சென்னையில் சீனியர் சிட்டிசன்களுக்கு இன்று முதல் இலவச பஸ் டோக்கன்! என்னென்ன ஆவணங்கள் தேவை?
சென்னை: சென்னையில் முதியவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்திற்கான டோக்கன்கள் இன்று (ஜூன் 21) முதல் விநியோகிக்கப்படுகிறது என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இந்த டோக்கன்கள் ஜூலை 31 ஆம் தேதி வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர பேருந்துகளில் 60 அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்ய அடுத்த 6 மாதங்களுக்கான பேருந்து டோக்கன்கள், புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, சென்னை வாழ் மூத்த குடிமக்கள் ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், அடுத்த 6 மாதங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய 60 கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான விநியோகம் வரும் 21.06.2026 முதல் 31.07.2026 வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 39 பணிமனைகள் மற்றும் பேருந்து நிலைய மையங்களில் நடைபெறும். முதியவர்களின் வசதிக்காக இந்த மையங்கள் வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் காலை 08:00 மணி முதல் இரவு 07:30 மணி வரை தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவைப்படும் ஆவணங்கள்
இந்தக் கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் புதிய அடையாள அட்டைகளைப் பெற விரும்பும் முதியவர்கள் அல்லது ஏற்கனவே உள்ள அட்டையைப் புதுப்பிக்க நினைப்பவர்கள் தங்களின் இருப்பிடச் சான்றாகக் குடும்ப அட்டை (Ration Card), வயதுச் சான்று (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்விச் சான்றிதழ் அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று) மற்றும் 2 அண்மைக்கால பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களைச் சமர்ப்பித்து டோக்கன்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
குறிப்பிடப்பட்ட இந்த விநியோகக் காலக்கெடுவிற்குப் பிறகு (அதாவது 01.08.2026 முதல் 20.12.2026 வரை), மூத்த குடிமக்கள் அந்தந்தப் பகுதிக்குட்பட்ட பணிமனை அலுவலகங்களில், வழக்கமான அலுவலக நாட்களில் மற்றும் அலுவலக நேரத்தில் மட்டுமே சென்று இந்த டோக்கன்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் தெளிவுபடுத்தியுள்ளது.
அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், மந்தைவெளி, குரோம்பேட்டை, வடபழனி, அண்ணா நகர், அம்பத்தூர், ஆவடி, தாம்பரம் மற்றும் கிளாம்பாக்கம் உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த 39 முக்கிய மையங்களின் பட்டியல் இதனுடன் இணைக்கப்பட்டு, விநியோகத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டோக்கன்களை கொண்டு டிசம்பர் வரை பயணிக்கலாம். இந்த பேருந்து டோக்கன் வசதிகள் மூலம் மருத்துவம், அன்றாட தேவைகள், குடும்பச் சந்திப்புகளுக்காக அடிக்கடி பயணம் செய்யும் முதியவர்கள் இந்த இலவச பேருந்து பயண டோக்கன் அவர்களது நிதிச் சுமையை குறைக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications