அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகையின் அட்டை படத்தில் 15 வயது சிறுவனின் போட்டோ! அப்படி என்ன செய்தான்?
சென்னை: அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகையின் அட்டைப் படத்தில் 15 வயதான பாலகனின் படம் இடம்பெற்றிருக்கிறது. அப்படி இந்த 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் என்னதான் செய்தான் என்பதை பார்க்கலாம்?
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் பிரபல இதழான டைம்ஸ் பத்திரிகையின் அட்டைப் படத்தில் இடம்பெறும் விசயங்கள் பேசு பொருளாக மாறும் அவ்விதத்தில் இந்த ஆண்டு டைம்ஸ், இந்த ஆண்டின் சிறார் விருதை ஹெமன் பெகேல் எனும் 15 வயது வளர் இளம் வயது பாலகன் வென்று டைம்ஸ் அட்டைப் படத்தில் இடம் பிடித்திருக்கிறான்.

டைம்ஸ் பத்திரிக்கை மூன்று வருடங்களாக இந்த விருதை அறிவித்து தனது அட்டைப் பக்கத்தில் சிறார்களின் புகைப்படங்களை வெளியிட்டு அடையாளப்படுத்துவதும் கவுரவப்படுத்துவதும் பாராட்டிற்குரியது. இத்தகைய விருதைப் பெற ஒன்பதாவது படிக்கும் இந்த இளம் பாலகன் செய்த செயல் தான் என்ன? இதற்கு நாம் 2009 ஆம் ஆண்டுக்குச் செல்ல வேண்டும்.
ஆப்ரிக்காவின் பொருளாதாரத்தில் நலிவுற்ற பஞ்சத்தாலும் உள்நாட்டுக் கலவரங்களாலும் தொடர் இன்னல்களுக்கு உள்ளாகும் எத்தியோப்பியாவில் பிறந்தவர் ஹெமன் பெகேல். அவரது நாட்டில் மக்கள் வெயிலில் காய்ந்து பாடுபட்டு உழைக்க வேண்டியிருப்பதாலும் அதனால் சரும நோய்கள் குறிப்பாக புற்று நோய் தோன்றுவதை பார்த்து வளர்ந்திருக்கிறார். அது அவரை பாதித்ததாகக் கூறுகிறார். இதற்கு ஏதாவது தன்னால் இயன்ற ஏழை எளியோருக்கும் உண்டான தீர்வை வழங்க முயல வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.
அடுத்த சில ஆண்டுகளில் அவரது பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறுகிறார். அவரது ஏழாம் அகவை தொடங்கிய பிறந்தநாள் விழாவில் அவருக்கு வேதியியல் விளையாட்டு கிட் பரிசாகக் கிடைக்கிறது. அதில் உள்ள சோடியம் ஹைட்ராக்சைடு கூட சமையல் சோடா உப்பு , துவைக்க உதவும் டிடர்ஜண்ட் போன்றவற்றை ஊற்றி இரவு படுக்கப்போகும் போது படுக்கைக்குக் கீழ் வைத்து விட்டு அடுத்த நாள் என்ன மாதிரி வினை நேர்ந்திருக்கிறது என்று பார்ப்பாராம்.
இந்நிலையில் நோய் நிவாரணிகளைத் தயாரிக்கும் நிறுவனமான 3M இளம் ஆராய்ச்சியாளருக்கான விருதை அறிவித்து அதற்குண்டான தகுதியான ஆராய்ச்சிகளையும் முடிவுகளையும் சமர்ப்பிக்குமாறு அரைக்கூவல் விடுத்தது. ஹெமன் பெகேல் தனது சிறுவயது ஏக்கம் ... கூடவே வேதியியலில் உள்ள ஆர்வமும் இணைந்து இந்த போட்டியில் பங்குபெறும் முகமாகத் தனது ஆராய்ச்சியை செய்ய உந்தியது.
இவர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட மருந்து "இமிகுய்மோட் (IMIQUIMOD)"ஆகும்.

