மாரடைப்பு எப்போதும் திடீரென ஏற்படுவதில்லை.. "இந்த" அறிகுறிகள் முக்கியம்! இல்லைனா உயிருக்கே ஆபத்து
சென்னை: மாரடைப்பு பெரும்பாலும் திடீரென ஏற்படுவதாகத் தோன்றினாலும், பல சமயங்களில் அதற்கு சில மணிநேரங்கள், சில நாட்கள் அல்லது சில வருடங்களுக்கு முன்பே தோன்றும். இருப்பினும், இந்த அறிகுறிகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் விடப்படுகின்றன. அதுவே ஆபத்தாக முடிகிறது. எனவே, நாம் கவனமாக இருக்கப் பார்க்க வேண்டிய அறிகுறிகள் குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் மொத்த இறப்புகளில் நான்கில் ஒன்று இருதய நோய்களால் ஏற்படுகிறது. இருதய நோய்கள் என்றாலே வயதானோருக்கான நோய் என்றே பலரும் நினைத்த நிலையில், அது மாறிவிட்டதையே இது காட்டுகிறது. குழந்தைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரையும் ஆபத்தான இதய நோய்கள் விகிதத்தில் பாதித்து வருகின்றன.

மாரடைப்பு
அதில் முக்கியமானது மாரடைப்பு.. நல்ல உடல்நிலையில் இருப்போர் கூட திடீரென நொடியில் உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கிறது. அதேநேரம் இதைத் தடுக்கவே முடியாது என்றும் சொல்லிவிட முடியாது. இது குறித்து பிரபல மருத்துவர் கூறுகையில், "திடீர் மாரடைப்புகள் எப்போதும் திடீர் நிகழ்வுகளாக இருப்பதில்லை.. ஏற்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே சமிக்ஞைகளை இருக்கும். நாம் தான் அதைக் கண்டறிந்து செயல்பட வேண்டும்" என்றார்.
மாரடைப்புக்கான அறிகுறிகள் பல வகைகளில் வெளிப்படும். சில சமயம், கடுமையான நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், மயக்கம் அல்லது சுயநினைவு இழப்பு ஆகியவை தீவிரமான அறிகுறிகளாக இருக்கும். அதேபோல நெஞ்சு பகுதியில் அசவுகரியம் ஏற்படுவது, சோர்வு, அஜீரணம் போன்ற மிதமான அறிகுறிகளும் இருக்கும். ஆனால், இதை பெரும்பாலான மக்கள் மாரடைப்புடன் இணைத்துப் பார்க்கத் தவறிவிடுவார்கள்.
அறிகுறிகள்
சிலருக்கு, மாரடைப்பு ஏற்படுவதற்கு சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு முன்பே வழக்கத்திற்கு மாறான சோர்வு, நெஞ்சு அசவுகரியம் அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். இவை மிகவும் நுட்பமானவை மற்றும் குறிப்பிட்ட ஒரு நோய்க்கானவை அல்ல என்பதால், ஆரம்பத்தில் இவற்றை அடையாளம் காண்பது கடினம். ஆனால், சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்கும், நோயின் தீவிரத்தைக் குறைப்பதற்கும் இந்த அறிகுறிகளைப் புரிந்துகொள்வது அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
மருத்துவர்கள் இது தொடர்பாகக் கூறுகையில், "இன்று நாம் மாரடைப்பைத் தடுப்பதை விட, அதற்குப் பிறகு சிகிச்சை அளிப்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆனால், இது தவறானது. இதயப் பாதிப்பு ஏற்படுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே உடல் சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்குகிறது என்பதே உண்மை. அதைக் கண்டறிந்து தேவையான சிகிச்சை வழங்க வேண்டியது முக்கியம்" என்கிறார்.
கவனிக்க வேண்டியவை
நெஞ்சு வலி அல்லது அசௌகரியம், மூச்சுத் திணறல், கைகள், முதுகு, கழுத்து, தாடை அல்லது வயிற்றில் வலி அல்லது அசௌகரியம், தலைச்சுற்றல், குளிர் வியர்வை, குமட்டல் அல்லது வாந்தி ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், "நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, போதுமான ஓய்வின்மை, மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் ஆகியவை கரோனரி தமனி நோய் அதிகரிப்பதற்கான ஆபத்து காரணிகளாகும்" என்கிறார்கள்.
இதுதான் சிக்கலே
உடல் பருமனும் முக்கிய பிரச்சனையாக மாறியிருக்கிறது. 1990ஆம் ஆண்டில் 194 மில்லியன் பேர் உடல் பருமன் சிக்கலை எதிர்கொண்டனர். ஆனால், 2022ல் இந்த எண்ணிக்கை 878 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதைப் போக்கு தொடர்ந்தால், 2050ஆம் ஆண்டிற்குள் 25 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அதிக எடை அல்லது உடல் பருமனுடன் வாழ நேரிடும் என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் மேலும் கூறுகையில், "35 வயதுக்கு மேற்பட்டவர்கள், குறிப்பாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புகைபிடித்தல் அல்லது குடும்பத்தில் வேறு யாருக்காவது இதய பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு ஆபத்து அதிகம். அவர்களுக்குச் சீரான மருத்துவ பரிசோதனை தேவைப்படும். ஒரு அடிப்படை இதயப் பரிசோதனை, ECG, எக்கோ கார்டியோகிராம், லிப்பிட் ப்ரொஃபைல் மற்றும் சி.டி. கரோனரி ஆஞ்சியோகிராம் ஆகியவை பிரச்சனைகள் தீவிரமாவதற்கு முன்பே கண்டறிய உதவும்" என்கிறார்கள்.
என்ன செய்ய வேண்டும்
லேசான சோர்வு, மூச்சுத் திணறல் ஆகியவை தற்செயலான அறிகுறிகள் அல்ல. அவை இருதய அழுத்தத்திற்கான ஆரம்ப அறிகுறிகள் என்றும் மருத்துவர்கள் விளக்குகிறார்கள். நாம் செய்ய வேண்டியது ரொம்ப சிம்பிளான வேலை தான். இதை நிராகரிக்காமல் உடனடியாக அருகே இருக்கும் மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். நமது அன்பிற்குரியவர்களை இழக்காமல் இருக்க அதுவே ஒரே வழி!












Click it and Unblock the Notifications