நீங்க மது குடிக்காட்டியும் "அந்த" நோய் இருந்தா "இந்த" நோய் வரும்.. ரிஸ்க் ஜாஸ்தி.. மருத்துவர் அட்வைஸ்
சென்னை: ஃபேட்டி லிவர் என சொல்லப்படும் கல்லீரல் சார்ந்த நோய் மதுகுடிக்காதவர்களுக்கும் வரும் என்றும் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்தும் டாக்டர் பிரசாந்த் அருண் என்பவர் விளக்கியுள்ளார்.
இன்று நோய்கள் எந்த வடிவத்தில் வரும் என்பதை கணிக்கவே முடியவில்லை. நமக்கு தெரிந்தது எல்லாம் சர்க்கரை நோய், நீரிழிவு நோய், கொலஸ்ட்டிரால், இதய நோய், கேன்சர் உள்ளிட்டவைதான். ஆனால் உள்ளுறுப்புகளில் என்னென்னவோ நோய்கள் வருவதால் இவற்றில் சில சப்தமே இல்லாமல் ஆளை காலி செய்துவிடுகிறது.

காரணம் எந்த அறிகுறியும் இல்லாமல் முற்றிய ஸ்டேஜில் மரணத்தையோ உறுப்பு செயலிழப்பையோ ஏற்படுத்துகிறது. இதற்குத்தான் 6 மாதத்திற்கு ஒரு முறை கட்டாயம் ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, ஸ்கேன் உள்ளிட்ட முழு உடல் சோதனையை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
அப்படி செய்தால் முற்றிய பிறகு நோயை கண்டுபிடிப்பதை காட்டிலும் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முளையிலேயே கிள்ளி விடலாமே! உடலில் எந்த ஒரு உறுப்பும் வீணாக இல்லை. ஒவ்வொரு உறுப்பும், ஒவ்வொரு செல்களும் ஒவ்வொரு திசுக்களும் அதன் வேலைகளை செய்து வருகின்றன. அந்த வகையில் கல்லீரல் முக்கியமானது.
கல்லீரல்தான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலில் மெட்டபாலிசத்தை மேம்படுத்தவும், விட்டமின்களை சேமிக்கவும் செய்கிறது. மேலும் உணவுகளை எளிதில் ஜீரணிக்கவும் உதவுகிறது. புரத உற்பத்தியை ஊக்குவிக்கிறது. தேவையற்ற பொருட்களை வடித்து பெருங்குடல் வழியே மலமாக அனுப்புகிறது. உணவுகளை ஜீரணிக்க தேவையான ஒரு ஜூஸை இது உற்பத்தி செய்கிறது. உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது.
அந்த வகையில் இன்று பெரும்பாலானோர் அவதிப்படுத்துவது ஃபேட்டி லிவர் என்ற நோயால்தான். இதுகுறித்து டாக்டர் பிரசாந்த் அருண் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மது குடித்தால் கல்லீரல் நோய்கள் வரும் என்பதை அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் மது குடிக்காதவர்களுக்கும் கல்லீரல் நோய் வரும். அதற்கு பெயர்தான் ஃபேட்டி லிவர் நோய்.
கல்லீரலை சுற்றி கொழுப்புகள் சேர்ந்து கொள்வதால் இதற்கு ஃபேட்டி லிவர் என பெயராகும். இதை இரு விதங்களாக பிரித்துக் கொள்ளலாம். ஒன்று இன்ஃபிளமேஷனுடன் இருப்பது , இன்ஃபிளமேஷன் இல்லாமல் இருப்பது என இரு வகைகளாக பிரித்துக் கொள்ளலாம். மது குடிக்காதவர்களுக்கு சர்க்கரை நோய், கொலஸ்டிரால் இருப்போருக்கு ஃபேட்டி லிவர் வரும்.
இந்த நோய்க்கு எந்த அறிகுறிகளும் இருக்காது. ஆனால் வழக்கமாக ரத்த பரிசோதனை மேற்கொள்ளும்போதுதான் அவர்களுக்கு ஃபேட்டி லிவர் இருப்பது தெரியவரும். ரத்த பரிசோதனையில் ஃபேட்டி லிவர் இருப்பது தெரிந்தால் அதற்கு சில ஸ்கேன்கள் எடுத்து பார்க்க வேண்டும். தேவைப்படுவோருக்கு பயாப்சி எடுத்து பார்க்க வேண்டியிருக்கும்.
இந்த ஃபேட்டி லிவருக்கு சிகிச்சை என பார்த்தால் உடல் எடையை குறைப்பது, சர்க்கரை அளவையும் கொலஸ்டிரால் அளவையும் கட்டுக்குள் வைத்திருப்பதுதான். ஃபேட்டி லிவர் இருப்போருக்கு மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு டாக்டர் பிரசாந்த் அருண். இவர் பொது மருத்துவத்தில் எம்.டி. முடித்துள்ளார். நீரிழிவு நோய் நிபுணர்.












Click it and Unblock the Notifications