ஆணுறுப்பில் வெடிப்பு இருக்கா? இணையும் போது வலியா? கேர்லெஸ்ஸா இருந்தால் என்னவாகும் ?
சென்னை: இனப்பெருக்க நலன் குறித்து மருத்துவரிடம் கூறுவதற்கு தயங்கவே கூடாது என டாக்டர் பரூக் அப்துல்லா அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கூறியிருப்பதாவது: கேட்காத கேள்வியும், சொல்ல விரும்பும் பதிலும், சமீபத்தில் கிளினிக்கில்,
வெளிநாட்டில் கடந்த பல வருடங்களாக பணி நிமித்தம் வாழும் சகோதரர் ஒருவர் தனது நீரிழிவு நோய்க்காக சந்தித்தார். இரு வருடங்களுக்கு ஒருமுறை ஒருமாத விடுப்பில் கூட குடும்பத்துடன் வாழ்ந்து நினைவுகளை சுமந்து கொண்டு வானூர்தி ஏற்பவர் அவர்.

ஒவ்வொரு முறை வரும் போதும் கட்டாயம் முழு உடல் பரிசோதனை ( ரத்தப் பரிசோதனை; ஸ்கேன் ; ஈசிஜி ; எக்கோ ) என அனைத்தையும் நான் மாடக்கூடல் நகராம் மதுரை மாநகரில் எடுத்துக் கொண்டு வந்துவிடுவார். அவரது பரிசோதனை முடிவுகளில் ரத்த சர்க்கரை அளவுகள் சற்று கட்டுபாடற்று இருந்ததைக் காண முடிந்தது.
அதற்குண்டான காரணத்தையும் அவரே விளக்கினார். கடந்த சில மாதங்களாக உணவு முறையில் கட்டுப்பாடு இல்லை. கூடவே அதிக மன அழுத்தம் இருப்பதையும் பகிர்ந்தார். அவருக்கான உணவுப் பரிந்துரையை எழுதி மருந்துகளில் மாற்றங்கள் செய்து விட்டேன். "மீண்டும் ஊருக்குக் கிளம்புறதுக்கு முன்னாடி ஒரு ரத்த டெஸ்ட் எடுத்துட்டு வாங்க... பாத்துருவோம்.. அதுக்கேத்த மாதிரி டயட்டும் மாத்திரையும் எழுதித் தரேன்" என்றேன்.
"ஓகே சார். அப்படியே ஆகட்டும்" என்று விடை பெற்றார். அவர் வெளியே சென்ற சில மணித்துளிகளில் அவரை மீண்டும் உள்ளே அழைத்தேன். "மனைவியுடன் இணைவதில் ஏதும் பிரச்சனை இருக்கா சார்?" அவரும் சற்று தயக்கத்துடன் "ஆமா சார்... நானும் உங்க கிட்ட கேக்கணும்னு நினைச்சேன் ஆனா ரொம்ப சங்கோஜமா இருந்துச்சு சார். நல்லவேளை நீங்களே கூப்ட்டு கேட்டுட்டீங்க. ரொம்ப தேங்க்ஸ் சார்"
" ஆமா சகோ.. சாப்பாடு - எக்சர்சைஸ் - மன அமைதி - மாதிரி இணையுடன் சேர்தலும் தேவைகள்ல ஒன்னுதான். அதுவும் பல மாதங்களுக்கு ஒரு முறை சில வாரங்கள் விடுப்பில் வரும் போது அதற்கான தேவை கண்டிப்பாக இருக்கும். இப்ப சொல்லுங்க என்ன பிரச்சனை?" "ஆணுறுப்பு முன் தோல்ல வெடிப்பு வெடிப்பா ஏற்பட்டு சேரும் போது வலிக்குது சார். அதைத்தான் எப்டி கேக்குறதுனு தெரியாம இருந்தேன்"
"இது ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது ஆண்களுக்கு வர்ற பிரச்சனை. இதுக்கு சிகிச்சை இருக்கு. இந்த மாத்திரையும் களிம்பும் போடுங்க.. டயட் கண்ட்ரோல் பண்ணுங்க.. விறைப்புத் தன்மை ஓகேவா இருக்கா?" "விரைப்புத் தன்மை ஓகே வா இருக்கு சார்.. பிரச்சனை இல்லை" "மகிழ்ச்சி... பயணம் கிளம்புறதுக்கு முன்னாடி டெஸ்ட் எடுத்துட்டு வாங்க பாப்போம்" என்றேன்
தொற்றா நோய்கள் சிகிச்சையில் குறிப்பாக நீரிழிவு சிகிச்சையில் உணவு , உறக்கம், மன அழுத்தம், உடல் உழைப்பு ஆகியவற்றைப் பற்றி முக்கியத்துவம் வழங்கப்படுகிறது . கூடவே இனப்பெருக்க நலம் குறித்தும் கவனம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை கொள்கையில் இணைத்துள்ளேன். தங்களது மருத்துவர்களிடம் இனப்பெருக்க நலன் குறித்த ஐயங்களை தயக்கமின்றி வினவுங்கள். உரையாடுங்கள். உடனே சிகிச்சை பெறுங்கள்.
இனப்பெருக்க நலன் என்பது ஒருவர் சார்ந்தது அன்று அது இணையர் இருவரையும் சார்ந்தது என்பதால் நிச்சயம் வாழ்வின் அங்கமான
இனப்பெருக்க நலனுக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருவது பல உறவுச் சிக்கல்களில் இருந்து காப்பாற்றி குடும்பத்தின்/ பரஸ்பர இணையர் உறவின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் என்பது உண்மை. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications