கரூரில் இருந்து ஓடியது யார்? மக்களுக்கு நன்றாக பதில் தெரியும்.. விஜய்க்கு கனிமொழி பதிலடி!
தூத்துக்குடி: கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் உதவியது யார்? ஓடியது யார்? என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசலுக்கு காவல்துறையும், அதற்கு மூளையாக இருந்தது திமுக என்றும் முதல்வர் விஜய் குற்றம்சாட்டிய நிலையில், கரூர் வழக்கு சிபிஐ விசாரணையில் இருப்பதால் பொறுப்புடன் பேசுகிறேன் என்றும் கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின் சுமார் 10 மாதங்களான நிலையில், முதல்வர் விஜய் கரூர் வந்தார். கரூரில் நடைபெற்ற தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசுகையில், என் அக்கா, தங்கைகளை இழந்திருக்கிறேன். வலியோடு இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டேன் என்று சொல்வதா? நான் அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதி அல்ல. வாய் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா?

பணமா, ஜனமா என்று கேட்டால், எனக்கு ஜனம் தான் முக்கியம். நாமக்கல்லில் இருந்து கரூர் வந்த போது, அங்கிருந்த போலீஸ் எங்களை அலர்ட் செய்யாதது ஏன்? நெடுஞ்சாலையில் இருந்து எங்களை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்ததே போலீஸ் தான்.. கரூர் சம்பவத்திற்கு மூளையாக இருந்தது யார்? கரூர் சம்பவத்தை வைத்து அரசியல் செய்தனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
கரூர் சம்பவத்தில் நேரடியாக காவல்துறை மீதும், திமுக மீதும் விஜய் குற்றம்சாட்டி இருப்பது விவாதமாகி இருக்கிறது. ஏற்கனவே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூரில் ஒரு கணக்கு தீர்க்க வேண்டியது இருக்கிறது என்று பேசி இருந்தார். இன்று விஜய்யின் பேச்சும் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை ஒட்டியே அமைந்திருக்கிறது.
இந்த நிலையில் முதல்வர் விஜய்யின் பேச்சிற்கு திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து கனிமொழி பேசுகையில், கரூர் விவகாரத்தில் முதல்வர் விஜய் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். கரூர் வழக்கு சிபிஐ விசாரணையில் இருக்கிறது.
விசாரணையில் இருக்கக் கூடிய விஷயம் பற்றி பேசாமல் இருப்பதுதான் நல்லது. அவர்கள் அப்படி பேசுகிறார்கள் என்பதால், நான் பொறுப்பின்றி பேச முடியாது. கரூரில் மக்களுடன் இருந்தது யார்? விட்டு ஓடிச் சென்றது யார் என்று மக்களுக்கு தெரியும் என்று பதிலடி கொடுத்துள்ளார். சிபிஐ விசாரணைக்கு விஜய்யும் 2 நாட்கள் ஆஜராகினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications