1.5 லட்சம் மாணவர்களுக்கு கல்விக் கடன்.. பிணை விதியிலும் மாற்றம்.. தமிழக அரசின் புதிய திட்டம்
சென்னை: ரூ.4.5 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் பெற பிணை கேட்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும், உயர்கல்வித் துறையில் லஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்க தனி புகார் போர்டல் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்தார்.
சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்துகொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், கடந்த காலங்களில் 2004 முதல் 2014 வரை மாணவர்களுக்கு தாராளமாக கல்விக் கடன் கிடைத்தது. கடந்த ஆண்டில் 1 லட்சத்து 2 ஆயிரம் மாணவர்களுக்கு கிடைத்த கல்விக் கடனானது, நடப்பு கல்வி ஆண்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு கல்விக் கடன் கிடைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் தற்போது முடிவெடுத்துள்ளார்.

அந்த வகையில், இந்த ஆண்டு 1.5 லட்சம் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கடன் வழங்க 3 ஆயிரம் கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ. 4.5 லட்சத்தைவிட அதிக தொகையில் கல்வி கடன் கேட்கும்போது பிணை கேட்கிறார்கள். இதை மாற்றி முதல்வர் விஜய் விரைவில் புதிய திட்டத்தை அறிவிக்க உள்ளார்.
தகுதியுள்ள மாணவர்களுக்கு படிப்பதற்கான தடை இருக்கவே கூடாது. அதற்கு மாநில அரசு முழு பொறுப்பேற்று வங்கிகளை முறைப்படுத்தி கல்விக் கடன் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்து இன்னும் 60 நாள்கள்கூட ஆகவில்லை. உயர்கல்வித் துறையில் உள்ள பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் படிப்படியாக சரி செய்யப்படும்.
உயர்கல்வித் துறையில் ஊழலே இனி நடைபெறாது. உயர்கல்வித் துறையில் பணி நியமனம், பணி மாறுதல், பதவி உயர்வு என எங்கேயும் லஞ்சம் ஊழல் நடைபெறாது. உயர்கல்வித் துறையில் இனி லஞ்சம் இருக்காது. இந்த துறையில் யாரேனும் லஞ்சம் கேட்டாலோ, யாரேனும் லஞ்சம் வாங்கினானோ உடனே எங்களிடம் தெரிவிக்கலாம்.
இதற்காக புகார் அளிக்கும் வகையில் உயர்கல்வித் துறைக்கென தனி போர்டல் விரைவில் அறிவிக்கப்படும். அதில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.












Click it and Unblock the Notifications