விஜய் உடன் நெருங்கும் அன்புமணி? பாமக - தவெக கூட்டணிக்கு அச்சாரம்! அரசியல் களத்தை சூடாக்கும் மீட்டிங்
சென்னை: தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தவெக தலைவர் விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளுக்கு இடையே அதிகரித்து வரும் நெருக்கம் தான். சமீபகாலமாக அடுத்தடுத்து அரங்கேறி வரும் சில முக்கிய நிகழ்வுகள், தமிழக அரசியல் களத்த்தில் பெரும் விவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ளன.
முதல்வர் விஜய்க்கு பாமக தலைவர் அன்புமணி பாராட்டு தெரிவித்து வருவது, புஸ்ஸி ஆனந்தை சந்தித்தது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் அன்புமணி பேட்மிண்டன் விளையாடியது என தவெகவுடன் சமீபகாலமாக மிகவும் நெருங்கி வருகிறது பாமக.

தவெக அரசு
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, திமுக கூட்டணியில் இருந்த பல கட்சிகள் தவெக நோக்கிச் சென்றன. திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தார் விஜய். இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணக்கம் காட்டி வருகிறது.
முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தது முதல் தவெகவின் முக்கிய புள்ளிகளுடன் நட்பு பாராட்டுவது வரை அன்புமணியின் சமீபத்திய நடவடிக்கைகள், அவர் தவெக உடன் கூட்டணி அமைக்க விரும்புகிறாரோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்தி வருகின்றன.
பாராட்டிய அன்புமணி
ஆளுநர் உரையில் "மத்திய அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பின்னர் தமிழ்நாடு அரசு சமூகநீதி சர்வே நடத்தும்" என்று அறிவிக்கப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி பாராட்டு தெரிவித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சமூகநீதி அறிவிப்புக்காகவே முதலமைச்சர் விஜய் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் எனக் கூறியிருந்தார் அன்புமணி.
தவெக அரசின் செயல்பாடு நன்றாக உள்ளது. நிறைய மாற்றங்கள் வந்துள்ளது. ஊழல் பெரிய அளவில் குறைந்துள்ளது என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார். மேலும், போதைப்பொருளுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடியது வரவேற்கத்தக்கது என்றும் அன்புமணி கூறியிருந்தார். விஜய்யை அன்புமணி தொடர்ச்சியாக பாராட்டி வருவது கவனம் பெற்றுள்ளது.
புஸ்ஸி ஆனந்துடன் அன்புமணி நெருக்கம்
தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய்யின் நிழலாகவும், தவெகவின் மிக முக்கிய நிர்வாகியாகவும் செயல்பட்டு வருபவர் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த். அண்மையில் அன்புமணி ராமதாஸும், புஸ்ஸி ஆனந்தும் நேரில் சந்தித்துப் பேசிக் கொண்டனர்.
தலைமைச் செயலகத்தில் புஸ்ஸி ஆனந்த்தை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார் அன்புமணி. தனது அறைக்கு வந்த அன்புமணியை அன்புடன் வரவேற்று அவருக்கு அருகிலேயே சேர் போட்டு அமர்ந்தார் புஸ்ஸி ஆனந்த். அவரை வற்புறுத்தி அவரது சேரில் அமர வைத்தார் அன்புமணி. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசித்த அவர்கள் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்குப் பிறகு தவெக அரசின் செயல்பாடுகளைப் பாராட்டினார் அன்புமணி.
ஆதவ் அர்ஜுனாவுடன் பேட்மிண்டன் விளையாடிய அன்புமணி
தவெக அரசில் மிக முக்கியமான நபராக அறியப்படுபவர் ஆதவ் அர்ஜுனா. அண்மையில் அன்புமணி ராமதாஸும், ஆதவ் அர்ஜுனாவும் இணைந்து பேட்மிண்டன் விளையாடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் அகில இந்திய சீனியர் ரேங்கிங் பேட்மிண்டன் போட்டியை தொடங்கி வைத்த ஆதவ் அர்ஜுனாவும் அன்புமணியும் இணைந்து சிறிது நேரம் பேட்மிண்டன் விளையாடினர். அரசியல் மேடைகளைத் தாண்டி, விளையாட்டு மைதானத்தில் இருவரும் காட்டிய நெருக்கம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
பிளஸ் + பிளஸ் கணக்கு
இந்தத் தொடர் நிகழ்வுகள் தற்செயலானவை அல்ல என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பாமக - தவெக இடையே ஒரு கூட்டணிப் பாலம் கட்டப்பட்டு வருவதாகவே தெரிகிறது. வட தமிழகத்தில் பலம் கொண்ட பாமகவும், தமிழ்நாடு முழுவதும் பரவலாக இளைஞர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றுள்ள விஜய்யின் தவெக-வும் இணைவது இரு கட்சிகளுக்கும் மைலேஜ் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.
அதை நோக்கியே அன்புமணியின் செயல்பாடுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அன்புமணி, தவெக தலைவர்களுடன் காட்டும் இந்த நட்பும், நெருக்கமும், தேர்தல் கூட்டணியாக மலருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
