நீரிழிவு நோயாளிகள் ரமலான் நோன்பை கடைப்பிடிக்கலாமா? மருத்துவர் விளக்கம்
சென்னை: நீரிழிவு நோயாளிகள் ரமலான் நோன்பை கடைப்பிடிக்கலாமா என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனையின் பொது மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இறைவனுக்கே புகழனைத்தும்.
ரமலான் என்பது இஸ்லாமியர்களுக்கு புனித மாதமாகும். சங்கைமிகு திருக்குர்ஆன் முதன்முதலில் இறைவனிடம் இருந்து முகம்மது நபி ( அவர் மீதும் அவர் தம் குடும்பத்தார் மீதும் இறைவனின் அருள் உண்டாவதாக) அவர்களுக்கு இறக்கி வைக்கப்படத் தொடங்கியது.

இந்த மாதத்தின் நாட்கள் முழுவதிலும் பகலவன் புலர்ந்து மறையும் வரை இஸ்லாமியர்கள் அனைவரும் நோன்பு இருக்க வேண்டும் என்பது நிச்சயிக்கப்பட்ட கட்டாய கடமையாகும். இந்நிலையில் பேலியோ கடைபிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு இருக்கும் சந்தேகம், பேலியோவை ரமலானின் எப்படி அணுகுவது என்பது தான்.
இந்த கட்டுரையில் பேலியோவை ரமலானோடு அணுகுதலில் மூன்று நிலைகளாக பிரித்துப் பார்ப்போம்.
முதல் நிலை - எந்த நோயும் இல்லாதவர்கள்: Persons with no comorbidities அதாவது நீரிழிவு, ரத்த கொதிப்பு , இதய நோய் , மூட்டு வாதம் போன்ற எந்த நோய்க்காகவும் பேலியோவில் இல்லை. நாங்கள் எடை குறைப்புக்கு மட்டுமே பேலியோ கடைபிடிக்கிறோம் என்பவர்களுக்கு
அதிகாலை சூரியன் துயில் களையும் முன் உண்ணும் கடமையான உணவுக்குப் பெயர் - சஹர். காலை சஹர் உணவாக 200 மில்லி முழுக்கொழுப்பு பால், அதில் 30 கிராம் வெண்ணெய் கலந்து பட்டர் டீ அல்லது காபி பருகவும்.
அதனுடன் 4 முட்டைகள் கூட குழம்பு அல்லது 100 கிராம் மாமிசம் உண்ணலாம். இது ஒரு முழுமையான சஹர் உணவு . சஹர் நேரத்தில் தண்ணீர் - மினிமம் ஒரு லிட்டர் அளவு பருக வேண்டும். அதிகபட்சம் இரண்டு லிட்டர் வரை பருகலாம். அந்த ஒரு லிட்டரை
250 மில்லி மோர் + 250 மில்லி உப்பிட்ட லெமன் ஜூஸ் + 500 மில்லி தண்ணீர் என்றும் பருகலாம்.
மாலை சூரிய அஸ்தமனத்தில் நோன்பை விடுவதற்கு உண்ணும் உணவின் பெயர் - இஃப்தார். பேலியோ உணவு முறையில் இருப்பவர்கள் இஃப்தார் உணவாக 200 கிராம் கலவையான காய்கறிகளில் செய்த சூப் அல்லது காலிபிளவர் ஹலிம் பருகலாம். இது காமன் மேன்கள் பருகும் நோன்புக்கஞ்சிக்கு பதிலாக நாம் பருகும் பானம்.
நோன்பை விடும் போது திரவ உணவாக இருப்பது சிறப்பு ஆதலால் இந்த நடைமுறை.
இஃப்தார் ஸ்நாக்ஸாக
1.கொய்யா காய்
2. வெள்ளரிக்காய்
3. பன்னீர் வடை
4. பன்னீர் டிக்கா
5.இனிப்பு சேர்க்காத சப்ஜா விதைகள் கலந்த பானம்
6. இனிப்பு சேர்க்காத கடல் பாசி எனும் அகர் அகர்
ஆகியவற்றை உண்ணலாம்.
இஃப்தாரில் தண்ணீர் - ஒரு லிட்டர் பருக வேண்டும்.
(250 மில்லி மோர் + 750 மில்லி தண்ணீர்) தண்ணீரை அதிக குளுமையுடன் குடிப்பது நல்லதல்ல. இது தொண்டையில் புண் உண்டாக்கும் ஆபத்து உண்டு. மண்பானை நீர் பருகலாம். இரவு உணவாக 300 கிராம் அளவு , மாமிசம் உண்ண வேண்டும். அது மீனாகவோ ,
சிக்கனாகவோ, மட்டனாகவோ, பீஃபாகவோ இருக்கலாம்.
உங்கள் இடத்தில் எது செளகரியமாக கிடைக்கிறதோ அந்த மாமிசத்தை உண்ண வேண்டும். இறைவன் நாடினால், ரமலான் மாதம் சிறப்பாக செல்லும்.
இரண்டாம் நிலை நோய் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்:
1.நீரிழிவு இருப்பவர்கள் - மேற்சொன்ன உணவு முறையை கடைபிடிக்கலாம். அவர்கள் நீரிழிவிற்கு போடும் மாத்திரையை காலை சஹர் நேரத்தில் போடக்கூடாது.
(குறைந்த ரத்த சர்க்கரை அளவுகள் Hypoglycemia வந்து தலைசுற்றல்/ மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு)
மாலை இஃப்தார் உண்ணும் போது மாத்திரையை போட்டு விட வேண்டும்.
