"தொப்பை" டூ ரத்த அழுத்தம்! தயிர் சாதத்தை சாதாரணமா நினைக்காதீங்க.. எப்போது சாப்பிட்டாலும் பல நன்மைகள்
சென்னை: தயிர் சாதம் என்று பொதுவாக ஒருவரைக் கிண்டல் செய்து பார்த்து இருப்பீர்கள்.. ஆனால் தயிர் சாதத்தில் எந்தளவுக்கு நன்மை இருக்கிறது தெரியுமா.. அது குறித்து நாம் பார்க்கலாம்.
பெரும்பாலான தென்னியர்களின் உணவுகளில் தயிர் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். பலரும் தயிர் சாதத்துடன்தான் தங்கள் உணவை முடித்துக்கொள்வார்கள். அதேநேரம் வட இந்தியாவில் தயிர் சாதம் சாப்பிடும் பழக்கம் பெரியளவில் இருக்காது.

பிரியாணியாக இருந்தாலும் சரி புல் மீல்ஸ் ஆக இருந்தாலும் சரி தயிர் சாதம் சாப்பிட்டு உணவை முடிப்பது சரியாக இருக்கும். இது நமது வயிற்றைக் குளிர்விக்க உதவுகிறது. தமிழகத்தில் ஆண்டு முழுக்க வெப்பம் இருக்கும் நிலையில், தயிர் என்பது மிகச் சிறந்த உணவாக இருக்கிறது. இந்த தயிர் சாதம் உடல் வெப்பத்தைக் குறைக்க உதவுகிறது.
தயிர் சாதம்: மேலும், வயிற்றில் எதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் தயிர் அதற்குச் சிறந்த மருந்தாக இருக்கும். இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், "இப்போது நாம் அடிக்கடி வெளியே சாப்பிடுகிறோம். இதனால் அஜீரணம் அல்லது வயிற்றுப்போக்குக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதுபோல வயிற்றில் பிரச்சினை ஏற்படும் போது தயிர் சாதம் சிறந்த உணவாக இருக்கிறது.
தயிரில் புரோபயாடிக்குகள் அதிகம் இருக்கிறது. இதன் மூலம் ஆரோக்கியமான நுண்ணுயிர் சமநிலையை மீட்டெடுக்க முடிகிறது. இது செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. வயிற்றுப்போக்கை நிறுத்தவும் இது உதவுகிறது" என்றார். தயிரில் புரதம் அதிகமாக இருக்கிறது. ஒரு நல்ல ஆக்ஸிஜனேற்றியாக இருக்கிறது. மேலும், அதில் கால்சியமும் அதிகம் இருக்கிறது.
தயிர் சாதமாகச் சாப்பிடுவதும் உடலுக்குப் பல நன்மைகளைக் கொடுக்கிறது. அரிசியில் மெக்னீசியம், பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. இது வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது. மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு தயிர் சாதத்தை எடுத்துக் கொண்டால் வலி சற்று குறையும்.
செரிமானத்திற்கு உதவும்: உணவு சாப்பிடும் போது தயிர் சாதத்தைக் கடைசியாகச் சாப்பிடக் காரணமே இதுதான். இது உணவை நன்றாக ஜீரணிக்க பெரியளவில் உதவுகிறது. அஜீரண பிரச்சினை இருப்போருக்குத் தயிர் சாதம் பெரியளவில் பலன் கொடுக்கும்.
நோய் எதிர்ப்புச் சக்தி: தயிர் சாதத்தை எடுத்துக் கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தி உடலை நோய்களை எதிர்த்துப் போராடும் திறனை உருவாக்குகிறது.
தயிர் மன அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் உங்கள் மனநிலையை நல்ல நிலைக்கு உயர்த்தும். தயிரில் காணப்படும் புரோபயாடிக் பாக்டீரியா மற்றும் நல்ல கொழுப்புகள், மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவதை பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
ரத்த அழுத்தம்: தயிர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது. தயிரில் இரும்பு, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் உள்ளன. தயிர்ச் சாதத்தில் மிகக் குறைந்த அளவு உப்பு உள்ளது, இது ரத்தத்தை ஒழுங்குபடுத்தவும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. தயிர்ச் சாதம் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, ரத்த அழுத்தம் பிரச்சினை இருந்தால், தயிர்ச் சாதம் சாப்பிடலாம்.
தயிர்ச் சாதம் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. கொழுப்பை எரிக்கத் தயிர் ஒரு சிறந்த உணவு என்று கூறப்படுகிறது. தயிரில் அதிக அளவு கால்சியம் உள்ளது. தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து எடை குறைக்க உதவுகிறது. தயிர்ச் சாதம் குறைவாகச் சாப்பிட்டாலே போதும், அது பசியைக் கட்டுப்படுத்தும். மற்ற வகை உணவுகளுடன் இது குறைவான கலோரிகளைக் கொண்டுள்ளது. எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்குத் தயிர்ச் சாதம் நல்ல சாய்ஸ்.












Click it and Unblock the Notifications