தத்துவம், தர்க்க விவாதம்-பாரபட்சமற்ற சபாநாயகர்.. ஜனநாயக செழுமையை பறைசாற்றும் திராவிட மாடல் சட்டசபை!
சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் 2 ஆண்டுகால சிறப்புக்கு ஒவ்வொரு துறையும் மணி மகுடத்து ஆபரணங்களாக ஜொலிக்கின்றன. இதன் உச்சமாக ஜனநாயகத்தின் செழுமையை பறைசாற்றக் கூடிய வகையில் 2 ஆண்டுகால திராவிட மாடல் சர்க்காரின் சட்டசபை நிகழ்வுகள் அமைந்துள்ளன என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்து.
2 ஆண்டுகளுக்கு முன் உச்சரிக்கப்பட்ட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்.. என்கிற குரல் எழுப்பிய நம்பிக்கைப் பேரொலி முன்னெப்போதையும் விட துல்லியமாய் பட்டி தொட்டி எங்கும் மக்கள் வாழ்வில் ஒளிபாய்ச்சிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்தக் குரலின் அங்கமான சட்டசபையிலும் அந்தக் குரல் ஆட்சி செய்கிறது.

தமிழ்நாடு சட்டசபை கூட்டம் என்றாலே ஜால்ராக்களின் சபையாக, அகங்காரத்தை, வன்மத்தைக் காட்டக் கூடிய மண்டபமாக உருமாற்றி வைத்திருந்தது அதிமுக ஆட்சி. மறைந்த ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில் அவலத்தின் உச்சமாகவே சட்டசபை காட்சிகள் இருந்தன. ஒரு எம்.எல்.ஏ அல்லது அமைச்சர் பேச எழுந்தாலே அரை மணிநேரத்துக்கு தாயே! தெய்வமே என புகழாரம் பேசி பேசி சபை மாண்புகளை அவமானப்படுத்துகிற காட்சிகள் மட்டும்தான் இருக்கும். இந்த புகழ்ச்சிகளை சிறிது கூச்சமும் இல்லாமல் புன்னகையும் கெக்களிப்புமாக ஏற்றுக் கொள்கிற முதல்வராகத்தான் இருந்தார் மறைந்த ஜெயலலிதா அம்மையார். அவரது மறைவுக்கு பிந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் எனும் இரு முதல்வர்கள் ஆட்சி செய்தனர். அம்மா வழியிலான ஆட்சி எப்படி இருக்கும்? அதே பாணி! அதே புகழாரம்! அதே வெற்று அறிவிப்புகள்- டாம்பீகம்தான்!
சட்டசபை என்பது விவாதங்கள் நடத்தி மக்கள் நலத் திட்டங்களை ஆராய்ந்து அறிவிக்கக் கூடிய, ஒப்புதல் வழங்கக் கூடிய மாண்பமை இடம். இந்த பண்புகள் கிஞ்சிற்றும் அதிமுக ஆட்சியில் இருந்தது இல்லை. இந்தப் பண்புகள் மட்டுமே நிறைந்து கிடந்தது 2 ஆண்டுகால திமுக ஆட்சியில் என்பது சட்டசபை நிகழ்வுகளை நேரலையாக பார்க்கிற தமிழ்நாட்டு குடிமக்களின் அனுபவம்.
திமுக 2.0 ஆட்சி தொடக்க நிலையிலேயே சட்டசபையில் தமக்கான புகழ்ச்சிகளுக்கு வாய்ப்பூட்டு போட்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். 27.08.2021 சட்டசபை நடவடிக்கைகளைப் பாருங்கள்.. அன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், சட்டமுன்வடிவு மற்றும் கேள்வி நேரத்தில் தலைவர்களை புகழ்ந்து பேச வேண்டாம்; நேரத்தின் அருமை கருதி அமைச்சர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இந்த கட்டளையை பிறப்பிக்கிறேன் என வெளிப்படையாகவே உத்தரவிட்டார். ஆனால் அதற்கு மறுநாள் 28.08.2021 அன்று இதேபோல புகழாரம் ஓயாத போது, நேற்றே அவை நேரத்தை வீண்டிக்க வேண்டாம் என்று கூறினேன். எதையும் லிமிட் ஆக வைத்துக்கொள்ளுங்கள். நேற்றே இது தொடர்பாக கட்டளையிட்டேன் என மீண்டும் எச்சரித்தார். ஆனாலும் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பதைப் போல சட்டசபையில் சில புகழாரங்கள் சூட்டப்படும் போது கூட முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்து கண்டித்து வருகின்றனர். சபை முன்னவரான மூத்த அமைச்சர் துரைமுருகனும் அண்மையில் கடுமையாகவே இது தொடர்பாக கூறியிருந்தார். இதனால் சட்டசபையில் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் தங்களது பொன்னான நேரத்தை வீணாக்காமல் கோரிக்கைகளை முன்வைப்பது, கேள்விகளை கேட்பது என தொடருகிறது. இது ஜனநாயகத்தை ஆரோக்கியமான பாதையில் திமுக அரசாங்கம் நிலை நிறுத்தி வைத்திருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.

