அதிர்ச்சி.. அட்மிட் ஆனாலும் கொரோனா நோயாளிகளுக்கு பணம் தர மறுக்கும் காப்பீடு நிறுவனங்கள்
சென்னை: கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டதா? உங்களுக்கு துணை நோய்கள் இருக்கின்றனவா? மருத்துவர் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தியதன் பேரில் சில இன்சூரன்ஸ் (காப்பீடு) நிறுவனங்களை நம்பி மட்டும் மருத்துவமனையில் அட்மிட் ஆகாதீங்க!
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பால் தற்போது உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. ஓமைக்ரானின் திரிபுவான இந்த கொரோனா இணைநோய்கள் கொண்டவர்களை அதிகம் தாக்குகிறது.
பொதுவாக இணைநோய் இருப்பவர்களுக்கு கொரோனா வந்துவிட்டால் அவர்களுக்கு எந்த நேரத்தில் எதனால் பாதிப்பு ஏற்பட்டு உடல்நிலை மோசமடையும் என்பது தெரியாது. இதனால் மருத்துவர்கள் இணைநோய் கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் அவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

அப்போதுதான் மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ஆக்ஸிஜன் அளவு, காய்ச்சல் ஆகியவை கணக்கிடப்படும். அது போல் ஆஸ்துமா இருப்பவர்கள், எக்ஸ்ரே மூலம் நெஞ்சில் சளி இருப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு நெபுலைசர் எனப்படும் கருவி மூலம் சில மருந்துகளை கலந்து ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் மாஸ்க் வழியாக சுவாசிக்க வைத்து அந்த சளி கரைக்கப்படுகிறது.
ஒரு வேளை இதய நோய் இருந்தாலும் அவர்களுக்கு இசிஜி, எக்கோ எடுக்கப்பட்டு அதில் மாறுபாடுகள் இருந்தால் சிகிச்சை அளிக்கப்படும். இது போல் தொடர்ந்து அந்த நோயாளி மருத்துவர்கள், செவிலியர்களின் கண்காணிப்பில் இருப்பார்கள். அதனால்தான் மருத்துவமனையில் அனுமதிக்க சொல்கிறார்கள். பொதுவாக மருத்துவமனையில் ஒரு நாள் அதாவது 24 மணி நேரம் அனுமதிக்கப்பட்டாலே அதற்கு இன்சூரன்ஸ் இருந்தால் அந்த நிறுவனங்கள் நமது ப்ரீமியத்திற்கேற்ப பணத்தை செலுத்திவிடும்.
இதை கருத்தில் கொண்டு நிறைய பேர் கொரோனா வந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். நோயாளி அட்மிட் ஆனவுடன் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மருத்துவமனை மூலம் கேஸ்லெஸ் கிளைமிற்காக அனுமதி கேட்கப்படுகிறது (அப்ரூவல்). ஆனால் சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சொல்வது என்ன தெரியுமா?
நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருடைய ஆக்ஸிஜன் அளவு, ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு நார்மலாக இருக்கிறது. எனவே இவர்கள் புறநோயாளியாகவே சிகிச்சை மேற்கொள்ளலாம். இவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதி என்பது தேவையில்லை. எனவே எய்ம்ஸ், ஐசிஎம்ஆர் வகுத்த அளவுகோலின்படி இந்த நோயாளிக்கு கேஸ்லெஸ் கிளைமுக்கான பிராசஸ் நிராகரிக்கப்படுகிறது என கடிதம் அனுப்பிவிடுகிறார்கள்.
இதனால் நோயாளிகள் இன்சூரன்ஸின் நிராகரிப்பால், மிகவும் கஷ்டப்பட்டு கடனாகவோ நகையை அடமானம் வைத்தோ பணத்தை புரட்டி மருத்துவமனைகளில் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மருத்துவர்களே இணைநோய் உள்ளவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அது உயிர் கொல்லி என்பதால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் vital conditions களில் மாறுபாடு ஏற்படலாம் என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்துகிறார்கள்.
ஆனால் சில இன்சூரன்ஸ் நிறுவனங்களோ தங்களுக்கான மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு அந்த நோயாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டுமா இல்லை வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டுமா என்பதை முடிவு செய்கின்றன. ஆக இவர்கள் சொல்வதை பார்த்தால் குத்துயிரும் கொலையுயிருமாக வந்தால்தான் இன்சூரன்ஸ் தருவார்கள் போல!
கொரோனா அலை காலகட்டத்தில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதிகமாக பணத்தை செலவிட வேண்டி வந்ததால் இப்போது அதை கஞ்சத்தனமாக மீட்டெடுக்க முயற்சி செய்கிறார்கள் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இன்சூரன்ஸ் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு உயிரை காக்க வேண்டியது மருத்துவர்களின் கடமை, அதற்கான வழியை (சிகிச்சை, பணம் செலுத்துதல்) ஏற்படுத்தி கொடுப்பது உறவினர்களின் கடமை என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால் கையில் காசு இல்லாத சூழலில் மருத்துவ செலவுகளை சமாளிக்கவே இது போல் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை ஆண்டுக்கு இத்தனை ஆயிரம் ரூபாய் செலுத்தி எடுக்கிறார்கள். ஏற்கெனவே கொரோனா ஊரடங்கால் கடந்த 2020 இல் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை தலைநிமிரவே இல்லை. அப்படியிருக்கும் போது கொரோனா வந்தவர்கள் சில இன்சூரன்ஸ் நிறுவனங்களை நம்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் சிகிச்சைக்கான கட்டணத்தை மிகவும் கஷ்டப்பட்டு செலுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது.












Click it and Unblock the Notifications