழுப்புகளை எடுத்துக் கொண்டால், அபார ருசியை தரக்கூடியது. அதனால்தான் மட்டன் வாங்கும்போது, கொழுப்புகளை கூடுதலாக கேட்டு வாங்குவார்கள்.. ஓட்டல்களில் சமைக்கப்படும் உணவுகளிலும், இந்த கொழுப்புகளை பயன்படுத்துவார்கள்..
இடுப்பு வலி: இந்த கொழுப்பை நாம் சமைத்து சாப்பிடும்போது, உடலுக்கு வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை தருகிறது.. நம்முடைய நுரையீரல் மற்றும் இடுப்பு பகுதிக்கு நல்ல வலிமையை கூட்டுகிறது. ஆனால், குறைந்த அளவில் சாப்பிட வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சுதானே?!!
இந்த கொழுப்புகளை வைத்து நிறைய சமையல் வகைகளை செய்யலாம். ஆனால் எது செய்தாலும், எண்ணெய் லேசாக ஊற்றி செய்தாலே போதும்.. இந்த கொழுப்பிலிருந்தே நிறைய எண்ணெய்கள் பிரியும்.. இந்த கொழுப்பை அப்படியே வறுத்தும் சாப்பிடலாம் அல்லது கிரேவி போலவும் தயாரித்து சாப்பிடலாம்..
சின்ன வெங்காயம்: ஒரு பாத்திரத்தில் எண்ணெய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் வதக்கி, கொழுப்பையும் அதில் சேர்த்து பிரட்டி, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி 15 அல்லது 20 நிமிடம் வேகவிட வேண்டும். இதை இட்லி, தோசை சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டால் ருசியாக இருக்கும்.
அதேபோல இந்த கொழுப்பில் ரசம் வைப்பார்கள்.. ஒரு குக்கரில் மட்டன், மட்டன் கொழுப்பு இரண்டையும் சேர்த்து, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து 4 விசில் வரைவேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மல்லி இலை ஒரு கைப்பிடி, சின்ன வெங்காயம். பூண்டு பற்கள். சீரகம், மிளகு, சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
கறிவேப்பிலை: ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, அரைத்த மசாலாக்கள், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். இதில், சிறிது தக்காளி விழுது, உப்பு , மிளகாய் தூள் , மல்லிதூள், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். இறுதியில் மட்டன் கொழுப்பு வேகவைத்த நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அவ்வளவுதான் மட்டன் கொழுப்பு ரசம் ரெடி. சிலர், நெஞ்செழும்பு, கொழுப்பு, ஈரல், சுவரொட்டி இதெல்லாம் சேர்த்து, தேங்காய் அரைத்து ஊற்றி குருமா போலவும் செய்வார்கள்.












Click it and Unblock the Notifications