"மீனு முட்டை".. மீன் தலை போலவே, மீன் முட்டையில் ஒளிஞ்சிருக்கும் சீக்ரெட்.. இதை லேசில் விட்டுறாதீங்க
சென்னை: மீன் சாப்பிடும் அளவுக்கு மீன் முட்டைகளை யாரும் அவ்வளவாக சாப்பிட மாட்டார்கள்.. ஆனால், பல்வேறு சத்துக்கள் இந்த மீன் முட்டைக்குள் ஒளிந்திருக்கின்றன.
பொதுவாக மீன் உணவுகள் என்றாலே புரதச்சத்துக்கள் அதிகம் இருக்கும்.. ஆனால், மீனை விரும்பி சாப்பிடும் அளவுக்கு மீன் தலையை யாரும் விரும்புவதில்லை.. சிலர் தலையை வெட்டிவிட்டே, மீனை வாங்கி வருவார்கள்.
வைட்டமின்கள்: ஆனால், பலவகையான வைட்டமின்களும், தாதுக்களும், ஆரோக்கியமான கொழுப்புகளும் இந்த மீன் தலைக்குள்தான் அடங்கி உள்ளன.. ஆரோக்கியமான புரதம் அதிக அளவில் மீனின் தலைப்பகுதியில் இருக்கிறது.

மற்ற இறைச்சி வகைகளில் இல்லாத அளவுக்கு, செறிவூட்டப்பட்ட கொழுப்பு மிகவும் குறைவாக இருப்பது இந்த மீனின் தலைப்பகுதியில்தான்.. எனவே, மீன் தலையை சாப்பிட்டால், கொழுப்பு கூடாது..
பக்கவாதம்: பக்கவாதம், மாரடைப்பு போன்ற இதய நோய்கள் குறையும்.. பொதுவாக, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் கொண்ட உணவு வகைகளை சாப்பிடுபவர்களுக்கு கொழுப்பு அளவு குறைவதாகவும், இதயதுடிப்பு சீரடைவதாகவும் பெரும்பாலான ஆராய்ச்சிகள் சொல்கின்றன.. அந்தவகையில், ஒமேகா அமிலம் இதய நோய்களில் இருந்து காக்கும்தன்மை கொண்டது.
அதுபோலவே, மீன் முட்டையை பெரும்பாலும் உணவில் பயன்படுத்துவதில்லை.. கோழிமுட்டையை விட அதிகளவு ஊட்டச்சத்தும் எதிர்ப்புச்சக்தியும் இந்த மீன் முட்டையில் இருக்கிறதாம்.. அதுமட்டுமல்ல, மீனில் உள்ள சத்துக்களைவிட, மீன் முட்டையில் சத்துக்கள் ஏகப்பட்டவை இருக்கிறதாம்..
ரத்தம் சுத்தமாகி ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது.. இது எலும்புகளை, பற்களை வலுவாக வைத்திருக்க உதவும். வைட்டமினி C, E, A போன்ற சத்துக்கள் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்திக்கு பேருதவி புரிகின்றன..
இதய நோயாளிகள்: 3 கொழுப்பு அமிலம் அதிகம் இருப்பதால் இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.. ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. ரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடு அளவை குறைத்து, கொழுப்பின் அளவை அதிகரிப்பதை கட்டுப்படுத்துகின்றன. ரத்தம் உறைவது தடுக்கப்படுகிறது.
இந்த முட்டைகளில் உள்ள திரவ வடிவிலான சுரப்பியில், வைட்டமின் E அதிகளவில் இருக்கிறது.. இதனால், மாலைக்கண் போன்ற கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணம் பெறுவதாக சொல்கிறார்கள்.. சேலம் மீன் மார்க்கெட்டில், இந்த மீன் முட்டைக்கு நிறைய கிராக்கி இருக்குமாம்.. அதாவது, மீன்களின் விலை கிலோ 150 என்றால், மீன் முட்டைகள் கிலோ, 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுமாம்.. மீன்முட்டையை முன்கூட்டியே "ரிசர்வ்" செய்து வாங்கும் அளவுக்கு மவுசு அதிகம் என்கிறார்கள்.
கோழி முட்டை: குழந்தைகளுக்கு, கர்ப்பிணி, பிரசவ கால பெண்களுக்கு இந்த மீன் முட்டைகள் நல்ல பயனை தருகிறதாம்.. நாம் வழக்கமாக கோழி முட்டையை செய்வது போலவே, இந்த முட்டையையும் பொரித்து சமைத்து சாப்பிடலாம்
அதாவது, மீன் முட்டையை நன்றாக சுத்தம் செய்து செய்து கொண்டு, வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவேண்டும்... பிறகு, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.. பிறகு, சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, மீன் முட்டையை போட்டு கைவிடாமல் அடிபிடிக்காமல் கிளறவேண்டும்... மீன் முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக ஆகும் வரை கிளறவேண்டும்...

மீன் முட்டை பொரியல்: கடைசியில், தேங்காய் துருவல், கொத்தமல்லி தூவி ஒரு கிளறு கிளறிவிட்டு இறக்கினார் இதுதான் மீன் முட்டை பொரியல்... சிலர் இதை வறுவலாக சாப்பிடுவார்கள்.. மீன் முட்டையை கழுவி வைத்து கொண்டு, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சியையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்...
பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து தாளித்து, வெங்காயம், காய்ந்த மிளகாய், போட்டு வதக்க வேண்டும்.. பிறகு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், சேர்த்து கிளறி, அதில், சுத்தம் செய்த மீன் முட்டையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.. மீன் முட்டை நன்றாக உதிர் உதிராக வரும் வரை கைவிடாமல் கிளறிவிடவேண்டும்.












Click it and Unblock the Notifications