Government jobs: ”தேர்வுக்களம்” போட்டித் தேர்வுகளுக்கு ரெடி ஆகுறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் ஆப்
சென்னை: அரசு பணிகளுக்கு (Government jobs) தயாராகும் இளைஞர்களுக்கு சூப்பரான செயலி ஒன்றை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. தேர்வுக்களம் என்ற பெயரில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு வசதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த செயலியில் அனைத்து காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள், ஆன்லைன் வழியே விண்ணப்பித்தல், நுழைவுச்சீட்டு பதிவிறக்கம், தேர்வு முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.
தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு வேலை என்ற கனவுடன் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளைஞர்களுக்காக தேர்வுக்களம் என்ற செயலியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

அரசு பணிக்காக தேர்வுக்களம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (USRB), ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MSRB) போன்ற தேர்வு முகமைகள் மூலம் செய்யப்படும் "பணியாளர்கள் தேர்வுகள்" தொடர்பான செயல்முறைகளை எளிமைப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ள "தேர்வுக்களம்" எனும் ஒருங்கிணைந்த கைபேசி செயலியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
இலவச பயிற்சி வகுப்புகள்
இந்த செயலி மூலம் அனைத்து காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள், ஆன்லைன் வழியே விண்ணப்பித்தல், நுழைவுச்சீட்டு பதிவிறக்கம், தேர்வு முடிவுகள், செய்தி வெளியீடுகள், தேர்வுக்கான பாடக்குறிப்புகள், முந்தைய போட்டித் தேர்வுகளின் விடைகளுடன் கூடிய வினாத்தாள்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள இயலும்.
என்னென்ன வசதிகள் இருக்கின்றன
மேலும், அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளின் காணொலிகள் மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகள் உள்ளிட்ட செய்தித்தாள்களில் அளிக்கப்படும் அறிவிப்புகள் ஆகியவைகளை இந்த செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம்.
அத்துடன், குறித்த நேரத்தில், நுழைவுச்சீட்டுகள், தேர்வு முடிவுகள் மற்றும் முக்கிய தகவல்கள் நேரடியாக ஆர்வலர்களின் கைபேசிக்கு உடனடியாக அறிவிக்கப்படும் வண்ணம் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தத் தகவலும் தவறவிடப்படாமல் தேர்வர்கள் சிறப்பாகவும், திறமையாகவும் தேர்வுக்கான தயாரிப்பை குறித்த நேரத்தில் மேற்கொள்ள முடியும்.
எப்படி இன்ஸ்டால் செய்வது
எனவே, பல செயலிகள், பல வலைத்தளங்கள், பல உள்நுழைவுகள் போன்ற சிக்கலான பயன்பாட்டினை குறைத்து, ஒரே செயலியில் அனைத்து சேவைகளையும் ஒரே தளத்தில் பெறும் வசதியை "தேர்வுக்களம்" செயலி வழங்குகிறது.
ஆர்வலர்கள் Play Store அல்லது App Store மூலம் தேர்வுக்களம் செயலியை பதிவிறக்கம் செய்து, பதிவு செய்து, உள்நுழைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பது மிக எளிதான நடைமுறையாகிவிடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டித்தேர்வர்களுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்படுள்ளது.
தமிழக அரசு சார்பில் குரூப் - 4, குரூப் 2, ஆர்.ஆர்.பி குரூப் டி, வங்கித் தேர்வுகள் போன்றவற்றிற்கு தயாராகும் வகையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் இலவச பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது. இதேபோன்று ஆன்லைன் மூலமாகவும் இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications