குழந்தை பால் குடிக்காட்டி.. தொக்கம் எடுக்கலாமா? அதென்ன தொங்கல்.. டாக்டர் பரூக் விளக்கம்
சென்னை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்று வலி ஏற்பட்டால் தொக்கம் எடுக்கும் பழக்கம் சரியா தவறா என்பது குறித்து சிவகங்கை மருத்துவமனை டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கூறியிருப்பதாவது: குழந்தைகள் முதல் பெரியவர் வரை வயிற்று வலிக்கு தொக்கம் / தொங்கல் எடுக்கும் பழக்கம் இன்னும் தொடர்கிறது. சிறிய மரத்தாலான குழல் போன்ற கருவி கொண்டு வாயில் விட்டு உறிஞ்சி குழந்தையின் வயிற்றில் இருந்து எலும்புத் துண்டு முறுக்கு , கடலை , போன்ற விசயங்கள் செரிமானம் ஆகாமல் இருந்ததாகக் கூறப்படும்.

குழந்தைகளுக்கு வயிற்று வலி , வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும் போது அதன் காரணத்தை அறிய மருத்துவம் பயின்ற மருத்துவர்களிடம் அழைத்துச் செல்வதே சரியான நடைமுறை. நமது உடற்கூறியின்பால் நமக்கு இருக்கும் அறியாமையை வைத்து தொக்கம் தொங்கல் ஊதி எடுத்தல் போன்ற மூட பழக்க வழக்கங்கள் தொடர்ந்து நடக்கின்றன.
நாம் உண்ணும் உணவு சாதாரணமாக இரைப்பைக்குள் சில மணிநேரங்கள் மட்டுமே இருக்கும். அதற்குப் பின்பு குடலுக்குச் சென்று விடும். வாயில் இருந்து உணவை நமது இரைப்பைக்கு ( STOMACH) கொண்டு சேர்ப்பது உணவுக் குழாய் ( OESOPHAGUS ) ஆகும் . இந்த உணவுக்குழாய் இரைப்பையில் சேரும் இடத்தில் சுருக்குப்பை போன்ற தசை அமைப்பு உண்டு.
இது உணவு உண்ணும் நேரம் தவிர ஏனைய நேரங்களில் சுருக்கப்பட்டு இரைப்பையில் இருந்து உணவையோ இரைப்பையின் செரிமான நொதிகளையோ மேல் நோக்கி வராமல் பார்த்துக் கொள்ள இருக்கும் அமைப்பாகும். இரைப்பையில் உள்ள பலம் மிகுந்த அமிலம் மற்றும் நொதிகளின் தன்மையால் செரிமானம் செய்யப்பட்ட உணவு "கூழ்" வடிவத்தில் குடலுக்கு செல்லும். இரைப்பையில் இருந்து குடலுக்குள் சென்று விட்ட உணவுக்கூழ் மீண்டும் இரைப்புக்கு மேலேறாத வண்ணம் அங்கு ஒரு சுருக்குப்பை அமைப்பு உண்டு.
இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது இரைப்பைக்குள் சென்ற உணவை சிறிய குழல் மூலம் ஊதி உறிஞ்ச முடியாது. இரைப்பைக்கு சென்று விட்ட உணவு சில மணிநேரங்களுக்கு மேல் அங்கு இருப்பதில்லை. குடலுக்கு சென்று விட்ட உணவு
மீண்டும் இரைப்பைக்கு மேலேற இயலாது. மலமாக ஆசன வாய் வழியாகவே வெளியேற முடியும். சிசு மற்றும் குழந்தைகளைப் பொருத்தவரை வயிற்று வலி வாந்தி வயிற்றுப் போக்கு உணவு உண்ணாத நிலை பால் குடிக்காத நிலை போன்றவை
கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறி உடனே மருத்துவரிடம் காட்டி சிகிச்சை அளித்து நீரிழப்பையும் கிருமித் தொற்றையும் சரி செய்ய வேண்டும்.
அதை விடுத்து தொங்கல் தொக்கம் எடுக்கச் சென்றால் அதன் மூலம் பிரச்சனைக்குரிய தொற்றுகள் குழந்தைக்கு ஏற்படக்கூடும். அதனால் தொற்று தீவிரமடைந்து (SEPSIS) சிசு / குழந்தை மரணம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications