மழை பிச்சு உதறப்போகுது.. இன்று மாலை 4 மணி வரை 13 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 19 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுப்பாதை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், கோவை, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, நெல்லை, திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ முதல் 3.1 கிமீ உயரத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) தெலங்கானாவிலிருந்து கர்நாடக கடலோரப்பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் வரை நிலவுகிறது.
நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் நாளை மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வரும் 12 முதல் 14ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
அதேபோல், வரும் 15ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.













Click it and Unblock the Notifications