நீரிழிவு நோயாளிகள் இந்த விஷயத்தில் மட்டும் வாக்கிங் நண்பர்கள் சொல்வதை கேட்கவே கூடாது
சென்னை: நீரிழிவு நோயாளிகள் இந்த விஷயத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள், வாக்கிங் நண்பர்கள் என எதை சொன்னாலும் கேட்கவே கூடாது என டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
சர்க்கரை நோய் எனும் நீரிழிவு குறைபாடு இருப்பவர்கள். சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை நான் ஆதரிப்பதில்லை. ஏன் ? நீரிழிவு குறைபாடு இருப்பவர்கள் பலரும் "இனிப்பு" சேர்க்க வேண்டாம் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் பக்கத்து வீட்டுகாரர் கூறினார் என்றும்
வாக்கிங் நண்பர் கூறினார் என்றும் சீனி சேர்ப்பதை நிறுத்தி விட்டு தங்களுக்கு தோதாக நாட்டு சர்க்கரை சேர்க்க ஆரம்பிக்கிறார்கள்.

இது தவறென்று அவர்கள் உணர வேண்டும். நீரிழிவு நோயர்களைப் பொருத்தமட்டில் சீனி , நாட்டு சரக்கரை , பனங்கற்கண்டு, கருப்பட்டி , தேன், இனிப்பான பழங்கள் என்று அனைத்தும் ரத்த சர்க்கரை அளவுகளை அதிகமாக உயர்த்துபவையே.
இதில் சீனியும் நாட்டு சர்க்கரையும் கரும்பில் இருந்து வருபவையே. எனவே இரண்டும் நீரிழிவு நோயரின் ரத்த க்ளூகோஸ் அளவுகளை உயர்த்துவதில் ஒன்று தான் என்று உணர வேண்டும். இதற்கடுத்த படியாக சுகர் ஃப்ரீ எனும் மாத்திரையை பொடியை பலர் பயன்படுத்தி வருகிறார்கள். சுகர் ஃப்ரீ தீவிரமாக ரத்த க்ளூகோஸ் அளவுகளை உயர்த்துவதில்லை என்றாலும் நமது மூளையில் இனிப்பு சுவை உருவாக்கும் போதை என்பது தொடர்ந்து சுகர் ஃப்ரீ உபயோகப்படுத்துபவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும்.
என்ன ? இனிப்பு சுவை போதையை உருவாக்குமா? ஆம்... ஒவ்வொரு முறை நாம் இனிப்பு சுவையை சுவைக்கும் போதும் . மூளையின் ஊக்கமளிக்கும் மண்டலம் தூண்டப்பட்டு மறுமுறை இனிப்பு சுவையை விரும்பி உண்ணச் செய்கிறது. இதனால் நாம் இனிப்பு சுவை தரும் போதைக்கு அடிமையாகிறோம். எப்படி மது அருந்துபவர் கொகைன் கஞ்சா போன்றவற்றை எடுப்பவர் அந்த விசயங்கள் தரும் போதைக்கு அடிமையாகிறாரோ அதே போல் தான் இந்த இனிப்பும் செய்கிறது.
இதனால் தான் சீனியை நிறுத்தச் சொன்னால் நம் மனம் நாட்டு சர்க்கரைக்குத் தாவுகிறது. நாட்டு சர்க்கரையை நிறுத்தச் சொன்னால் பனங்கருப்பட்டிக்குத் தாவுகிறது. அதையும் நிறுத்தச் சொன்னால் இறுதியில் சுகர் ஃப்ரீக்கு வருகிறது. இப்படி சுகர் ஃப்ரீ போட்டு பருகுபவர்களுக்கு இந்த இனிப்பு சுவை மீது மூளைக்கு போதையும் அடிமைத்தனமும் இருந்து கொண்டே இருக்கும்.
எனவே எப்போதெல்லாம் இனிப்பான ஸ்வீட் (இனிப்புப் பண்டங்கள்), சாக்லேட்( இனிப்புக் கட்டி) , ஐஸ்க்ரீம்( பனிக்கூழ்) , அல்வா ( இனிப்புக் களி) போன்றவற்றைக் காணுங்காள் நாக்கு ஊறி மூளையில் உள்ள போதை மையம் தூண்டப்பட்டு அதை உண்பார்கள். கூடவே தேவைக்கு மீறியும் அரிசி கோதுமை போன்ற தானியங்களினால் செய்யப்பட்ட உணவுகளைக் குறைத்து உண்டாலும் நொறுக்குத் தீணி விசயத்தில்
எல்லை மீறுபவர்களாக இருப்பார்கள்.
இவ்வாறு மாவுச்சத்து சார்ந்த இனிப்பு சார்ந்த விசயங்களை தொடர்ந்து அதிகமாக உண்ணச் சொல்லி மூளை உந்திக் கொண்டே இருப்பதை தான் "க்ரேவிங்" ( அடங்காத அவா) என்று அழைக்கிறோம். இத்தகைய க்ரேவிங்கை மனதால் கட்டுப்படுத்துவது கடினம். இந்த க்ரேவிங்கை வெகுவாகக் கட்டுப்படுத்திட முதன்முதலில் செய்ய வேண்டியது இனிப்பு சுவை கொண்ட அனைத்தையும் ஒதுக்குவதாகும்.
எனவே நீரிழிவு நோயர்கள் இன்றிலிருந்து தாங்கள் பருகும் தேனீரையோ ( டீ) , கொட்டை வடிநீரையோ ( காபி), சீனி நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு, கருப்பட்டி, சுகர் ஃப்ரீ, தேன் என்று எதையும் கலக்காமல் பருகலாம். பாலில் கூட லாக்டோஸ் எனும் இயற்கையான இனிப்பு இருப்பதால் அடங்காத நீரிழிவு இருப்பவர்கள் பால், டீ, பால் காபி பருகுவதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு இனிப்பு சேர்க்காத ப்ளாக் டீ , இனிப்பு சேர்க்காத ப்ளாக் காபி , இனிப்பு சேர்க்காத க்ரீன் டீ என்று பருகுவது அவர்கள் ரத்த சர்க்கரை அளவுகளை குறைக்கும் மந்திரமாகும்.
இதைக் கூற எனக்குத் தகுதி இருப்பதாகவே நினைக்கிறேன். காரணம் நான் கடந்த எட்டு வருடங்களாக இனிப்பு சுவை சேர்ப்பதில்லை. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications