கல்யாண முருங்கை.. "சக்களத்தி"யின் ஆச்சரியங்கள்.. நாலஞ்சு இலையே போதும்.. ஒல்லியாகணுமா? இதை படிங்க
சென்னை: கல்யாண முருங்கை பற்றி தெரியுமா? இந்த மேஜிக் இலையை பற்றி தெரிந்தால், ஆண்களும் சரி, பெண்களும்சரி, இந்த மூலிகையை விடவே மாட்டீங்க.
பிரத்யேகமாக இந்த செடியை யாரும் வளர்க்க மாட்டார்கள்.. கிராமப்புறங்களில், விவசாய பகுதிகளில், வேலி ஓரங்களில், இந்த கல்யாண முருங்கை அது பாட்டுக்கு வளர்ந்துவிடும்.
இதன் இலை மட்டுமல்ல, பூக்கள், விதைகள், பட்டைகள் என அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தது. முள் முருங்கை என்பார்கள்.. அல்லது முருக்க மரம், முள் முருக்கு என்றும் சொல்வார்கள். சென்னை, மாதவரம் பால் பண்ணையை அடுத்த காட்டுப் பகுதியில் இந்த கல்யாண முருங்கை மரங்கள் நிறைய இருப்பதாக சொல்கிறார்கள்.

மருத்துவ குணங்கள்: ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இந்த இலையில் உள்ளது. மிகச்சிறந்த கிருமி நாசினி.. இந்த இலையுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து பூசிக்குளித்து வந்தால், உடம்பிலுள்ள சொறி, சிரங்கு குணமாகும்.. சளி, இருமல் தொல்லையை இந்த இலை போக்கும்.. குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி தொந்தரவு இருந்தால், இந்த இலையுடன் கல் உப்பை சேர்த்து அரைத்து தருவார்கள்..
அல்லது கல்யாண முருங்கை இலை சாற்றை, வெதுவெதுப்பான நீரில் கலந்து, அத்துடன் தேன் சேர்த்து குழந்தைகளுக்கு தரலாம். இதனால் கழிவுகளுடன் சேர்ந்து பூச்சிகள் வெளியேறிவிடும். பெரியவர்களும் இதை சாப்பிடலாம். ஆனால், வெறும்வயிற்றில் காலை நேரத்தில் இதை சாப்பிட்டாடல், இரண்டு மணி நேரத்துக்கு எதையும் சாப்பிட கூடாது.. அன்றைய நாள் முழுக்க வெறும் மோர் சாதம் மட்டுமே சாப்பிட வேண்டும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மிகச்சிறந்த அருமருந்து இந்த கல்யாண முருங்கை.. இந்த இலையை அரைத்து ஜூஸ் போல செய்து குடித்து வந்தால், உடல் பருமன் குறையும்..
ஆண்கள் பெண்கள்: ஆனால் ஆண்களுக்கும் பெண்களும் 2 முக்கிய வழிகளில் இந்த கல்யாண முருங்கை கொடுக்கிறது.. ஆண்மையை பெருக்கும் சக்தி இந்த இலைக்கு உண்டு.. இந்த இலையை நாலைந்து எடுத்து, மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்க வேண்டும்.. பிறகு மாதுளம் ஜூஸில், கசகசா தூளை சேர்த்து, இந்த இலையின் சாறுடன் கலந்து 21 நாட்கள் குடித்தால் ஆண்மை பெருகும் என்பார்கள்..
குழந்தை பேறுக்கு இந்த இலை மிகவும் பயன்படுகிறது.. இதன் இலை சாற்றை தினமும் குடித்துவந்தால், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களின் குறைகள் நீங்குமாம்.. கல்யாண முருங்கைப்பூவுடன் 4 மிளகு சேர்த்து அரைத்து, வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வர பலன் கிடைக்கும் என்கிறார்கள்.. கருமுட்டையும் அதிக அளவில் உற்பத்தியாகும்.
மாதவிடாய்: அல்லது இந்த முருங்கை இலையை கசக்கி சாறு எடுத்து, மாதவிடாய் வருவதற்கு முன்னாடி 3 நாள், மாதவிடாய் முடிந்த பிறகு 3 நாள், காலையில் வெறும் வயிற்றில் 3 மாதம் குடித்து வந்தால், குழந்தைப்பேறு கிடைக்குமாம். அதனால்தான் அரச மரத்துக்கு சக்களத்தி என்று இந்த கீரையை சொல்வார்களாம்.
கர்ப்பமான பெண்களுக்கு, இந்த இலையை சமைத்து தருவார்கள்.. பாசி பருப்புடன் சேர்த்து வேகவைத்து தந்தால் இன்னும் சிறப்பு.. கர்ப்பிணிகளின் சிறுநீர் எரிச்சல் குணமாகும்..
குழந்தை பேறு: அதேபோல, குழந்தை பெற்ற பெண்கள், பால் சுரக்க வேண்டுமானால், இந்த இலையை தேங்காய் எண்ணெய்விட்டு சமைத்து சாப்பிட்டுவந்தால் தீர்வு கிடைக்கும்.. அல்லது இந்த இலையை பொடியாக நறுக்கி, சின்ன வெங்காயம், தேங்காய், நெய் சேர்த்து வதக்கி அரைத்து ஒரு நாளைக்கு 5 முறை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் நன்றாக சுரக்கும். மாதவிடாயை சீர்செய்யும். கருப்பை கட்டியும் சீராகும்..
பிரசவத்திற்கு பின்பு கருப்பையை தூய்மைப்படுத்தவும், வலுப்படுத்தவும், இந்த இலையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் கலந்துக் கொதிக்கவைத்து, வடிகட்டி தொடர்ந்து 30 நாட்கள் தருவார்கள்.. இவ்வளவு நன்மைகளை பெண்களுக்கு தருவதால்தான், இதை பெண்களின் மரம் என்றே சொல்வார்கள்.
இந்த இலைகளுடன், அரிசி சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிடுவார்கள். கல்யாண முருங்கையுடன் முருங்கையிலை, மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் ரத்தச்சோகை சரியாகும். இந்த இலையிலிருந்து ரசம் செய்தும் சாப்பிடுவார்கள்.. இதன் இலையுடன் சித்தரத்தை, மிளகு, பச்சரிசி சேர்த்து வடை செய்வார்கள்.
துவையல்: சிலர் இதில் துவையல் செய்வார்கள்.. சிறிது நெய்யில் சின்ன வெங்காயம் தாளித்து, இந்த கீரையை பொடியாக நறுக்கி பொரியல் செய்து, அதனுடன் சூடான சாதம் போட்டு பிசைந்து சாப்பிடுவார்கள். ஆனால், இந்த இலையை எந்த ரூபத்தில் சாப்பிட்டாலும், டாக்டர்களின் அறிவுரையுடன் எடுத்து கொண்டால், முழு ஆரோக்கியம் கிடைக்கும்.
இந்த மரத்தை வீட்டு தோட்டத்திலேயே சுலபமாக வளர்க்கலாம்... விதைகளை பதியம் போட்டு வளர்ப்பது மிகவும் சிறந்த முறை என்கிறார்கள்.. அதாவது, கல்யாண முருங்கை மரத்தின் கிளைகளை ஒடித்து நட்டு வைத்தாலே நன்றாக துளிர் விட்டு வளர்ந்து விடுமாம்.. எல்லா மண்ணிலும் சுலபமாக வளரக்கூடியது.












Click it and Unblock the Notifications