ப்ரோக்கோலி பெஸ்ட்.. மார்பக புற்றுநோயை ஓடவைக்கும் சூப்பர் புரோக்கோலி.. இவங்க ப்ரக்கோலியை "தொட கூடாது"
சென்னை: உடலுக்கு நன்மையை தரக்கூடிய ப்ரோக்கோலியை அனைவரும் சாப்பிடலாமா? ப்ரோக்கோலி சாப்பிட்டால் புற்றுநோய் பாதிப்பு குறையுமா? இதுகுறித்து ஆய்வுகள் சொல்வதென்ன? உடல் எடை குறைப்பவர்களும் இந்த காயை சாப்பிடலாமா?
முட்டைகோஸ் குடும்பத்தை சேர்ந்த ப்ரோக்கோலியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஒரு கப் ப்ரோக்கோலியில், A, B, B6,B2, E வைட்டமின்களும், பாஸ்பரஸ், கோலைன், மாங்கனீசு, தாமிரம், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.

சத்துக்கள்: புரோக்கோலி, நம்முடைய உடலில் 6 சதவிகிதம் வரை கெட்டக்கொழுப்பைக் குறைக்கும் திறன் கொண்டிருப்பதாக ஆய்வுகளில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால்தான் உலகின் பல்வேறு ப்ரோக்கோலியை அதிகம் உற்பத்தி செய்து வருகிறார்கள்.
உடல் எடை குறைய முயற்சிப்பவர்கள், ப்ரோக்கோலியை உணவில் சேர்த்து கொள்ளலாம். இதனால், இடுப்பு, தொடை பகுதியில் உள்ள கொழுப்பு கரையக்கூடும். நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால், கெட்ட கொழுப்பினை குறைக்கும் சக்தி இதற்கு உண்டு. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளதால், ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுக்கிறது. இதனால் இதயநோய்களும் தடுக்கப்படுகின்றன.
நார்ச்சத்துக்கள்: மேலும், அஜீரண கோளாறுகளையும் ப்ரோக்கோலி சரி செய்கிறது. வளரும் பிள்ளைகளுக்கு ப்ரோக்கோலியை சாப்பிட தரவேண்டும். ஏனென்றால், இதிலுள்ள கால்சியம் சத்துக்கள், பல், எலும்புகளுக்கு வலு தருகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்ககூடிய ப்ரோக்கோலி, நினைவுத் திறனை அதிகரிக்க செய்கிறது.
சருமத்தில் ஈரப்பதம் குறையாமல் பாதுகாத்து, தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும் ப்ரோக்கோலிகள், இளமை தோற்றத்தையும் மீட்டு தருகிறது.. ப்ரோக்கோலியை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் பார்வை மங்குதல், கண் புரை உள்ளிட்ட கண் நோய்கள் நெருங்குவதில்லை. குறிப்பாக, கண்களில் இருக்கும் மேகுலார் திசுக்களின் வளர்ச்சி குறைகிறது.
பல்வேறு ஆய்வுகள்: இத்தனை நன்மை தரும் ப்ரோக்கோலி, புற்றுநோய் வராமலும் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ப்ரோக்கோலியில் சல்போரபேன் என்ற வேதிப்பொருள் இருப்பதால், புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை முற்றிலுமாக அழிக்கிறதாம்.
ஒரேகன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், புற்றுநோயை தடுக்கும் பண்புகள் அதிகம் இருப்பதாகவும், அதற்கு சல்ஃபரோஃபேன் (Sulforaphane) என்னும் சேர்மம்தான் காரணம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, ப்ரோக்கோலியில் மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்த உதவும் கூறுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
நிறமிகள்: ப்ரோகோலியில், வைட்டமின் C, ஆன்டி-ஆக்சிடண்டுகள், மற்றும் கரோடினாய்டுகள் என்ற நிறமிகள் உள்ளதால், இதனை சாப்பிடுபவர்களுக்கு மரபியல் சார்ந்த நோய்கள், இதய நோய்கள் போன்றவற்றின் ஆபத்துகளும் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
புற்றுநோய்களுக்கு மட்டுமல்ல, ப்ரோக்கோலியிலுள்ள சல்ஃபரோஃபேன், ஆர்த்ரைட்டிஸ் நோயையும் தடுக்க உதவுவதாக ஏஸ்ட் ஆங்க்லியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதேபோல, லிவர்பூல் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்விலும், வயிறு, குடல் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்னைகளையும் சீராக்க ப்ரோக்கோலி உதவுவதாக கண்டுபிடித்துள்ளனர்.
தவிர்க்கலாம்: இவ்வளவு நன்மைகளை ப்ரோக்கோலி தந்தாலும், தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இதை டாக்டர்களின் ஆலோசனையை பெற்றே சாப்பிட வேண்டும். ஏனென்றால், தைராய்டு உற்பத்திக்கு தேவையான அயோடின் சத்தை உறிஞ்சுவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்கிறார்கள்.. அளவுக்கு அதிகமான ப்ரோக்கோலி சாப்பிட்டாலும் வாயுத்தொல்லை ஏற்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications