காயத்தில் உப்பை தடவாதீங்க.. மோடி சொன்ன பொய்! ரிசர்வ் வங்கி டேட்டா தவறு.. மல்லிகார்ஜுன கார்கே காட்டம்!
டெல்லி: வேலை வாய்ப்புகள் குறித்து ஒன்றன்பின் ஒன்றாக பிரதமர் மோடி தவறான தகவல்களை கூறி வருகிறார் என்றும், இந்த தகவல்கள் இளைஞர்களின் காயங்களில் உப்பை கொண்டு தேய்ப்பது போன்றதாகும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். அதே நேரம் ரிசர்வ் வங்கியின் தரவுகளையும் கார்கே கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார்.
இந்தியா சர்வதேச அளவில் வளர்ந்து வரும் நாடு. பொதுவாக வளரும் நாடுகளில் வேலையின்மை இருக்கக்கூடாது என்றும், அப்படி இருந்தால் அது அந்நாட்டின் வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால், இந்தியாவில் சமீப காலமாக வேலையின்மை பிரச்னை தொடர்ந்து அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது சில சம்பவங்கள் நடந்து வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குஜராத்தில் ஒரு நிறுவனத்தில் வெறும் 10 காலி பணியிடங்களுக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அந்நிறுவனம் முன்பு இன்டர்வியூவுக்கு குவிந்தது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்து. பாஜக குஜராத் மாடலைத்தான் முன்னிறுத்தி வந்தது, இப்படி இருக்கையில் அப்பேர்ப்பட்ட குஜராத்திலேயே வேலையின்மை தலைவிரித்து ஆடுகிறது என காங்கிரஸ் விமர்சித்திருந்தது.
இது நடந்து சில நாட்களில் மும்பயைில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்தில், விமான பயணிகளின் உடமைகளை ஏற்றி இறக்கும் சுமை தூக்கும் பணிக்கு ஆட்கள் எடுப்பதாக அறிவிக்கப்பட்டது. மொத்த காலிப்பணியிடங்கள் 2,216. பணிக்கான ஒப்பந்தம் 3 ஆண்டுகள். சம்பளம் ரூ.20,000லிருந்து ரூ.25,000 வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சேர விருப்பம் இருப்பவர்கள் ஜூலை 16ம் தேதி காலை மும்பை அலுவலகத்திற்கு நேர்காணலுக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பையடுத்து வெறும் 2,216 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 25,000க்கும் அதிகமான இளைஞர்கள் மும்பை அலுவலகத்திற்கு முன் குவிந்திருக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் பட்டதாரி இளைஞர்கள். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக ஷேராகியிருந்தது.
இப்படியாக வேலையின்மை குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில், வேலை வாய்ப்புகள் குறித்து மோடி ஒன்றன் பின் ஒன்றாக தவறான தகவல்களை கூறி, இளைஞர்களின் காயங்கள் மீது உப்பை தடவி வருகிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.
இது குறித்து x தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "வேலை வாய்ப்பு குறித்து ரிசர்வ் வங்கியின் சந்தேகத்திற்குரிய டேட்டா குறித்து உங்களிடம் மூன்று கேள்விகளை கேட்க விரும்புகிறோம்.
முதல் கேள்வி, 10 ஆண்டுகளில் 20 கோடி வேலை வாய்ப்பு என்று வாக்குறுதி அளித்து 12 கோடிக்கும் அதிகமான வேலைகளை பறித்தது ஏன்?
PLFS கணக்கெடுப்பு ஆதாரங்களின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டிருந்தது. அதாவது, கடந்த 2012 மற்றும் 2019க்கு இடையில் 2.1 கோடி வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்பதுதான் அது. ஆனால், சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) அறிக்கை இந்த அதிகரிப்பு 2 லட்சம் மட்டுமே என்று கூறுகிறது. ILOயும் PLFS கணக்கெடுப்பு ஆதரங்களின் அடிப்படையில்தான் கூறியிருக்கிறது. அப்படியெனில் இரண்டில் எது உண்மை?
இரண்டாவது கேள்வி, ரிசர்வ் வங்கி மேற்கோள் காட்டும் அரசாங்க PLFS தரவுகளின்படி, 37% 'வேலை செய்யும்' பெண்களுக்கு ஊதியம் இல்லை (unpaid) என்பது உண்மையல்லவா? கிராமப்புறங்களில், இந்த எண்ணிக்கை 43% என்ற பயங்கரமான அளவில் உள்ளது.
மூன்றாவது கேள்வி, அரசாங்கத்தின் ஒருங்கிணைக்கப்படாத துறை நிறுவனங்களின் (ASUSE) ஆண்டு ஆய்வின்படி, பணமதிப்பு நீக்கம், குறைபாடுகளை கொண்ட ஜிஎஸ்டி மற்றும் கோவிட்-19 ஆகியவற்றின் தாக்கங்களால் முறைசாரா உற்பத்தித் துறை 7 ஆண்டுகளில் 54 லட்சம் வேலைகளை இழந்துள்ளது என்பது உண்மையல்லவா?
ஒருவேளை ரிசர்வ் வங்கியின் டேட்டாதான் உண்மை எனில், கோவிட்-19 காரணமாக தங்கள் கிராமங்களுக்குச் சென்ற தொழிற்சாலை தொழிலாளர்கள், ஆசிரியர்கள், சிறு கடைக்காரர்கள் மீண்டும் அதே பணிக்கு திரும்ப முடியாமல் கிராமங்களில் விவசாயக் கூலிகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். 2019-20 முதல் 2022-23 வரை இப்படி தங்கள் பழைய வேலைக்கு திரும்பாதவர்களாக சுமார் 2.3 கோடி பேர் இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிக்கை காட்டுகிறது.
இப்படி இருக்கையில், ரிசர்வ் வங்கி 2023-2024 டேட்டாவை எப்படி வெளியிட்டது என்று தெரியவில்லை. மோடி ஜி, ரிசர்வ் வங்கியைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலமும், போலியான அறிக்கைகளை வெளியிடுவதன் மூலமும், ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை மறைப்பதை நிறுத்துங்கள்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications