தினசரி ஒரு முட்டை உடலுக்கு நல்லது ஓகே.. அப்போது 2ஆவது முட்டை என்ன செய்யும்.. ஹார்ட் அட்டாக் வருமா?
சென்னை: நம்மில் பலருக்கும் இருக்கும் மிகப் பெரிய கேள்வி முட்டை சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வருமா என்பது தான்.. அதிலும் குறிப்பாக மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் என்று சொல்லி அதை ஏதோ அணுக்குண்டு போலப் பார்ப்போரும் இருக்கவே செய்கிறார்கள். இது உண்மை தானா முட்டையால் நம் உடலுக்கு நல்லதா இல்லை கெடுதலா.. இதனால் மாரடைப்பிற்கான ஆபத்து அதிகரிக்குமா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பொதுவாக முட்டை என்றாலே பலருக்கும் நினைவில் வரும் முதல் கேள்வி.. முட்டையில் இருந்து முதலில் கோழி வந்ததா இல்லை கோழியில் இருந்து முதலில் முட்டை வந்ததா என்பது தான். இதற்கான பதிலை ஆய்வாளர்கள் ஒரு வழியாகக் கண்டுபிடித்துவிட்டனர்.

முட்டை: அடுத்து இருக்கும் கேள்வி முட்டையால் மாரடைப்பு வருமா என்பது தான். இதற்கான பதிலைப் பார்க்கும் முன்பு, ஒரு முட்டையில் என்ன இருக்கிறது. என்பது குறித்துப் பார்க்கலாம். சராசரியாக ஒரு முட்டையில் 70 கிராம் கலோரி, 6 கிராம் ஹை புரோட்டீன் சத்து, 5-6 கிராம் கொழுப்பு கிடைக்கும். இருக்கிறது. இது தவிர 200 மில்லிகிராம் கொலஸ்ட்ராலும் இருக்கிறது.
சரி முதலில் முட்டை கெடுதல் என்ற பேச்சு எப்படி வந்தது என்பதைப் பார்க்கலாம். மேற்கத்திய நாடுகளில் 1970களில் நடந்த ஆய்வுகளில் மனிதர்கள் எடுத்துக் கொள்ளும் தினசரி கொலஸ்ட்ரால் அளவு 300 மில்லிகிராம் மட்டுமே இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டனர். அதாவது உணவில் இருந்து கிடைக்கும் கொலஸ்ட்ரால் 300 மில்லிகிராமை தாண்டக் கூடாது என்பது அவர்களின் கருத்தாக இருந்தது.
கொலஸ்டிரால்: அதன்படி பார்க்கும் போது ஒரு முட்டையிலேயே 200 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் இருக்கிறது. இரண்டு முட்டை சாப்பிட்டாலே இவர்கள் சொல்லும் லிமிட் தாண்டிவிடும். இதன் காரணமாகவே முட்டை ஆபத்தானது. அதில் கொலஸ்ட்ரால் அதிகம் என்ற பேச்சுகள் அப்போது எழுந்தன. ஆனால், அதன் பிறகு பல ஆய்வுகள் நடத்தப்பட்ட நிலையில், இது உண்மையா என்பது குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் அருண்குமார் விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "உணவில் அதிகம் கொலஸ்ட்ரால் சாப்பிட்டால் இதனால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரித்து, ரத்த பிரச்சினையை அதிகரிக்கும். ஆனால், அதன் பிறகு நடந்த ஆய்வுகளிலேயே உணவில் இருக்கும் கொலஸ்ட்ரால்களால் ரத்த கொலஸ்ட்ரால்களை பெரியளவில் அதிகரிக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டின.
200 மில்லிகிராம்: மனிதனுக்கு ஒரு நாளைக்கு 1500 முதல் 2000 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. நாம் யாருமே அவ்வளவு கொலஸ்ட்ராலை எடுத்துக் கொள்வதில்லை. இது நமது கல்லீரலில் உற்பத்தி ஆவது அப்போது தான் தெரிய வந்தது. நாம் உணவில் எவ்வளவு கொலஸ்ட்ரால் எடுத்துக் கொள்கிறோமா.. அதற்கேற்ப நமது உடல் கொலஸ்ட்ரால் உற்பத்தியைக் குறைத்துக் கொள்வது இந்த ஆய்வில் தெரிய வந்தது.
ஆனால், கரோட்டினாய்டு என்ற ஆன்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. அது உடலில் உறிஞ்சப்படுவதை முட்டை அதிகரிக்கிறது. மேலும், HDL எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் செயல்பாட்டை அதிகரித்துள்ளது. மேலும், முட்டையில் இருக்கும் லுடீன், ஜீயாக்சாந்தின் உள்ளிட்ட சத்துகளும் நமது உடலுக்கு நன்மையையே தருகிறது.
குறையும்: இவை எல்லாம் சேர்ந்து நமது ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும் வாய்ப்பை குறைக்கவே செய்துள்ளது. இதன் காரணமாகவே ஆரோக்கியமான உணவுடன் தினசரி ஒரு முட்டையை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள். இது மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை 10% வரை குறைக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
ஒன்றுக்கும் அதிகமான முட்டை: இது தினசரி ஒரு முட்டை சாப்பிடுவோருக்கு.. அப்போது இரண்டு அல்லது மூன்று முட்டை சாப்பிட்டால் என்ன ஆகும் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இது தொடர்பான ஆய்வு முடிவு அமெரிக்கன் ஜெர்னல் ஆஃப் மெடிசனில் இது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு முட்டைக்கு மேல் சாப்பிட்டாலும் அது உடலுக்கு நல்லது தான் என்றும் மாரடைப்பை ஏற்படுத்தும் வாய்ப்பை அது குறைக்கவே செய்வதாக அதில் கூறப்பட்டுள்ளதாக அருண்குமார் தெரிவித்தார். இதன் மூலம் முட்டை உடலுக்கு நல்லது தான்.. ஹார்ட் அட்டாக் வரும் எனப் பயந்து தவிர்க்கத் தேவையில்லை.












Click it and Unblock the Notifications