தவெக அமைச்சரவையில் கம்யூனிஸ்ட்? ஓசூர் மா.செ-வின் ஆசையும்... சுப்பராயன் வைத்த அதிரடி "செக்"கும்!
சென்னை: தவெக அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைவது குறித்த விவாதங்கள் அரசியல் களத்தில், விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன. மாநில செயலாளர் வீரபாண்டியனின் சூசகமான பேச்சும், அதைத்தொடர்ந்து எம்பி. சுப்பராயனின் மறுப்பும் தமிழக அரசியலில் புதிய கேள்விகளை எழுப்பி விட்டுள்ளன.. அமைச்சரவை பங்கேற்பு குறித்த கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான நிலைப்பாடு என்ன?
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவளித்து அமைச்சரவையிலும் அங்கம் வகித்து வருகின்றன.

காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகளும், விசிக மற்றும் ஐயூஎம்.எல் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளன. அதேசமயம், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சி அமைக்கப்பட்ட நாள் முதலே அமைச்சரவையில் சேராமல், வெளியில் இருந்து ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டிலேயே உறுதியாக இருந்து வருகின்றன.
தவெக அமைச்சரவையில் கம்யூனிஸ்ட்
ஆட்சி அமைக்கும்போதே கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், கொள்கை ரீதியாகத் தங்கள் தனித்துவத்தை காக்க அவை வெளியில் இருந்தே ஆதரவு தரும் முடிவை எடுத்திருந்தன.
இந்த சூழலில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் ஓசூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தவெக தலைமையிலான அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைவதற்கான வாய்ப்புகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன்
அதற்கு பதிலளித்த வீரபாண்டியன், "வரும் நாட்களில் அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெறுவதற்கான சூழல் உருவாகி வருகிறது. அந்த தருணத்தில் ஓசூர் மண்ணில் இருந்தே அமைச்சர்கள் உருவாகலாம்" என்று சூசகமாக கூறியிருந்தார்.
தளி தொகுதியின் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் அமைச்சரவையில் இடம்பிடிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பை வீரபாண்டியனின் இந்த பேச்சு வலுப்படுத்தியது. தவெக அரசுக்கு ஆதரவு தரும்போதே கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சர் பதவிகளைக் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வீரபாண்டியனின் இந்தப் பேச்சு அரசியல் களத்தில் விவாதத்தை கிளப்பிய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பராயன் அதிரடியான கருத்தை தற்போது பதிவு செய்துள்ளார்.
சுப்பராயன் எம்பி தெளிவு
ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த சுப்பராயன், "தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் நாங்கள் ஒருபோதும் பங்கேற்க மாட்டோம். ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளிப்போம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சமீபத்தில் எங்கள் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம். அமைச்சரவையில் பங்கேற்பது பற்றி கட்சி எந்த முடிவும் எடுக்கவில்லை" என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
மேலும், "முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளான பணி நிரந்தரம் உள்ளிட்டவற்றை நிறைவேற்ற வேண்டும். அரசு எடுக்கும் முடிவுகளின் தன்மைக்கேற்பவே எங்கள் ஆதரவும் எதிர்ப்பும் இருக்கும். அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிற கட்சிகளில் சேர்வதை நாங்கள் எதிர்க்கிறோம்; வெறுக்கிறோம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
கறார் கம்யூனிஸ்ட்
சுப்பராயனின் இந்தத் தெளிவான பதில், அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணையப் போவதாக எழுந்த தகவல்களை முற்றிலுமாக மறுத்துள்ளது. அதாவது, ஆட்சிக்கு ஆதரவு தந்தாலும், ஆளும் தரப்பின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சியாகத் தனது கடமையை ஆற்றுவதில் கம்யூனிஸ்ட் கட்சி சமரசம் செய்து கொள்ளாது என்பதை இது உணர்த்துகிறது. இதன் மூலம், விஜய்யின் அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சேர வாய்ப்பில்லை என்பதே தற்போது உறுதியாகியுள்ளது....!!!












Click it and Unblock the Notifications