மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களில் ரயில் நிலையத்தில் சூப்பர் வேலை
மதுரை : ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி எந்திரங்கள் மூலம் டிக்கெட் கொடுக்கும் உதவியாளர் பணிக்கு பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. மதுரை, திண்டுக்கல், பழனி, காரைக்குடி, ராமேசுவரம், திருச்செந்தூர் உள்பட பல்வேறு ரயில் நிலையங்களில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் பயணம் செய்ய, முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் ரயில்நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு அலுவலகங்களில் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் நவீன தொழில்நுட்பங்கள் காரணமாக தானியங்கி எந்திரங்கள், செல்போன் செயலிகள் ஆகியவற்றின் மூலம் ரயில் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.

இந்தநிலையில், தமிழ்நாட்டின் பெரும்பாலான ரயில் நிலையங்களில் தானியங்கி எந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுகள் தருவதற்கு உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இந்த பணிகளில் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர்கள் மட்டுமே முன்பு செய்து வந்தார்கள். தற்போது தானியங்கி எந்திரங்களில் உதவியாளர்களாக பணியாற்ற பொதுமக்களுக்கும் வாய்ப்பு தருவதற்கு ரயில்வே நிர்வாகம் அதிரடியாக முடிவெடுத்துள்ளது.
இதன் படி புதிதாக நியமிக்கப்பட்ட 14 உதவியாளர்கள் மதுரை, நெல்லை, திருச்செந்தூர், தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், போடிநாயக்கனூர், புனலூர் ஆகிய ரயில்நிலையங்களில் வேலை செய்து வருகிறார்கள். இன்னும் புதிதாக கல்லிடைக்குறிச்சி, கோவில்பட்டி, விருதுநகர், சங்கரன்கோவில், புதுக்கோட்டை, சாத்தூர், செங்கோட்டை, மதுரை, திருச்செந்தூர், தூத்துக்குடி, திண்டுக்கல், பழனி, காரைக்குடி, ராமேசுவரம், ராமநாதபுரம், மானாமதுரை, போடிநாயக்கனூர் மற்றும் புனலூர் ரயில்நிலையங்களுக்கு உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த உதவியாளர்களுக்கு, அவரது முயற்சியால் விற்கப்பட்ட மொத்த பயணச்சீட்டு கட்டணத்தில் 3 சதவீதம் கமிஷனாக வழங்கப்படும். இந்த உதவியாளர்கள் ஓராண்டு காலத்திற்கு பணியமர்த்தப்படுவார்கள். இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் மேல் விவரங்களை https://sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம். https://sr.indianrailways.gov.in இணையதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோடு பூர்த்தி செய்து, அதனை ஜூன் 11-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