சர்க்கரை கடந்த மூன்று மாதங்களாக HbA1c 10 என்ற அளவுக்கு மேல் இருப்பவர்கள் நோன்பை இம்முறை முயற்சிக்காமல் இருப்பது உடலுக்கு நல்லது. காரணம் இவர்களுக்கு மூன்று வேளையும் மாத்திரைகள் தேவைப்படும் மேலும் சிலருக்கு இன்சுலின் தேவைப்படலாம். இன்சுலினின் தேவை இருக்கும் டைப் ஒன்று மட்டும் டைப் இரண்டு நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் நோன்பு வைக்கக் கூடாது.
இது உயிருக்கு ஆபத்தாக முடியலாம்.
நீரிழிவு நோயாளிகள் நோன்பு வைக்கும் போது கட்டாயம் கையில் எப்போதும் சீனி/ நாட்டு சர்க்கரை வைத்திருக்க வேண்டும். (Hypoglycemia alert) மயக்கம் / படபடப்பு/ தலைசுற்றல் ஏற்பட்டால் உடனே வாயில் போட்டுக்கொண்டு காலை நீட்டி படுத்து விட வேண்டும். நோன்பை அதற்குப்பிறகு தொடரக்கூடாது. மருத்துவரை அணுக வேண்டும்.
2. ரத்த கொதிப்பு உள்ளவர்கள் - காலை, இரவு இரண்டு வேளையும் மாத்திரை போட வேண்டிய தேவை இருப்பவர்கள், காலை மாத்திரையை சஹர் உணவுக்கு பிறகும் இரவு மாத்திரையை இஃப்தாருக்குப் பிறகும் போட வேண்டும். ஒரு வேளை மட்டும் மாத்திரை போட வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள் , இஃப்தாருக்கு பிறகு அந்த மாத்திரையை போடலாம்.
ரத்த கொதிப்புடன் நோன்பு இருப்பவர்கள், தனியாக இருசக்கர வாகன பயணங்கள் / வெயிலில் அலைவது போன்ற வேலைகளை தவிர்ப்பது நலம்.
3. இதய நோயாளிகள்- நோயாளிகளுக்கும் முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் காலத்துப்பெண்களுக்கும் நோன்பில் இருந்து விலக்கு உண்டு என்பதால் ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் / இதய ரத்த நாள நோய் இருப்பவர்கள் / ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டவர்கள் / ஸ்டெண்ட் வைக்கப்பட்டவர்கள் யாவரும் நோன்பில் இருந்து விலக்கு பெறலாம்.
இருப்பினும் நோன்பு வைக்க விரும்பினால், அதில் குறுக்கிடும் உரிமை யாருக்கும் இல்லை. இப்போது என்ன செய்ய வேண்டும் ? இதய நோய் தனியாக வருவதில்லை, கூடவே நீரிழிவு / ரத்த கொதிப்பு போன்றவை இருக்கும். ஆகவே , நீரிழிவு / ரத்த கொதிப்புக்கு முன் சொன்ன முறைகளில் மாத்திரைகளை எடுக்க வேண்டும். இதய நோய்க்கான மாத்திரைகளை ஒருபோதும் நிறுத்தக்கூடாது.
நோன்பு வைப்பதற்கு முன் உங்கள் இதய மருத்துவரிடம் ஒப்புதல் பெறுவது நல்லது. இவர்கள் நோன்பு வைத்துக் கொண்டு தனியாக பயணம் செய்ய தடை செய்யப்பட்டவர்கள் ஆகிறார்கள். எங்கும் இவர்கள் தனியாக செல்ல அனுமதிக்கப்படக் கூடாது.
அடுத்த நிலை வாரியர் உணவு முறையும் பேலியோவும்
உடல் எடை குறைக்க பேலியோ கடைபிடிப்பவர்கள் , காலை சஹராக இரண்டு அவித்த முட்டை மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் மட்டும் எடுக்க வேண்டும். இஃப்தார் உணவாக, 200 கிராம் காய்கறி சூப், இரவு மெகா மீலாக 400 முதல் 500 கிராம் மாமிசம் எடுத்தால்
போதும். சஹர் உணவு என்பது கடமையாக்கப்பட்டுள்ளதால் ஒன்று அல்லது இரண்டு அவித்த முட்டை உண்ணலாம்.
அவித்த முட்டையில் ஜுரோ கார்ப் ஆதலால் உடல் கீடோ மோடில் இருந்து விலகாமல் இருக்கும். இதனுடன் அடுத்த பதினான்கு மணி நேர Dry fasting சேரும் போது உடல் எடை குறைவது இலகுவாகும்.
அவசியமான எச்சரிக்கை:
நோன்பு வைத்திருக்கும் போது வெயிலில் அலைவது / அதிக தூரம் நடப்பது / ஓடுவது/ கடின உடற்பயிற்சி செய்வது இவை யாவும் தேவையற்றவை. காரணம் இவற்றை செய்து நோன்பை முறிப்பதற்கு இவற்றில் ஏதோவொன்று காரணமாக ஆகிவிடலாம்.
பின் குறிப்பு
நீரிழிவு / ரத்த கொதிப்பு / இதய நோய் போன்ற நோய்கள் இருப்பவர்கள் அவரவர் மருத்துவர்களிடம் காண்பித்து தங்கள் உடலின் நோன்பு இருப்பதற்கான தகுதியை உறுதி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கோடை வெயிலுடன் ரமலான் மாதம் சாலஞ்சாக இருக்கப் போகிறது. நீர்ச்சத்துக் குறைபாடில்லாமல் தண்ணீர் பருகி வெயிலில் அலையாமல் நோன்பை நோற்க வேண்டும்.
இறைவனிடம் இருந்து வரும் சோதனைகளின் போது பொறுமையும் நம்பிக்கையும் கொண்டோரே வெற்றியாளர்கள். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications