ரூ.40 ஆயிரம் வரை மாதசம்பளம்.. தமிழகத்திலேயே வேலை செய்ய சூப்பர் வாய்ப்பு! அழைக்கும் பெல் நிறுவனம்
சென்னை: மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் காலியாக உள்ள 517 டிரெய்னி என்ஜினீயர் I பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL or Bharat Electronics Limited) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு நாட்டின் பல இடங்களில் இயங்கி வருகிறது. இந்தியாவின் பல்வேறு துறைகளுக்கு தேவையான எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை இந்த நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.

குறிப்பாக தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், டிராபிக் சிக்னல்கள், ரோடார், செமி கண்டக்டர்ஸ் உள்பட மொத்தம் 250க்கும் அதிகமான பொருட்களை இந்த பெல் நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது. இந்நிலையில் தான் பெல் நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி என்ஜினீயர் I பணிக்கு 517 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இடஒதுக்கீடு அடிப்படையில் பார்த்தால் பொதுப்பிரிவினர் 210 பேர், ஓபிசி பிரிவினர் 39 பேர், இடபிள்யூஎஸ் பிரிவினர் 52 பேர், எஸ்சி பிரிவினர் 77 பேர், எஸ்டி பிரிவினர் 39 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிராந்தியம் வாரியாக பார்த்தால் மத்திய மாநிலங்களாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில் 68 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். கிழக்கு பிராந்தியத்தை எடுத்து கொண்டால் பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் 86 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
மேற்கு பிராந்திய மாநிலங்களான கோவா, குஜராத், மகாராஷ்டிராவில் 139 பேரும், வடக்கு பிராந்திய மாநிலங்களான டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட்டில் 78 பேர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். மேலும் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோராம், நாகலாந்து, திரிபுரா, மேகாலயாவில் 15 பேரும், தென்மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, பாண்டிசேரி, தமிழ்நாட்டில் 131 பேர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: டிரெய்னி என்ஜினீயர் I பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக் முடித்திருந்தால் 28 வயதுக்குள்ளும், எம்இ, எம்டெக் படித்திருந்தால் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 வயது வரையும் தளர்வு என்பது வழங்கப்படும். வயது வரம்பு என்பது 01.02.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
கல்வி தகுதி: இந்த பணிக்கு பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேஷன், டெலிகம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். பொது, ஓபிசி, இடபிள்யூஎஸ் பிரிவினர் என்றால் இந்த படிப்புகளை 55 சதவீத மதிப்பெண்ணுடன் முடித்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி பிரிவின் என்றால் பாஸ் செய்திருந்தால் போதும்.
மாத சம்பளம்: இந்த பணி என்பது தற்காலிகமானது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் 3 ஆண்டு வரை பணியமர்த்தப்படுவார்கள். டிரெய்னி என்ஜினீயர் I பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு முதல் ஆண்டு ரூ.30 ஆயிரம், 2வது ஆண்டு ரூ.35 ஆயிரம், 3வது ஆண்டு ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://bel-india.in/ என்ற இணையதளம் மூலம் மார்ச் மாதம் 13ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக டிரெய்னி என்ஜினீயர் I பணிக்கு கட்டணமாக ரூ.177 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது இல்லை. விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்..
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
https://bel-india.in/Documentviews.aspx?fileName=Final%20TE%20Web%20Advt%2028022024%20HLS%20and%20SCB-27-02-24.pdf












Click it and Unblock the Notifications