அதேபோல, அதிமுக ஆட்சிக் காலத்தில் குறைபாடுகளை, அதிமுக அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களை ஏனோதானோ எனக் கூறுவதைத் தவிர்த்து ஆதாரங்கள், புள்ளி விவரங்கள் அடிப்படையில் மட்டுமே திமுக அமைச்சர்கள் அடுக்குகிற பாணி அறிவுத்திறன் மிக்கது. உதாரணமாக கடந்த 23.03.2022 அன்று தமிழ்நாடு சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 537 அறிவிப்புகளில், 9,741 கோடி ரூபாய் திட்ட மதிப்பிலான 20 அறிவிப்புகளுக்கு, கடந்த ஆட்சிக்காலத்தில் அதற்குரிய அரசாணைகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. 537 அறிவிப்புகளில் 491 அறிவிப்புகளுக்கு மட்டுமே அரசாணை மற்றும் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில், 76,619 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 143 அறிவிப்புகளுக்கு அதற்குரிய அரசாணை மற்றும் அனுமதி வழங்கப்பட்டு, நிதி எதுவும் விடுவிக்கப்படாமலும், பணிகள் துவங்கப்படாமலும் உள்ளன எனக் கூறியதுடன், அத்தனை விவரங்களையும் பட்டியல் போட்டு அடுக்கினார் . இத்தகைய ஆரோக்கியமான தர்க்க ரீதியான ஒரு விவாதம் என்பது தமிழ்நாடு சட்டசபையில் திமுக ஆட்சிக் காலங்களில் மட்டுமே பார்க்கக் கூடியதாக இருந்து வருகிறது.
இதற்கு அப்பால் அதிமுக ஆட்சிக் கால சபாநாயகர், திமுக ஆட்சிக் கால சபாநயகர் ஒப்பீடு என்பது மிக முக்கியமானது. அதிமுக ஆட்சிக் காலங்களில்தான் சபாநாயகர்கள் வானளவியாக அதிகாரங்கள் கொண்டவர்களாக தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டனர். ஆனால் திமுக ஆட்சிக் காலத்து சபாநாயகர்கள் அந்த இருக்கைக்கு பெருமதிப்பு செய்யக் கூடிய பெருந்தகையாளர்கள் என்பதை காலந்தோறும் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் சபாநாயகர் அப்பாவு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பெரும் பாராட்டுக்குரியவையாக இருக்கின்றன.

தமிழ்நாடு சட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்களாக இருந்தாலும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களாக இருந்தாலும் அமைச்சர்களாக இருந்தாலும் சபைக்கு ஒவ்வாத வார்த்தைகளை அனுமதிப்பது கிடையாது என்பதில் ரொம்பவே கறாராக இருப்பவர் சபாநாயகர் அப்பாவு. இதனால் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் கூட வெளிப்படையாகவே சட்டசபையில் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக் கால சட்டசபை, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வரலாற்று வழிகாட்டியாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது. மாநில உரிமைகளுக்கு எப்படி எல்லாம் குரல் கொடுக்க வேண்டும்; அரசியல் சாசன சிக்கல்கள் இல்லாமல் ஆளுநருக்கு எதிரான நடவடிக்கைகளை எப்படி கையில் எடுக்க வேண்டும் என்பதையெல்லாம் ஒரு அரசியல் அறிவியல் வகுப்பு எடுப்பது போல இந்திய தேசத்துக்கே பாடம் நடத்துகிறது திராவிட மாடல் சர்க்கார் நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசின் சட்டசபை!












Click it and Unblock the Notifications