மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இன்று தொடக்கம்.. ஆன்லைனில் சுய பதிவு செய்வது எப்படி?
சென்னை: நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பான முதல் கட்ட பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. 16வது மக்கள் தொகையாக இது நடைபெறவுள்ளது. இன்று முதல் சுய கணக்கெடுப்பு பணி ஆன்லைன் மூலம் தொடங்குகிறது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வீட்டு கணக்கெடுப்பு பணி தொடங்கும். இந்த பணிகள் எப்படி நடைபெறும் என்பது குறித்து அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 1872 ஆம் ஆண்டில் இருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 1881 ஆம் ஆண்டில் இருந்து ஒரே கட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒருமுறையும் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 2011 ஆம் வருடத்தில் நாட்டின் 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில் 16வது கணக்கெடுப்பு நாடு முழுவதும் இன்று தொடங்கியுள்ளது.

சுய கணக்கெடுப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வீட்டு பட்டியல் மற்றும் வீடு வசதி கணக்கெடுப்பு என மொத்தம் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. இன்று முதல் சுய கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. பொது மக்கள் https://se.census.gov.in என்கிற இணையதளத்தில் தங்களின் சுய விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக 16 மொழிகளில் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. வருகிற 31 ஆம் தேதி வரை மக்கள் தங்கள் சுய விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
சுய விபர பதிவுகளை அதிகாரிகள் நேரில் வரும்போது ஆய்வு செய்வார்கள். ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வீட்டு கணக்கெடுப்பு பணி தொடங்கும். ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை வீட்டு பட்டியல் மற்றும் வீடு வசதிகணக்கெடுப்பு பணி நடைபெறும். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "சுய கணக்கெடுப்பு பதிவேற்றத்துக்கு பிறகு ஒரு அடையாள எண் உருவாகி அனுப்பப்படும். அதை பொது மக்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
33 கேள்விகள்
இந்த கணக்கெடுப்பில், வீடுகளின் நிலை, குடிநீர் வசதி, சுகாதாரம், மின்சாரம், இணைய வசதி, சமையல் எரி பொருள் வசதி, கழிவறை வசதி, வாகனங்கள், உணவு முறை, கைபேசி, தொலைக்காட்சி, மடிக்கணினி உள்ளிட்ட 33 கேள்வி கேட்கப்படும். வீட்டு பட்டியல், வீடுவசதி கணக்கெடுப்பு பணிகளுக்கு பிறகு 2027 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். நாடு முழுவதும் ஒரே கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறும். ஏப்ரல் இறுதியில் இதன் முடிவுகள் வெளியிடப்படும்" என்றனர்.
பதிவு செய்வது எப்படி?
வீடு மற்றும் வசதிகள் குறித்து குடும்பத் தலைவர் அல்லது குடும்பத்தில் இருப்போர் குடும்பத் தலைவர் அல்லது தலைவி சார்பில் பதிவு செய்யலாம். பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை வேறு குடும்பத்தினர் பயன்படுத்த இயலாது. குடும்பத் தலைவர், தலைவி பெயரை மாற்ற முடியாது.
1. முதலில் https://se.census.gov.in/ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
2. மாநிலம், யூனியன் பிரதேசத்தை தேர்வு செய்து கேப்ட்சாவை உள்ளீடு செய்ய வேண்டும்.
3. இதன் பின்னர் வரும் அறிவிப்பில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதற்கான விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
4. குடும்பத் தலைவர் அல்லது தலைவியின் பெயர் மற்றும் செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
5. விருப்ப மொழியைத் தேர்வு செய்ய வேண்டும்.
6. பின்னர், ஒன் டைம் பாஸ்வேர்ட் எனும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் மூலம் பதிவு செய்யப்பட்டது உறுதி செய்யப்படும்.
7. மாவட்டம், முக்கிய இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
8. பின்னர் வரும் மேப் பகுதியில் நமது வீடு இருக்கும் பகுதியைத் தேர்வு செய்து சேமிக்க வேண்டும்.
9. தொடர்ந்து கேள்வித்தாள் பக்கம் வரும். இதில் வரும் பெரும்பாலான கேள்விகள் விருப்பங்களைத் தேர்வு செய்யும் முறையில் அமைந்துள்ளது. பதில்களை பதிவு செய்ய விர்ச்சுவல் கீ போர்டு வசதியும் உள்ளது.
10. சந்தேகங்களை தீர்க்க தேவையான FAQ மற்றும் தீர்வுகள் அளிக்கும் வசதியும் இங்குள்ளன.
11. இதில் ஏதாவது கேள்விகள் அல்லது தகவல் விடுபட்டிருந்தால் அதனை உங்களுக்கு இணையதளமே நினைவுபடுத்தும். பின்னர், அனைத்து விவரங்களையும் செக் செய்து கொள்வதுடன், மாற்றிக் கொள்ளவும் முடியும்.
12. பதிவு செய்த பின்னர் 11 இலக்க ஐடி தோன்றும். பின்னர், மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும் வரும்.












Click it and Unblock the Notifications