இதயத்தைப் பாதுகாக்கும் 20 நிமிட சீக்ரெட்.. அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்றீங்களா.. நோட் பண்ணுங்க
சென்னை: ஓடிக் கொண்டே இருக்கும் இந்த அவசர உலகில் உடற்பயிற்சி குறித்து நாம் பெரிதும் கவலைப்படுவதில்லை. ஆனால், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து இதய பாதிப்புகளை உண்டாக்கும். தினமும் 20 நிமிடம் செலவிட்டால் இந்த ரத்த அழுத்தத்தை கணிசமாகக் குறைக்கலாம் என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
பரபரப்பான இந்த வாழ்க்கை முறையில் நிற்க கூட நேரமில்லாமல் கடிகாரம் போல சுழன்று கொண்டே இருக்கிறோம். தற்போது உடற்பயிற்சி செய்வது என்பதையே பலரும் மறந்து விட்டோம். நாம் அனைவரும் ஓய்வெடுக்க கூட நேரமில்லாமல் அதிகமான வேலைகளைச் செய்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், அது உடற்பயிற்சியில் சேருமா என்றால் கிடையாது.

பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வது, வருவது, சமைப்பது, வீட்டு வேலைகளைச் செய்வது, அலுவலக வேலைகளைச் செய்தவது என அனைத்து வேலைகளுக்கும் நாம் வாகனங்கள் மற்றும் பல்வேறு இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகிறோம். அதனால் நாம் நிறைய வேலைகள் செய்தாலும் அது உடற்பயிற்சியில் சேருவதில்லை.
நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வது, இரவில் கண் விழித்து வேலை செய்வது போன்றவற்றால் இன்று இளம் வயதிலேயே பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதனால் தான் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் பலரும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இன்றைய காலத்தில் எதாவது ஒரு விஷயத்தை செய்ய நேரம் ஒதுக்குவது என்பதே பெரும் பாடாக இருக்கிறது. ஆனால், நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் கட்டாயமாக நேரம் ஒதுக்கித்தான் ஆக வேண்டும். உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைக்க உடற்பயிற்சி மிகவும் அவசியமாகும். அந்த வகையில், ஐந்து நிமிடங்கள் கூடுதலாக உடற்பயிற்சி செய்வது கூட ரத்த அழுத்தத்தை குறைக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். அதில், ஐந்து நாடுகளில் உள்ள 14 ஆயிரம் தன்னார்வலர்களின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தன்னார்வலர்கள் தினசரி தாங்கள் செய்து வரும் உடற்பயிற்சிகளான நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
லிப்ட் பயன்படுத்துவதற்கு பதிலாக படிக்கட்டில் ஏறுதல், வேகமாக நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல், ஓட்டம், மிதிவண்டி ஓட்டுதல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே இதயம் பாதுகாக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. நாள்தோறும் 20 முதல் 27 நிமிடங்கள் வரை படிக்கட்டு ஏறுதல், வேக நடைப்பயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் போன்றவை மேற்கொண்டாலே இதயத்தை காக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதுவே இதயத்தில் ஏற்படும் நோய் அபாயத்தை 28 சதவீதம் வரை குறைக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. ஹை பிளட் பிரெஸர் எனும் உயர் ரத்த அழுத்தப் பிரச்னையை உலக அளவில் பலரும் சந்திக்கும் பிரச்னையாக உள்ளது. இந்த உயர் ரத்த அழுத்தம் இதயத்தை கடுமையாக பாதிக்கும். சிறிய சிறிய உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதய பாதிப்புகளின் அபாயத்தை குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, டாக்டர் ஜோ ப்ளாட்ஜெட் கூறுகையில், நடப்பது, ஓடுவது, வேக நடைப்பயிற்சி, மிதிவண்டி ஓட்டுவது போன்ற சிறிய சிறிய உடற்பயிற்சிகளே ரத்த அழுத்தத்தை பெரும்பாலும் குறைக்கும். இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. ஒருவரின் உடல் எப்படி இருந்தாலும் இந்த வகையான உடற்பயிற்சிகள் மிகவும் உதவியாக இருக்கும்.
நீண்ட நேரமாக உட்கார்ந்தே இருப்பது, வேலை செய்வது போன்றவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். நிற்பது, நடப்பது போன்றவை ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications