மொச்சைக்கொட்டை.. கொட்டிக்கிடக்கும் ஆச்சரியம்.. கொட்டி கொட்டி கொடுக்கும் நன்மை.. பலே மொச்சை கொட்டை
சென்னை: நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தாலே, இதயநோய்கள் விலகி ஓடிருமாம்.. அப்படிப்பட்ட நார்ச்சத்து நிறைந்த முக்கிய உணவுதான் மொச்சைப்பயிறு.
தியமின், வைட்டமின் C, A, K, B6, தாமிரம், செலினியம், இரும்புச்சத்து, நியசின், ரிபோஃப்ளவின், கோலின், சோடியம், செலினியம், துத்தநாகம், பொட்டாசியம், மக்னீசியம் இப்படி பல சத்துக்களை அடக்கியதுதான் மொச்சைக்கொட்டை.
முக்கியமாக ஆண்டி ஆக்சிடென்ட், தாவர ஸ்டீரால் போன்றவற்றையும் இந்த மொச்சை கொண்டிருக்கிறது. இதிலிருந்து எடுக்கப்படும் லூனாடுசின் என்ற ட்ரிப்சின் - நிலையான நுண்ணுயிர் எதிர்ப்பு பெப்டைடு, மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

நார்ச்சத்து: கரையாத நார்ச்சத்து , சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு, மலச்சிக்கலுக்கான வாய்ப்பை குறைக்கிறது. கரையாத நார்ச்சத்துகள் இழைம வடிவத்தில் இருப்பதால், உணவு செரிமானத்துக்கு உதவுகிறது.. மேலும், குடலிலுள்ள நச்சுப்பொருட்களையும் வெளியேற்றுவதால், பெருங்குடல் அழற்சியை தடுக்கிறது. பெருங்குடல் பகுதியில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்களை தடுப்பதிலும், மொச்சை சிறந்து செயல்படுகிறது.
மொச்சைக் கொட்டையில் குறிப்பிட்ட அளவு நார்ச்சத்து, பொட்டாசியம், போலேட், சபோனின் இருப்பதுதான் இந்த பயிரின் முக்கியத்துவமாகும்.. இதனால், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கவிடாமலும், ரத்த அழுத்தம் அதிகமாகிவிடாமலும் தடுக்கிறது. தமனிகளின் சுவர்கள் அடர்த்தி அதிகரிக்காமல் இருக்க போலேட் சத்துக்கள் உதவுகின்றன.. பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம், இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கிறது.
சிவப்பணுக்கள்: பெண்களுக்கு தேவையான ஆரோக்கிய அம்சங்கள் அத்தனையும் இந்த பயிரில் உள்ளது. ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள், இந்த மொச்சை பயிறை சாப்பிட்டால், இரும்புச்சத்து குறைபாடு நீங்கும்.. ரத்த சிவப்பணுக்கள் அதிகமாக உற்பத்தி செய்ய உதவுகிறது.. இதனால், உடல் சோர்வும் நீங்குகிறது..
கர்ப்பிணிகளுக்கு இந்த பயிறுகளை சமைத்து தருவார்கள். காரணம், கருச்சிதைவு, முன்கூட்டியே பிறப்பு, குறைந்த எடையுடன் குழந்தை பிறத்தல், கருவில் வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் முதுகெலும்பு முழுமையற்ற வளர்ச்சி, மூளையின் பகுதிகளில் ஏற்படும் முழுமையற்ற வளர்ச்சி போன்ற முக்கிய பிறப்பு குறைப்பாடுகளை இந்த பயிறு தடுக்கிறது.
கர்ப்பிணிகள்: ஆனால் கர்ப்பிணிகளுக்கு அதிக மொச்சை நல்லது கிடையாது.. இதனால், குழந்தைக்கு ரத்த சோகை ஏற்படுமாம்.. எனவே, கர்ப்பிணிகள், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று, இந்த மொச்சை பயிறை சாப்பிடலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக மொச்சை உள்ளது.. க்ளைகமிக் குறியீடு குறைவாக இருப்பதால், ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. ஒரு கப் மொச்சைக்கொட்டையில் 38 மில்லி கிராம் சோடியம் இருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தை தவிர்க்க உதவுகிறது.
இந்த கொட்டையிலிருக்கும் ஐசோபிளேவோன்கள் எலும்புகளை மிகவும் சக்தி வாய்ந்ததாக மாற்ற உதவுகிறது.. இதனால், எலும்பு முறிவு ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது. மெனோபாஸ் முடிந்த பெண்களுக்கு முதுமையில் ஏற்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்தும், இந்த பயிறு பாதுகாக்கிறது.
இஞ்சி - பூண்டு: கலோரிகள் குறைவாகவும், கொழுப்புகள் குறைவாகவும் உள்ளதால், உடல் செயல்பாட்டை சீராக பராமரிக்க உதவுகிறது.. இரும்புச்சத்து நிறைந்த இந்த மொச்சைக்காய், தலைமுடி ஆரோக்கியத்துக்கும் நல்லது.. மொச்சையை எப்படி சாப்பிட்டாலும், இஞ்சி, பூண்டு சற்று அதிகமாக சேர்த்து சமைக்கும்போது, வாயுத்தொல்லை ஏற்படாது.. ஆனால், 10,000 வருடங்களுக்கு மேலாக, பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாகவும் இந்த மொச்சை திகழ்ந்து வருகிறது என்றால், அது எவ்வளவு மகத்தான விஷயம்..!!












Click it and Unblock the Notifications