வீட்டு தயிரை விட பாக்கெட் தயிர் அதிக நாட்கள் கெட்டு போகாமல் இருப்பது எப்படி! கெமிக்கல் காரணமா?
சென்னை: கடைகளில் நீங்கள் தயிர் வாங்கும் போது ஒன்றைக் கவனித்து இருப்பீர்கள்.. அதாவது வீட்டில் செய்யும் தயிர் ஒரே நாளில் புளித்துப் போனாலும், கடையில் வாங்கும் பாக்கெட் தயிர் பல நாட்கள் வரை புளித்துப் போகாது. இதற்கு என்ன காரணம்... கடை தயிரில் கெமிக்கல் எதாவது இருக்கிறதா என்பதைப் பிரபல ஊட்டச்சத்து வல்லுநர் விளக்கியுள்ளார். அது குறித்து நாம் பார்க்கலாம்.
நம்மில் பெரும்பாலோருக்கு ஒரு சந்தேகம் இருக்கும். அதாவது வீட்டில் நாம் செய்யும் தயிர் ஒரே நாளில் கெட்டு விடும். குளிர் காலம் என்றால் அதிகபட்சம் இன்னொரு நாள் வரும். அதன் பிறகு புளிக்க ஆரம்பித்திடும்.

பாக்கெட் தயிர்: அதேநேரம் கடைகளில் நாம் வாங்கும் பாக்கெட் தயிர் பல நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். பிரிட்ஜில் வைக்கவில்லை என்றாலும் கூட சில நாட்கள் வரை எந்தவொரு புளிப்பும் இல்லாமல் இருக்கும். இதனால் நம்மில் பலரும் கடை தயிரில் கெமிக்கல் அதிகம் இருப்பதாலே கெட்டுப்போகாமல் இருக்கிறது என நினைத்திருப்போம். ஆனால் உண்மை அது இல்லை.
கடை தயிர் அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கக் காரணமே வேறு.. இதைப் பிரபல குழந்தைகள் நல மருத்துவரும் ஊட்டச்சத்து நிபுணருமான அருண்குமார் விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில், "ஏன் கடை தயிர் அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் போவதில்லை என்ற சந்தேகம் வரலாம்..
காரணம்: பாலில் சில நல்ல பாக்டீரியாக்கள் இருக்கிறது. லாக்டோபாகிலஸ் (lactobacillus) போன்ற நல்ல பாக்டீரியாக்கள் சிறிது நேரத்தில் பாலில் இனப்பெருக்கம் செய்ய ஆரம்பிக்கும். அப்படி இனப்பெருக்கம் அடையும் அது லாக்டோஸ் என்ற சர்க்கரையை அது லாக்டிக் ஆசிட் என்ற அமிலமாக மாற்றும். அதுவே இந்த புளிப்பிற்குக் காரணம்.
நாம் வீட்டில் தயிர் செய்யும் போது லாக்டோபாகிலஸ் மட்டும் இருக்காது. பாத்திரத்தில் சில பாக்டீரியாக்கள் இருக்கும். பழைய தயிர் ஊற்றும் போது அதில் லாக்டோபோகிலஸ் மட்டுமின்றி அதில் பல வகை பாக்டீரியாக்களும் இனப்பெருக்கம் அடையும். இப்படி எல்லா வகை பாக்டீரியாக்களும் இனப்பெருக்கம் அடையும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அது எளிதாகக் கெட்டுப் போய்விடும். தேவையில்லாத பாக்டீரியாக்கள் அதிகம் வளர்வதே இதற்குக் காரணமாகும். இதன் காரணமாகவே ஓரிரு நாட்களுக்கு மேல் வீட்டுத் தயிரை வைத்திருக்க முடியாது.
கடை தயிர்: அதேநேரம் கடையில் கிடைக்கும் தயிர்களில் இப்படி இருக்காது. அதில் அவர்கள் எடுத்த உடன் pasteurized முறையில் பாலில் இருக்கும் மற்ற அனைத்து பாக்டீரியாக்களையும் நீக்கிவிடுவார்கள். எந்த வகை பாக்டீரியா, அதாவது இங்கே லாக்டோபாகிலஸ் தேவை.. அதை மட்டும் சேர்ப்பார்கள். பழைய தயிரை எல்லாம் அதில் ஊற்ற மாட்டார்கள்..
மேட்டரே இதுதான்: அதுவும் எத்தனை லிட்டர் பாலுக்கு எவ்வளவு லாக்டோபாகிலஸ் சேர்க்க வேண்டும் என்பதைக் கணக்கிட்டு அதைப் பொறுத்தே லாக்டோபாகிலஸை சேர்ப்பார்கள். மேலும், அதைத் துல்லியமாக இத்தனை மணி நேரம் இந்த குறிப்பிட்ட வெப்பத்தில் வைக்க வேண்டும் என்பதைக் கணக்கிட்டு வெளியே வைத்து தயிராக மாற்றி இருப்பார்கள். வேறு எந்த பாக்டீரியாக்களும் இல்லாத வகையில் பேக் செய்துவிடுவார்கள். இதன் காரணமாகவே பாக்கெட் தயிரை வீட்டிற்கு வாங்கி வந்தாலும் அது நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.
அதேநேரம் பாக்கெட் தயிரிலும் கூட நமது உடலுக்குத் தேவையான புரோபயாடிக்குகள் என்பட்டும் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கவே செய்கிறது. அதேநேரம் உடல்நலம் ஆரக்கியோம் என வரும் போது பாக்கெட் தயிருக்கும் வீட்டில் தயிருக்கும் பெரியளவில் வேறுபாடுகள் இல்லை. பாக்கெட் தயிர் வாங்கும் போது live cultures இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள். அவை இருந்தால் ரொம்ப நல்லது" என்றார்.












Click it and Unblock the Notifications