"கட்டியணைத்தபடி தூங்க பிடிக்குமா?" உங்களுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்! ஆனா சின்னதா ஒரு ட்விஸ்ட்
டெல்லி: இரவு கட்டியணைத்தபடி படுத்துத் தூங்குவது ரத்த அழுத்தம் தொடங்கி இதய பாதிப்பு வரை பல வித பிரச்சினைகளைச் சரி செய்ய உதவுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
நீங்கள் படுக்கையில் இருக்கும் போது உங்கள் அன்புக்குரியவரின் மார்பில் உங்கள் தலையை வைத்தபடி படுக்கும் போது அமைதியான உணர்வு கிடைக்கும். மேலும், செல்ல நாய் கட்டியணைத்துப் படுத்துக் கொண்டால் பலருக்கும் நிம்மதியாக இருக்கும்.

இதற்கு என்ன காரணம் என்றால் மனிதர்களாகிய நாம் கட்டிப்பிடிக்க விரும்புகிறோம் என்கிறது ஆய்வு முடிவுகள். கமல்ஹாசன் வசூல்ராஜா படத்தில் சொன்னது போலக் கட்டியணைப்பது நமது உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளைத் தருகிறதாம்.
ஆய்வு: 40 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 90% பேர் தங்கள் பார்ட்னரை கட்டியணைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் உடலுக்குப் பல நன்மைகள் ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கட்டியணைக்கும் போது நமது உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்க்கலாம்.
கட்டியணைக்கும் போது மன அழுத்தம் குறைவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் அடுத்த முறை மன அழுத்தம் ஏற்பட்டால் உங்கள் அன்பிற்குரியவர்கள் அல்லது செல்லப்பிராணியைக் கட்டியணைத்துக் கொள்ளுங்கள். ஆக்ஸிடாஸின் என்பது கட்டியணைக்கும் போது சுரக்கிறது. இது நம்மை நேசிக்கவும் மகிழ்ச்சியாகவும் உணர உதவுகிறது. மேலும் அது மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
இதய பாதிப்பு: மேலும், இது கார்டிசோலின் அளவைக் குறைக்கிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. உங்கள் இதயத் துடிப்பைச் சீராக்கவும் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் இது உதவுகிறது. ரத்த அழுத்தம் பெரும்பாலும் மன அழுத்தத்துடன் இணைக்கப்படுகிறது, மன அழுத்தத்தைக் கட்டியணைப்பது குறைப்பதால் அது ரத்த அழுத்தத்தையும் குறைத்துவிடும்.
நீங்கள் உங்கள் பார்ட்னருடன் தூங்கும் போது நிம்மதியாக தூங்குவது போல உணர்ந்து இருக்கிறீர்களா.. அதற்குக் கட்டியணைத்துக் கொள்வதே முக்கிய காரணமாகும். தூங்கும் போது cuddle அதாவது கட்டியணைத்தபடி படுப்பது அமைதி மற்றும் பாதுகாப்பு உணர்வைத் தரும். இது உங்களுக்கு எளிதாகத் தூக்கத்தைத் தரும். பதற்றம் அதிகம் இருப்பவர்கள் அதிக எடையுள்ள போர்வையைத் தூங்க பயன்படுத்துவார்கள். அதேபோன்ற ஒரு பலனைத் தான் கட்டியணைப்பது நமக்குத் தருகிறது.
உடல் வலி: இது மட்டுமின்றி தொடர்ச்சியாகக் கட்டியணைத்துக் கொள்வது சளி உள்ளிட்ட வைரஸ் பாதிப்புகள் வராமலும் தடுக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒருவர் காயமடையும் போது அல்லது உடல் வலியை ஏற்படும் போது அன்பிற்குரியவர்களைக் கட்டியணைத்துக் கொண்டால் அது வலியையும் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. கடந்த 2018இல் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் இதழில் வெளியாகி உள்ள ஆய்வு இதை உறுதி செய்கிறது.
இவை அனைத்தையும் விட உங்கள் பார்ட்னரை நீங்கள் கட்டியணைப்பதும் இரவில் அவரை கட்டியணைத்தபடி படுத்துக் கொள்வதும் இருவருக்கும் இடையேயான உறவைப் பல மடங்கு மேம்படுத்துகிறதாம். இதன் மூலம் உங்கள் இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரிக்கிறது. இது சண்டைகளைக் குறைப்பது தொடங்கி ஏகப்பட்ட பாசிட்டிவ் பலன்களை நமக்குத் தருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ட்விஸ்ட்: அதேநேரம் இது அனைவருக்கும் பொருந்தும் எனச் சொல்ல முடியாது. ஏனென்றால் சிலருக்குக் கட்டியணைப்பது சுத்தமாகவே பிடிக்காது. திடீரென யாராவது அருகே வந்தால் இவர்களுக்கு ஒரு மாதிரி இருக்கும்,. அவர்களுக்கு இந்த கட்டிப்பிடி வைத்தியம் செட் ஆகாது. ஆனால், இவர்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் பெரும்பாலானோருக்கு அது நிம்மதியைத் தான் தருகிறதாம்.


Click it and Unblock the Notifications
