Sugar is same as dangerous as alcohol.. ஃபேட்டி லிவர் இருக்கா?.. இனிப்புக்கு குட்பை சொல்லுங்க
சென்னை: மது குடித்தால் கல்லீரலுக்கு எப்படி பாதிப்பு ஏற்படுமோ அது போல் சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையை சாப்பிட்டால் கல்லீரல் பாதிக்கப்படும் என டாக்டர் பரூக் அப்துல்லா அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தொடர்ந்து மது அருந்துவதால் கல்லீரல் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நாம் தரும் அட்வைஸ் என்ன??? மதுவை நிறுத்துங்கள் என்பதா? அல்லது மதுவைக் குறைத்துக் கொள் என்பதா? தொடர்ந்து புகை பிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நாம் தரும் அட்வைஸ் என்ன?? புகை பிடிப்பதை நிறுத்துவது நல்லது என்பதா அல்லது புகை பிடிப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்பதா? மேற்கூறிய இரண்டு கேள்விகளுக்கும் அதிகபட்சமானோர் முதல் அட்வைஸைத் தேர்ந்தெடுத்திருக்கவே வாய்ப்பு அதிகம்.

அப்படி இருக்கையில் நீரிழிவு ( டயாபடிஸ்), உடல் பருமன் ( மையப்பகுதி பருமன்), பிசிஓடி, ரத்தக்கொதிப்பு ஆகியவை இருக்கும் நோயருக்கு இனிப்பு ( சீனி / நாட்டு சர்க்கரை / வெல்லம் / கருப்பட்டி / தேன் / இனிப்பு மிகுதியான பழங்கள்) ஆகியவற்றையும் அவர்கள் மிக அதிகமாக சாப்பிட்டு வரும் அரிசி / கோதுமை / சிறுதானியம் போன்ற தானியங்கள் சார்ந்த உணவு முறையை விட்டு விட்டு காய்கறிகள் / குறைவான மாவுச்சத்து கொண்ட கனிகளின் காய்கள் / முட்டை / மாமிசம் / கடல் சார் உணவுகள் / கொட்டை/ கடலை/ பயறு வகைகளுக்கு மாறுங்கள் என்ற அட்வைஸ் கூறப்பட்டால் மட்டும் மனம் ஏற்கத் தயங்குவதேன்???
அதற்குக் காரணம் மனம் எனும் மாய பிம்பத்தை ஆட்டுவிப்பது மூளை. மூளைக்கு விருப்பமான விஷயங்களில் மனம் லயிக்கும். தொடர்ந்து செய்யும் அத்தகையதே இனிப்பு சுவையும் ரத்தத்தில் ஜிவ்வென க்ளூகோஸ் ஏறுவதும் ஆகும்.எனவே தான் இனிப்பான உணவுகளை நமது நா திருவிழாக் கூட்டத்தில் தொலைந்த குழந்தை போல தேடிக்கொண்டு அலைகிறது. இனிப்பு மிகுதியான பழங்களை ( மா/ பலா/ வாழை/ இன்னும் பல) தேடித் தேடி உண்பதற்குக் காரணமும் அது தான்.
இன்னும் பழச்சாறுகளில் சீனி சேர்த்து பருகச் செய்வதும் அந்த போதை தான் டீ காபியில் இனிப்பு சேர்க்காதீர்கள் என்று கூறினால் அரை சீனி, கால் சீனி என்றும் சீனியை விட்டால் நாட்டு சர்க்கரை/ வெல்லம் / கருப்பட்டி / தேன் / சுகர் ஃப்ரீ / ஸ்டீவியா என்று மனம் மந்தி போல தாவித் தாவிச் செல்வதும் இந்த போதையினால் தான். வைபவங்களில் பரிமாறப்படும் அரை தேக்கரண்டி பிரட் அல்வாவுக்கும்
அரை டம்பளர் பாயாசத்துக்கும் அருண் ஐஸ்க்ரீமுக்குமே இந்த வருடத்தில் இனிப்பு சாப்பிட மாட்டேன் என்று எடுத்துக் கொண்ட லட்சியங்கள் காற்றில் பறப்பதும் இதனால் தான்.
உண்மையில் மதுவால் நமது கல்லீரல் எத்தனை பாதிப்புகளுக்கு உள்ளாகின்றதோ அதே போன்று தான் இனிப்பினாலும் அதிக மாவுச்சத்தினாலும் நீரிழிவினாலும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. எனவே எப்படி மது அருந்துபவர் தனது கல்லீரலைக் காக்க மதுவை விட்டொழிக்க வேண்டுமோ. அதே போல நீரிழிவு கொண்டவர் கல்லீரல் கொழுப்பு நோய் கொண்டார், உடல் பருமன் கொண்டார், பிசிஓடி மகளிர், ரத்தக் கொதிப்பு கொண்டோர் ஆகிய மக்கள் இனிப்புடனான சங்காத்தத்தை இன்றோடு முடித்துக் கொள்வது நல்லது.
அதிக மாவுச்சத்து உண்ணும் தானியங்கள் சார்ந்த உணவு முறைக்கு குட் பை கூறிவிட்டு தினசரி மாவுச்சத்து உட்கொள்ளலைக் குறைத்து தேவையான புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பை சாப்பிட்டு அரை மணிநேரமேனும் நடை / ஓட்டம் / நீச்சல் / விளையாட்டு / மிதிவண்டி பயிற்சி ஆகியவற்றில் ஈடுபடுவதும் நல்லது. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications