ECR உயர்மட்ட சாலையில் என்ன நடக்கிறது? சென்னையில் ரூ. 2100 கோடி திட்டத்தில் திருத்தம்.. பின்னணி என்ன?
சென்னை: சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான உயர்மட்ட மேம்பாலத் திட்டத்தில், சுமார் 600 கோடி ரூபாய் செலவை குறைக்கும் வகையில் கட்டுமான மாற்றங்களை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஸ்பெஷல் டெக்னிக்கல் டீமை அமைக்க அமைச்சரவை கூட்டத்திலும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, திட்ட மதிப்பீட்டைச் சீரமைக்க ஒப்பந்ததாரருடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்...!!
திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 13.3 கிலோமீட்டர் தூரத்திற்கு இசிஆர் சாலையில் அமைக்கப்படவிருந்த உயர்மட்ட மேம்பாலத் திட்டத்தின் மதிப்பீட்டை ரூ.2100 கோடியிலிருந்து ரூ.1500 கோடியாகக் குறைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.. இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் ஆலோசிக்கப்பட்டது.

தவெக அமைச்சரவை கூட்டம்
கடந்த ஆட்சிக் காலத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்படும் டிராபிக்கை குறைக்கவும், சுற்றுலா மற்றும் வர்த்தகப் போக்குவரத்தை விரைவுபடுத்தவும் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.
திருவான்மியூரில் தொடங்கி உத்தண்டி வரை நீளும் இந்த 13.3 கிலோமீட்டர் வழித்தடத்தில், வாகனப் போக்குவரத்தை எளிதாக்க 4 வழி உயர்மட்டச் சாலை அமைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. இசிஆர் சாலையில் அதிகரித்து வரும் வாகன நெரிசலுக்கு தீர்வாக அமையும் என்று இந்த மேம்பாலத் திட்டம் அப்போது முன்மொழியப்பட்டது.
இசிஆர் உயர்மட்ட பாலம்
இதற்கான ஒப்பந்தமும் கடந்த ஆட்சியில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டது. இருந்தாலும், ஒப்பந்தம் வழங்கப்பட்ட நடைமுறையில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக புகார்கள் கிளம்பின... தவெக அரசு பதவியேற்ற பிறகு, திட்டத்தின் நம்பகத்தன்மை மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்துத் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காகவே தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TNSHA) சார்பில், திட்டச் செலவை ஆய்வு செய்வதற்கெனப் பிரத்யேக தொழில்நுட்பக் குழு ஒன்றை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த தொழில்நுட்பக் குழுவானது மேம்பாலத்தின் வரைபடம், தூண்களின் வடிவமைப்பு, அடித்தளத்தின் உறுதித்தன்மை, சாலையின் அகலம் மற்றும் கட்டுமானப் பொருட்களின் தரம் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்ய உள்ளது.
செலவைக் குறைக்க அரசு திட்டம்?
திட்டத்தின் வடிவமைப்பு, தேவைக்கும் அதிகமாகவே இருப்பதாக கருதப்படுவதால், தூண்களின் எண்ணிக்கை, அடித்தளத்திற்கான செலவு மற்றும் கட்டுமானப் பொருட்களின் தரம் போன்றவற்றை தற்போதைய தேவைக்கேற்ப மாற்றியமைப்பதன் மூலம், திட்டச் செலவில் 25 முதல் 30 சதவீதம் வரை, அதாவது சுமார் ரூ.600 கோடியைக் குறைக்க முடியும் என அதிகாரிகள் இப்போது கணித்து சொல்கிறார்கள்.
இந்த செலவு குறைப்பு மாற்றங்களை ஏற்க ஒப்பந்ததாரரிடம் அரசு பேச்சுவார்த்தையும் நடத்த போவதாக தெரிகிறது.. தொழில்நுட்பக் குழு பரிந்துரைக்கும் மாற்றங்களுக்கு ஒப்பந்ததாரர் உடன்பட்டால் மட்டுமே, இந்த திட்டம் தற்போதைய ஒப்பந்த அடிப்படையில் தொடரும்.
புதிய டெண்டர்?
ஒருவேளை கட்டுமான விவரக்குறிப்புகளில் கொண்டுவரப்படும் இந்த மாற்றங்களை ஏற்க ஒப்பந்ததாரர் மறுத்துவிட்டால், இந்த ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்துவிட்டு, புதிய டெண்டரை கோர தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது, சென்னையில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைப்பதில் முறைகேடுகள் நடந்திருப்பதை முதலமைச்சர் ஜோசப் விஜய் சுட்டிக்காட்டியிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே, இந்த திட்டம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திட்டச் செலவைக் குறைப்பதே அரசின் நோக்கம் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்.. எனவே, ஒப்பந்ததாரரின் பதிலைப் பொறுத்தே திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....!!












Click it and Unblock the Notifications