கிட்னி சட்னியாயிடும்..பல் பாழாயிடும்! சாஃப்ட் ட்ரிங்க் சாப்பிட்டால் சங்கு? இத்தனை கெமிக்கல் இருக்கா?
சென்னை: கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் இயற்கையான குளிர்பானங்களை குடிப்பதை தவிர்த்து சாஃப்ட் ட்ரிங்க்ஸ் எனப்படும் செயற்கை பானங்களை பொதுமக்கள் அதிகம் விரும்பி வருகின்றனர். ஒரே ஒரு குளிர்பானத்திற்குள் இத்தனை கெமிக்கல்கள் இருக்கிறதா என்பதை நீங்கள் கேட்டால் மலைத்துப் போய்விடுவீர்கள்.. உடலுக்கு ஒரு சதவீதம் கூட ஊட்டச்சத்து தராத சாஃப்ட் ட்ரிங்க்ஸ் குடிக்கும் பொழுது ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்..
இன்னும் அக்கினி வெயிலே தொடங்கவில்லை அதற்குள் இப்படியா என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் புலம்புவதை பார்க்க முடிகிறது. காரணம் வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயில் அதிகரித்துள்ளது.

மே மாதத்தில் வெயில் உச்சம் தொடும் என எதிர்பார்த்திருந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் இருந்தே வெயில் தனது வேலையைக் காட்டி வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. மேலும் கோடை மழையும் இல்லாததால் வெயிலின் தாக்கம் மிக அதிகரித்திருக்கிறது
குளிர்பானங்கள்: இதனால் வெயிலுக்கு இதமாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு தரப்பு மக்களும் குளிர்பானங்களை நாடத் தொடங்கி இருக்கின்றனர் குறிப்பாக இருசக்கர வாகனங்களில் வேலை செய்வோர் வெளியில் அதிகம் சுற்றுவோர் சாலை இயற்கையான நீர்மோர், இளநீர், தர்பூசணி, பழச்சாறு வகைகளை தவிர்த்து விட்டு பல்வேறு வண்ணங்களிலும் சுவைகளிலும் இருக்கும் சாஃப்ட் ட்ரிங்க்ஸ் வகைகளை தேடி வாங்கி குடித்து வருகின்றனர். இது உடலுக்கு மிகவும் தீமை பயக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
செயற்கை பொருட்கள்: பொதுவாக வெறும் தண்ணீரில் கார்பன் டை ஆக்சைடு வாயுவை கலந்தாலே அது சோடாவாக மாறிவிடும். அதோடு பல்வேறு நிறமூட்டிகளையும் சுவையூட்டிகளையும் தண்ணீரில் கலந்து விற்கப்படும் சாப்ட் ட்ரிங்க்ஸ்களை மக்கள் அதிகம் விரும்பி வருகின்றனர். ஆனால் அவற்றில் ஒரு சதவீதம் கூட உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. மேலும் கூடுதலாக சுவைக்காகவும் நிறத்துக்காகவும் சேர்க்கப்படும் ரசாயனங்களால் உடலுக்கு பாதிப்பையை ஏற்படும் என்கின்றனர்.
நிறைய பிரச்சினைகள்: வெயில் காலம் வந்து விட்டாலே மென்பானங்களை பொதுமக்கள் நாடிச் செல்வதற்கு காரணம் அதிக அளவிலான விளம்பரம் தான் என்கின்றனர். நடிகர்களையும் விளையாட்டு வீரர்களையும் குளிர்பான விளம்பரங்களுக்கு நடிக்க வைக்கும் போது அது வெகுவாக மக்களை சேர்ந்து விடுகிறது. இதனால் கவரப்பட்டு அவர்களும் அதனை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அதில் இருக்கும் சிக்கல்களை யாரும் பார்ப்பதில்லை. உதாரணத்திற்கு பிரபல குளிர்பானங்களை கர்ப்பிணிப் பெண்களும் சிறு குழந்தைகளும் குடிக்க கூடாது என அதிலேயே எழுதி இருப்பதை நாம் யாரும் கவனிப்பதில்லை.
வேதிப் பொருட்கள்: அப்படி என்ன என்ன இரசாயனங்கள் தான் குளிர்பானங்களில் இருக்கிறது என்பதை இதில் இந்த பதிவில் பார்க்கலாம். குளிர்பானங்களில் கார்பன் டை ஆக்சைடோடு பிரக்டோஸ் எனும் செயற்கை சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இது அந்த குளிர்பானத்திற்கு இனிப்பு சுவையை கொடுக்கும். அதேபோல சுவைக்காக காஃபின், சிட்ரிக் ஆசிட், பாஸ்பரிக் ஆசிட், கேரமல், பீட்டா கரோட்டின் ஆகியவையும் பயன்படுத்தப்படுகின்றன. இது மட்டுமல்லாமல் செயற்கை சுவையூட்டிகள் நிறமூட்டிகள் பதப்படுத்தும் பயன்படும் பொருட்கள் ஆகியவையும் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன.
உடலுக்கு பாதிப்பு: இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம் உடல் உறுப்புக்கு பாதிப்பை தருகின்றன. மென்பானங்களில் அதிக அளவு பிரக்டோஸ் கார்ன் சிரப்பை பயன்படுத்தப்படும்போது அது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இதனால் இன்சுலின் சுரப்பு குறைந்து சர்க்கரை நோய் வரை கொண்டு செல்லும். அது மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சனை வருவதும் இதனால் தான். மேலும் அந்த மென்பானங்களில் பாஸ்போரிக் அமிலம் அதிகமாக இருக்கிறது. இது பற்களை பாதித்து அதன் ஆயுளை குறைப்பதோடு எலும்புகளில் கால்சியம் சத்து குறைபாடை அதிகப்படுத்தி எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சியை பாதிக்கிறது.
எது நல்லது?: அடிக்கடி இதுபோன்ற சாஃப்ட் ட்ரிங்க்ஸ் குடிக்கும் பொழுது சிறுநீரக பிரச்சினை ஏற்படும். ஒரு கட்டத்தில் அது புற்றுநோயை உருவாக்க கூட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். மேலும் பொட்டாசியம் சோடியம், பெக்டின், அல்ஜிநெட் உள்ளிட்ட பல்வேறு வேதி பொருட்களும் இந்த குளிர்பானங்களில் இருப்பதால் இவற்றை தவிர்ப்பது நல்லது என்கின்றனர். பழம் சாப்பிடுவதும் பழச்சாறுகளை அருந்துவதும் உடலுக்கு நல்லது எனக் கூறும் மருத்துவர்கள், இதனால் இயற்கையாக கிடைக்கும் சத்துக்களோடு உடலுக்கு தேவையான குளிர்ச்சியையும் கொடுக்கும் என்கின்றனர். பிரிட்ஜில் வைத்த தண்ணீரை குடிப்பதை விட தர்பூசணி, இளநீர், பப்பாளி, சாத்துக்குடி ,ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களையோ அல்லது அவற்றின் பழச்சாறுகளையும் குடிப்பதும் கோடையில் குளிர்ச்சியாக இருக்க இளநீரை பயன்படுத்துவது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.












Click it and Unblock the Notifications