”ஐஸ் ஆப்பிள்” பனை நுங்குவில் இவ்ளோ நன்மைகளா? வெயிலில் வெளியே போறவங்க அவசியம் தெரிஞ்சுக்கோங்க
சென்னை: பனை நுங்கு (ice apples) சாப்பிடுவதால் நம் உடலில் பல நன்மைகள் ஏற்படுகின்றன. கோடை வெயிலில் சுற்றிவிட்டு வந்து நுங்கு சாப்பிடும் போது நம் உடல் அப்படியே குளிர்ந்துவிடுவதை நாம் உணர முடியும். நுங்கு சாப்பிடுவதால் அஜீரண கோளாறுகள், முகப்பரு வராமல் தடுப்பது, சுகர், கொழுப்பு அதிகரிக்காமல் சீராக வைத்திருப்பது போன்ற பல நன்மைகள் இருக்கின்றன.
கோடை வெயில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. பகல் வேளைகளில் வீட்டை விட்டு ஒரு அடி எடுத்து வைத்தால் கூட உடல் முழுவதும் வியர்வை கொட்டுகிறது. வியர்வையில் குளித்துவிட்டோம் என சொல்லும் அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், வெயிலுக்கு இதமாக இளநீர், சர்பத், நுங்கு உள்ளிட்டவற்றை மக்கள் வாங்கி சாப்பிட்டு இளைப்பாறுவதை பார்க்க முடிகிறது.

பனை நுங்கு பலன்கள்
குறிப்பாக கோடை காலத்தில் அதிகம் கிடைக்க கூடிய ஒரு உணவு பொருளாக பனை நுங்கு உள்ளது. சாலையோர தள்ளுவண்டி கடைகள், ஹைவேக்களில் பயணம் செய்யும் போது ஆள் அரவம் அற்ற பகுதிகளில் கூட நுங்கு வியாபாரிகள் சாலையோரம் வைத்து விற்பதை பார்க்க முடிகிறது. ஆங்கிலத்தில் ஐஸ் ஆப்பிள் என்று சொல்லக்கூடிய இந்த பனை நுங்கு உடலுக்கு குளிர்ச்சியை தருவது மட்டும் இன்றி எண்ணற்ற பலன்களை கொடுக்கிறது. பனை நுங்கு சாப்பிடுவதால் கிடைக்க கூடிய நன்மைகளை பற்றி இங்கே பார்க்கலாம்..
நீர்ச்சத்து இழப்பு ஏற்படாது
பனை மரம் கற்பக விருட்சம் என்று அழைக்கப்படுகிறது. பனை மரத்தில் தேவையில்லாத பொருள் என எதுவுமே கிடையாது. பனையின் வேர் முதல் மட்டை வரை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக உள்ளது. கோடைக்காலத்தில் பனை மரத்தில் நுங்கு காய்க்க தொடங்கும். இதை ஆரம்ப நிலையிலையே பக்குவப்படுத்தி பதநீர் எடுக்கிறார்கள் பனை தொழிலாளர்கள்.
பதநீர் எடுக்க பக்குவப்படுத்தாமல் விடாமல் வளரும் பாளைகள், நுங்காக காய்க்க தொடங்கும் இவற்றை வெட்டி கடைகளில் விற்பனை செய்வதை பார்க்க முடியும். இந்த நுங்கில் அதிக நீர்ச்சத்து உள்ளது. எனவே இதனை சாப்பிடும் போது உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படாமல் தடுக்க உதவும். அதோடு, எலக்டோலைட் சமநிலையை ஏற்படுத்தும்.
முகப்பரு வரவிடாமல் தடுக்கும்
நுங்கில் அதிக அளவு நார்ச்சத்துகள் இருப்பதால், ஜீரண சக்தியை அதிகரிக்கும். மலச்சிக்கலை தடுக்கிறது. நமது வயிறு சுகாதாரத்தை மேம்படுத்துகிறது. அதாவது அஜீரண கோளாறுகள் உள்ளிட்டவை வராமல் தடுக்கிறது. நுங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரிக்கும் சரும நிறத்தை மேம்படுத்துவதோடு முகப்பருவையும் வரவிடாமல் குறைக்கும்.
ஐஸ் ஆப்பிளில் ஏ,சி,பி ஆகிய வைட்டமின்கள் உள்ளன. அதுபோக அயர்ன், பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட தாதுக்களும் உள்ளன. இது நம் உடல் நலனை பேணிக்காக்க பெரிதும் உதவும். நுங்கை சாப்பிட்டவுடன் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். வெயிலில் அலைந்துவிட்டு வந்து நுங்கை சாப்பிடும் போது உடலுக்கு நீர்ச்சத்து கிடைப்பதால் புது உற்சாகம் கிடைப்பதை உடனடியாக உணர முடியும்.
உடல் எடை குறைய
உடலில் சர்க்கரை அளவு, கொழுப்பு அளவு ஆகியவற்றை பேணவும் பனை நுங்கு உதவுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. குமட்டல் போன்றவை வராமலும் இது தடுக்கிறதாக கூறுகிறார்கள்.
பனை நுங்கில் குறைந்த அளவு கலோரியே உள்ளது. எனவே, உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏற்ற சத்தான உணவு பொருளாக நுங்கு உள்ளது.












Click it and Unblock the Notifications