எதிர்ப்பு சக்தி செயல்படும் விதத்தை மாற்றி அமைத்து அதன் மூலம் புற்று நோய் செல்களை கட்டுப்படுத்தி அழிக்கும் தன்மை இந்த மருந்துக்கு உண்டு. இமிகுய்மோட் எனும் மருந்து சரும நோயான ஏக்டினிக் கெரடோசிஸ் ( அதிகமாக சரும செல்கள் வளரும் தன்மை) - இது சரும புற்றுநோய்க்கு முந்தைய ஆரம்பகட்ட நிலை என்று அறியப்படுகிறது. இனப்பெருக்க உறுப்பில் மற்றும் ஆசன வாயைச் சுற்றி வரும் வைரஸினால் உண்டாகும் மருக்கள் சருமத்தின் மேற்பகுதியில் தோன்றும் அடித்தள செல்களில் ஏற்படும் புற்றுநோய் (SUPERFICIAL BASAL CELL CARCINOMA)ஆகியவற்றிற்கு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மருந்தாக உள்ளது.
இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வந்தாலும் அதில் பல சிக்கல்களும் பாதகங்களும் இருந்து வருகின்றன.
அவை -
× நச்சுத்தன்மை வாய்ந்த மருந்தாக இருப்பதால் தொடர்ந்து தினசரி உபயோகிக்க முடியாது. வாரம் இரு நாட்கள் தான் உபயோகிக்க முடியும்
× க்ரீம் வடிவில் வரும் இந்த மருந்தை சில இஞ்ச்கள் மட்டுமே அளவில் உடலில் தேய்க்க முடியும்
அதைத் தாண்டினால் நச்சுத்தன்மை தோன்றும்.
× க்ரீம் வடிவில் வருவதால் நோயாளிகள் தினசரி உபயோகிக்க மறந்து விடுவதும் உண்டு
× இந்த மருந்தைப் பூசிக்கொண்டு வெயிலில் வேலை செய்யக்கூடாது.
மேலும் வியர்வை நீர்பட்டால் பூசிய மருந்து வழிந்தோடும் வாய்ப்பும் இருக்கிறது. இப்போது ஹெமன் பெகேல் சிந்திக்கிறார்.

பால்டிமோரில் உள்ள ஜான் ஹிப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பொது சுகாதாரத்திற்கான ஆராய்ச்சிப் பள்ளியில் ஆய்வுகளைத் தொடங்குகிறார். இமிகுய்மோட் மருந்தை மக்கள் எளிதாக பயன்படுத்தும் அதுவும் தினசரி பயன்படுத்தும் விதமாக மாற்றி அமைக்க வேண்டும். அதற்கு அவர் தினசரி குளியலுக்குப் பயன்படுத்தும் "வழலைக்கட்டியை" ( சோப் பார்) தேர்ந்தெடுக்கிறார். சோப் மூலம் உடலின் பாகங்களில் தேய்த்துக் குளிக்கும் போது நீர் பட்டால் மருந்து வடிந்தோடி விடக்கூடாது. அதற்கு இமிகுய்மோட் மருந்தின் மூலக்கூறுகளை நானோ துகள்களாக மாற்றி கொழுப்புத் திரள்களுக்குள் ஒன்றிணைத்து வழங்கும் போது இமிகுய்மோட் மருந்து நீரால் கழுவப்படாமல் செல்களில் ஒட்டிக் கொண்டு உள்சென்று வேலை செய்வதை எலிகளை வைத்துச் செய்த ஆய்வில் கண்டறிந்து வெற்றி பெற்றுள்ளார்.
இந்த சோப் செய்வதற்கு அரை டாலருக்கும் குறைவாகவே செலவாகிறது என்றும் கூறுகிறார். இத்தகைய கண்டுபிடிப்பை அங்கீகரிக்கும் முகமாக அவருக்கு இளம் ஆராய்ச்சியாளர் விருது வழங்கப்பட்டது. இவரின் இந்த கண்டுபிடிப்பு இன்னும் மெருகேற்றப்பட்டு பயன்படுத்தத் தக்க மருந்தாக மாறுவதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகும். எனினும் ஏழை எளியோருக்கும் எதிர்காலத்தில் பயன்படுத்தத்தக்க எளிய தீர்வை நோக்கி ஆராய்ச்சியை அமைத்து வெற்றி கண்டதால் அவருக்கு இந்தப் பரிசு கிடைத்ததில் உண்மையில் மட்டற்ற மகிழ்ச்சி.

முதல் இடத்தைப் பார்த்து இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை மறந்து விடக்கூடாது. நிகழ்வில் இரண்டாம் இடம் பெற்ற ஒன்பதாம் வகுப்பு பயிலும் சிறுமி , ஸ்ரீப்ரியா கல்பவி , எளியோரும் பயன்படுத்தத்தக்க தோலில் ஒட்டிக் கொண்டால் சுயமாக இயங்கி மருந்தை வழங்கும் சாதனத்தைக் கண்டுபிடித்தார். இதனால் எதிர்காலத்தில் ஊசிக்கும் மாத்திரைக்கும் தேவை இல்லாமல் போகும் வாய்ப்பு உண்டு.
மூன்றாம் இடம் பெற்ற சாரா வாங் , கையில் ஒரு கையுறையை மாட்டிக் கொண்டால் கையின் நடுக்கத்தை வைத்தே அது வலிப்பு நோயின் அறிகுறியா என்பதை அறியுமாறு கையுறையை உருவாக்கியுள்ளார். மூவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள் நமது இல்லங்களில் உள்ள இளம் சிறார் சிறுமியர் ஊக்கம் பெறவும், அவர்களை நாம் ஊக்குவிக்கவும் உந்துதலாக இந்த செய்தி அமைந்தமையால் இதோ இதை எழுதி இங்கு உங்களுடன் பகிர்கிறேன். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications