30 நாளில் அசையும் அமைச்சர் நாற்காலி? கோட்டையில் கீர்த்தனாவுக்கு நடப்பது என்ன? தவெக சீனியர்கள் அலர்ட்
சென்னை: அமைச்சர் கீர்த்தனா பற்றின செய்திதான், சோஷியல் மீடியா முழுவதிலும் பரவி கிடக்கிறது.. கட்சிக்குள் நுழைந்த 30 நாட்களிலேயே சிவகாசி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாகி, நேரடியாக அமைச்சர் நாற்காலியிலும் உட்கார்ந்து வளர்ச்சி கண்டவர் கீர்த்தனா.. ஆனால், குறுகிய காலத்தில் அவர் அடைந்த உயரத்தை விட, அடுத்தடுத்து அவர் சிக்கி வரும் சர்ச்சைகள் தான் இப்போது விவாதப் பொருளாக மாறியுள்ளன.. இது அவரது பதவிக்கே வேட்டு வைக்குமா? என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்பி விட்டுள்ளனர்.
தவெக பதவியேற்பு விழாவிற்கு, வெற்றிச் சான்றிதழை எடுத்து செல்ல மறந்தது முதல், மாற்றுத்திறனாளிகள் குறித்துப் பேசிய வார்த்தைக்காக மன்னிப்பு கேட்டது வரை கீர்த்தனாவின் ஆரம்ப நாட்களே ஹாட்டான சலசலப்புடன் தான் தொடங்கின.

கடந்த 15-ம் தேதி தனது சொந்த மாவட்டமான விருதுநகருக்குச் சென்றபோது, அரசு வாகனத்தை கட்சியினர் பயன்படுத்த அனுமதித்தது மற்றும் முதலீடுகளை ஈர்க்க தொழிலதிபர்களுக்கு "ரீல்ஸ்" மூலம் அழைப்பு விடுத்தது என அவரது செயல்பாடுகள் விமர்சனத்துக்குள்ளாகின.
அமைச்சர் கீர்த்தனா சலசலப்பு
அதேபோல அரசு விழா ஒன்றில் புரோட்டோகால் விவகாரத்தில் சக அமைச்சர் ஜெகதீஸ்வரியுடன் ஏற்பட்ட மறைமுக மோதல், செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை எதிரொலித்ததை இந்த தமிழ்நாடே பார்த்தது.. இதற்கு பிறகு 2 பேரும் செல்ஃபி எடுத்து சமாதானம் காட்டினாலும், செய்தியாளர்கள் சந்திப்பில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் குறித்து அவர் பேசிய தொனி, முதல்வர் அலுவலகத்தை அப்செட்டாக்கி விட்டது.
சமீபத்தில் ஜூலை 3-ம் தேதி திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு நடத்திய கீர்த்தனா, மாணவி ஒருவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு, அவர் பதிலளிக்காததால் மாணவியையும் ஆசிரியரையும் கடிந்து கொண்டதோடு, "இவரே இப்படி என்றால் கடைசி பெஞ்ச் எப்படி இருக்கும்" எனப் பேசியது அடுத்த புயலை கிளப்பியது.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து காரசாரமாக விமர்சித்து வருகிறார்கள்.. சோஷியல் மீடியாவிலும் நெட்டிசன்கள், "நீங்களே இப்படி ஆங்கிலம் பேசிக்கொண்டு மாணவியின் தன்னம்பிக்கையை சிதைக்கலாமா" எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரீல்ஸ் தேவையா
இதற்கு விளக்கமளித்த கீர்த்தனா, தான் ஒரு அரசுப் பள்ளி மாணவி என்றும், தமிழ் வழியில் படித்த தனக்குத் தெரியும் என்றும் சொல்லி சிறுவயதுப் படம் ஒன்றை வெளியிட்டார். ஆனால், அவர் படித்தது அரசுப் பள்ளி அல்ல, விருதுநகரிலுள்ள மாங்கா மச்சி அரசு உதவி பெறும் பள்ளி என்ற ஆதாரங்களை நெட்டிசன்கள் உடனே அதையும் அம்பலப்படுத்திவிட்டார்கள்.
கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இருக்கும்போது கீர்த்தனா ஏன் பள்ளிகளில் ஆய்வு செய்கிறார், மற்ற துறைகளில் ஏன் தலையிடுகிறார் என்ற கேள்வியும் சக அமைச்சர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தாமல் இல்லை..
பதவிக்கு ஆபத்து?
கடந்த ஜூலை 7ம் தேதி கோட்டையில் நடந்த ஹிட்டாச்சி நிறுவன முதலீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற கீர்த்தனாவிடம் முதல்வர் விஜய், "ரீல்ஸ் எடுப்பது உங்கள் வேலையல்ல, தொழில்துறை பணிகளில் கவனம் செலுத்துங்கள்" என்று நேரடியாகவே அறிவுரை வழங்கியதாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தனது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளாவிட்டால் வரவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் கீர்த்தனா பதவி இழக்க நேரிடும் என தவெக சீனியர்கள் எச்சரிக்கிறார்களாம்.
ஆனால், ஆரம்பக்கட்டத் தவறுகளுக்காகவே ஒருவரை பதவியிலிருந்து நீக்கினால், புதியவர்களுக்கு வாய்ப்பு தருவது கடினமாகிவிடும்.. அதேசமயம் எதிர்க்கட்சி திமுக, இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து விமர்சிக்கிறார்கள் என்பதற்காகவே உடனடியாக நடவடிக்கை எடுத்தால், அது எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கு முதல்வர் பணிந்துவிட்டார் என்ற தோற்றத்தை உருவாக்கிவிடும்.
கீர்த்தனாவுக்கு ஆதரவு
அதே நேரத்தில், கீர்த்தனாவுக்கு ஆதரவுக் குரல்களும் ஒலிக்காமல் இல்லை. "ஆரம்பத்தில் யார் தான் தவறு செய்வதில்லை? 30 வயதே ஆன, அதிலும் அரசியலுக்கு புதியவரான ஒரு பெண்ணை இவ்வளவு கொடூரமாக சித்திரித்து, தொடர்ந்து ட்ரோல் செய்வது முறையல்ல என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, நிர்வாகத்தைக் கற்றுக்கொள்ள அவருக்கு கொஞ்சமாவது கால அவகாசம் தேவை என்றும் அமைச்சர் கீர்த்தனாவுக்கான சப்போரட்டுகளும் அதிகரித்தபடி உள்ளன.
தவெக இமேஜ் டேமேஜ்?
இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறும்போது, "எப்போதுமே ஒரு புதிய கட்சியின் ஆட்சி நடக்கும்போது, மக்களின் கவனம் மொத்தமும் அரசின் மீதுதான் இருக்கும்... ஒரு அமைச்சரின் செயல்பாடுகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பள்ளி மாணவிகளின் தன்னம்பிக்கையைக் குலைப்பது போல் இருப்பது ஒட்டுமொத்த தவெக அரசின் இமேஜையும் டேமேஜ் செய்யும்
எனவே, கீர்த்தனா விஷயத்தில், ஆதரவை விட சலசலப்பு சத்தமே அதிகமாக கேட்பதால், தன்னுடைய ஆரம்பக்கட்டத் தவறுகளைத் திருத்திக்கொண்டு, தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்த்து, தனக்கு ஒதுக்கப்பட்ட தொழில்துறையில் அவர் கவனம் செலுத்த வேண்டியதே தற்போதைய அவசியம்" என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
